Header Ads



ரஷ்யாவுக்கு ஒபாமா பகிரங்க எச்சரிக்கை

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் தனது நிலையை ரஷ்யா மாற்றிக்கொள்ளாவிட்டால், அதை பார்த்துக்கொண்டு அமெரிக்கா சும்மா இருக்காது என அதிபர் ஒபாமா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைன் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 298 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில், இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, மலேசிய விமானம் ஏவுகணைகளைக் கொண்டு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த விமான விபத்தில் அமெரிக்கர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். விமான விபத்து தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் மற்றும் நெதர்லாந்து நாட்டு தலைவர்களுடன் விவாதித்தேன். ரஷ்ய ஆதரவு பயங்கரவாதிகளே விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக சர்வதேச அளவிலான விசாரணை தேவை. இந்த விபத்து தொடர்பான விசாரணையில் அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ., உதவும். 

கிழக்கு உக்ரைனில் பதட்டத்தை தடுக்க ரஷ்யா தவறிவிட்டது. உக்ரைன் நாட்டின் இறையாண்மையில் ரஷ்யா தலையிடுகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவது மிக அவசியம். பயங்கரவாதிகளுக்கு ரஷ்யா பயிற்சியும், ஆயுதங்களும் அளிக்கிறது. ரஷ்யாவின் ஆதரவு இல்லாமல் பயங்கரவாதிகள் இயங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை. ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதியிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரும் நிலையை ரஷ்யா மாற்றிக் கொள்ளாவிட்டால், அமெரிக்கா அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.