Header Ads



மலேசிய விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியிருக்க வாய்ப்பு: அமெரிக்கா

உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய எல்லையில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த 298 பேரும் பலியாகினர். அந்த விமானம் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது ‘பக்’ என்ற ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை ரஷியா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைனும், அமெரிக்காவும் குற்றம் சாட்டின. அவர்களுக்கு ரஷியா வழங்கிய எஸ்.ஏ–11 என்கிற ‘பக்’ ஏவுகணை மற்றும் அதிநவீன ஆயுதங்களால் தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், கிளர்ச்சியாளர்களுக்கு ரஷியா போர் பயிற்சி அளித்துள்ளது என்றும் அமெரிக்க உளவுத் துறை திட்டவட்டமாக தெரிவித்தது.

ஆனால், இதை ரஷியாவும், உக்ரைன் கிளர்ச்சியாளர்களும் மறுத்து வந்தனர். அதிஉயரமாக சென்று தாக்கும் ஏவுகணைகள் தங்களிடம் இல்லை என தெரிவித்தனர். இதற்கிடையே இந்த விவகாரத்தில் திருப்பமாக கிளர்ச்சியாளர்கள் மலேசிய பயணிகள் விமானத்தை வேண்டுமென்றே சுட்டு வீழ்த்தவில்லை.

உக்ரைனின் சரக்கு போக்குவரத்து விமானம் என நினைத்து அதே போன்றுள்ள மலேசிய விமானத்தை தவறுதலாக சுட்டுள்ளனர். அதன்பிறகுதான் அது பயணிகள் விமானம் என தெரியவந்துள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரிகள் சிலர் 5 நாட்களுக்கு பிறகு கூறியுள்ளனர்.

விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன்பு ரஷிய ஆதரவு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் பேசிய வயர்லஸ் உரையாடல்கள் அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்துள்ளன. அதை வைத்து நடத்திய ஆய்வின் போது தான் அவர்கள் தவறுதலாக மலேசிய பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியிருப்பது தெரியவந்துள்ளது.

அதற்காக இந்த கொடூர சம்பவத்தை ஏற்க முடியாது. ஏனெனில் அது பயணிகள் விமானமாகும். அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து விட்டனர் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

உக்ரைனுக்கும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அப்போது உக்ரைனின் பல சரக்கு போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.