Header Ads



பௌத்த - சிங்கள அரச பிரச்சார வன்முறைகளும், தீர்வு தேடும் முஸ்லிம்களின் ஊடகக் கருவிகளும்...!

(நவாஸ் சௌபி)

பௌத்தத்தைப் பாதுகாப்பதாகப் பிரச்சாரம் செய்யும் பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் அதற்கு எதிரான சக்தியாக முஸ்லிம் தீவிரவாதம் என்ற ஒரு கோஷத்தைக் கண்டெடுத்திருக்கிறது. இலங்கை முஸ்லிம்களிடத்தில்  இல்லாத ஒரு தீவிரவாதத்தை பொதுபல சேனா தனது பிரச்சாரத்தின் மூலம் உருவாக்கி முஸ்லிம்களை அழித்தொழிக்கும் வன்முறை அரசியலை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. இதன் உச்சப் போக்கின் ஆரம்பமாக அளுத்கம பேருவளை தர்காநகர் அழித்தொழிப்பு; வெளிப்பட்டிருக்கிறது.

இச்சம்பவம் குறித்து எதிர்பார்க்கப்படும் தீர்வுகள் எதுவும் இன்னும் முறையாக எட்டப்படாமல் அது நீதியிலிருந்தும் சட்டத்திலிருந்தும் காப்பாற்றப்பட்டுக்கொண்டு செல்கிறது. அரசாங்கத்தின் மறைகரம் இதற்கு துணைபோவதாக பிரச்சாரங்கள் பெரிதுபடுத்தியும் அதன் அளவுக்கு அதற்கான தீர்வும் தாக்கமும் இன்னும் அரச பக்கமிருந்து உறுதியாகக் கிடைக்கவில்லை. 

கடந்த ஜுலை 10 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் எதிர் கட்சித் தலைவர் ரணில் இதனை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். 

'அசம்பாவிதங்களால் மன விரக்தியடைந்த இதயங்களை ஆறுதல்படுத்த எவ்விதமான திட்டங்களையும் அரசு முன்னெடுப்பதை காண முடியவில்லை. நஷ்ட ஈடு வழங்குவதிலும் அசமந்த போக்கையே கடைப்பிடிப்பதாக'  அவர் தெரிவித்தார் 

இந்நிலையில், இதில் அடிபட்டவர்கள்தான் குற்றவாளிகள் என்றும் பாதிக்கப்பட்டவர்கள்தான் தண்டனைக்குரியவர்கள் என்றும்; உயர் மட்ட அரசியல்வாதிகள் முதல் அடிமட்ட கடும்போக்கு பௌத்த சிங்கள வாதிகள்வரை பாhரளுமன்றத்தினுள்ளும் வெளியிலும் பிரச்சாரம் செய்து, ஊடகப்படுத்தி மரத்தால் விழுந்த முஸ்லிம்களை மாடாக மிதிக்கும் கொடுமையும் அரங்கேறி வருகிறது.

அளுத்கம சம்பவம் நடைபெற்று மறுநாள் திங்கட்கிழமை அதன் சூத்திரதாரியாக காணப்படும் ஞானசாரத் தேரர் கிருலப்பனையிலுள்ள போதி பௌத்த நிலையத்தில் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறிய கருத்து 

'12 ஆம் திகதி பொசன் போயா தினத்தன்று களுத்துறை பிரிவுக்கு பொறுப்பான பௌத்த பிக்கு ஒருவர் மத போதனைகளை  வழங்குவதற்காக அளுத்கம பகுதிக்குச் சென்றபோது அப்பிக்குவுக்கு இடையூறு விடுத்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர் அப்பிக்கு சென்ற வாகனத்தின் சாரதியையும் தாக்கியதோடு நின்றுவிடாமல் பிரச்சினையை தடுக்க வந்த பிக்குவினையும் தாக்கியுள்ளனர். இலங்கையில் பிக்கு ஒருவரை தாக்குவதென்பது சாதாரண விடயமல்ல இச்சம்பவமே அளுத்கமவில் ஏற்பட்ட பதற்ற நிலைக்கு பிரதான காரணமாகும்' 

இவ்வாறு ஞானசாரத் தேரர் குறிப்பிடும் பிரதான காரணம் உண்மைக்குப் புறம்பானது, இது பழைய கதை, இதற்குப் பல பதில்கள் கூறப்பட்டிருக்கிறது என்று கூறினாலும் இதில் குறிப்பிட்ட தேரர் தாக்கப்படவில்லை என்பதை இன்னும் முஸ்லிம் தரப்பிலிருந்து நிரூபிக்க முடியாதபடி பௌத்த சிங்கள அரச பிரச்சாரங்கள் அதற்கான பதிவை வலுப்படுத்தியே வைத்திருக்கிறது. 

பெரும்பான்மையான பௌத்த சிங்கள பேரினவாத ஊடகங்கள் இந்தக் காரணத்தின் அடிப்படையிலேயே அளுத்கம அழித்தொழிப்பு நடைபெற்றதாக தொடர்ந்தும் அந்தப் பதிவை நினைவுபடுத்தி மீள்பதிப்புச் செய்துகொண்டே இருக்கின்றன. இதுவே குறிப்பிட்ட சம்பவத்தை அவர்கள் திசை திருப்பும் பிரச்சார அரசியலும் கூட. இதற்கு உதாணமாக 

இம்மாதம் 09 ஆம் திகதி புதன் கிழமை வெளியான சிலோன் டுடே பத்திரிகையின் 6 பக்கம் அநீதியை அரங்கேற்றிய ஒரு பக்கமாக 23 பௌத்த அமைப்புக்களின் அறிக்கையாக அளுத்கம பேருவளை சம்பவங்கள் உண்மையான கதை என்ற தலைப்பில் முஸ்லிம்கள் மீது அபான்டமாக பழிசுமத்தப்பட்டிருக்கிறது. 

முஸ்லிம்களே முதலில் பத்திராஜகொட தேரரை தாக்கியதாகவும் அதற்கு பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்காமையால் அதற்காக பொதுபலசேனாவும் ராவண பலயவும் இணைந்து 15.06.2014 அளுத்கமையில் நடத்திய பொதுகூட்டத்தை முடித்து கலைந்து சென்றவர்களுக்கு தர்கா நகர் பள்ளிவாசலில் வைத்து முஸ்லிம்கள் ஒரு தேரருக்கு கல்லெரிந்து அதில் அவர் மயங்கி விழுந்ததாகவும் அதற்கும் பொலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சிங்களவர்களின் வீடுகளும் வெலிப்பண்னையில் சிங்களவர்களது கடைகள் சேதமாக்கப்பட்டதாகவும் அப்பக்கம் உண்மைக்கு சமாதிகட்டியிருக்கிறது. 

ஊடகங்களுக்கு அப்பால் இப்பிரச்சாரத்திற்கு துணைபேகும் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் அளுத்கம அழித்தொழிப்பின் சூத்திரதாரிகள் முஸ்லிம்கள்தான் என்பதை வலியுறுத்திப் பதிவு செய்துமிருக்கிறார்கள். 

இதில் மிக முக்கியமாக பிரதமரின் கருத்து வியப்புக்குரியதும் வேதனைக்குரியதுமாக இருக்கிறது. கடந்த மே மாதம் 13 ஆம் திகதி கம்பளை சாஹிறா சம்பவத்தில் ஏற்பட்ட பௌத்த சிங்கள கடும்போக்காளர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக பேரணி சேர்த்து ஒரு கட்டத்தில் தானே முன்நின்று முச்சக்கர வண்டியொன்றில் ஒலிபெருக்கியைக் கட்டிக்கொண்டு கோஷங்களை எழுப்பிய பிரதமர், கடந்த 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் ரணிலின் கேள்விக்குப் பதிலளிக்கையில் 'அளுத்கமவில் அசம்பாவிதம் இடம் பெறுவதற்கு காரணம்  பௌத்தர்கள் நடத்திய ஊர்வலத்தின் மீது பள்ளிவாசலிலிருந்து கல்லெறியப்பட்டதேயாகும்' என குற்றம் சுமத்தியிருக்கிறார்.

அதை இன்னும் ஆழப்படுத்தி ஆதாரப்படுத்துவதற்காக அமைச்சர் ரோகித அபேகுணவர்த்தன 'முஸ்லிம் இளைஞர்களினால் பிக்கு ஒருவர் தாக்கப்பட்;டமையினால் அளுத்கமையில் சிங்கள மக்கள் கொதித்துப் போயிருந்தனர் அந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அங்கு வந்திருந்தால் கூட தாக்கப்பட்டிருப்பார். அளுத்கமையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்திற்கு மூன்று முஸ்லிம் இளைஞர்களே காரணம்' என முன்மொழிந்துள்ளார்.

இதுபோன்று 20.06.2014 வெள்ளிக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜாதிக ஹெல ஊறுமய கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பாட்டாலி சம்பிக்க ரணவக்க பின்வருமாறு கருத்து தெரிவித்தர்.

'பொசன் தினத்தன்று தர்கா நகரில் பௌத்த பிக்கு ஒருவர் முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காமையே அளுத்கம வன்முறைகள் பாரியளவில் இடம்பெறுவதற்கு மூலகாரணம்.

அதுமட்டுமல்ல கடந்த 15 ஆம் திகதி அளுத்கமவில் கூட்டம் நடைபெறுகின்ற போது தர்கா நகரில் சில ஜிஹாத் கிளர்ச்சியாளர்கள் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களைச் சேர்த்துக்கொண்டு ஆயுதங்களுடன் தயாராக இருந்துள்ளனர்.அத்துடன் அக்குழுவினர் மற்றுமொரு பிக்குவின் மீது தாக்குதலொன்றையும் மேற்கொண்டுள்ளனர் இச்சம்பவங்கள் அனைத்தும் தற்போது மறைக்கப்பட்டு ஜிஹாத் கிளர்ச்சியாளர்களை சில முஸ்லிம் தலைவர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.' 

மேலும், அளுத்கம வன்முறைகளுக்கு இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் தவறே காரணம் என ஜெனிவாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மனிஷா குணசேகர தெரிவித்ததாக  இலங்கை முஸ்லிம் பேரவையால் சுட்டிக்காட்ப்பட்டிருக்கிறது. 

இத்தகைய பிரச்சாரப் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் வகையில் முஸ்லிம்கள் கையாளும் ஊடகக் கருவிகள் என்ன? என்ற அவசியம் இன்னும் முறையாக கையாளப்படவில்லை என்றே கூற வேண்டியிருக்கிறது. இத்தகைய தவறான பிரச்சாரங்களை சரிசெய்யும் மாற்றுப் பிரச்சாரங்களை உரிய இடங்களில் நாம் இன்னும் முழுமைப்படுத்தவில்லை. 

அளுத்கம, பேருவளை, தர்காநகர் அழித்தொழிப்புகள் பற்றிய பல்வேறு எழுத்துக்களும் பல தரவுக் கணிப்புக்களும் அழிப்பின் சேத விபரங்களும் தொகுக்கப்பட்டாலும் அவை யாவும் ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு ஆவண வடிவமாக இன்னும் தொகுக்கப்படவில்லை. தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அது முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். 

அளுத்கம அழித்தொழிப்பில் முஸ்லிம்களைக் குற்றப்படுத்தும் வன்முறையான பிரச்சாரங்களுக்கு எதிர் வாதமாகவும் அசைக்க முடியாத ஆதாரமாகவும் இருக்கும் வகையில் அளுத்கம சம்பவத்தை ஆவணப்படுத்த வேண்டிய தேவையை இனியும் நாம் உணராமல் இருக்க முடியாது. அளுத்கம அழித்தொழிப்பு தொடர்பாக முழுமையாக தொகுக்கப்பட்ட ஆவணம் பாராளுமன்றத்;தில் சமர்ப்பிக்கப்பட்டு அது ஹன்சாட்டில் பதிவு பெறும்படி உரையாற்றும் நிகழ்வு கூட முறையாக நடைபெறவில்லை. இவைதான் நாம் கையாளும் ஊடகக் கருவிகளாக உணரப்படுபவை.

வாராந்தப் பத்திரிகைகளுக்கு கட்டுரை எழுதகின்றவர்களின் எழுத்து பணி மட்டுமே இதில் பெரும் பங்களிப்புச் செய்வதாக வாராவாரம் எழுதப்பட்டுவருகிறது. இது மாத்திரம் போதாது அது அந்த வாரத்தின் நிலையாகவே பார்க்கப்பட்டு தொகுக்கப்படாமல் பரந்துகிடக்கிறது. அதிலும் அதிகமான எழுத்துக்கள் தமிழ் மொழிப் பத்திரிகைகளில் எழுதப்படுகின்றன இவற்றை சிங்கள மற்றும் ஆங்கில மொழிப் பத்திரிகைகளில் பிரசுரிக்கச்செய்வதிலும் முஸ்லிம்களுக்கு பெருத்த ஊடகப் பற்றாக்குறை இருக்கிறது. 

சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களின் நிலவரம் குறித்த சரியான நிலைப்பாட்டை எடுத்துச்சொல்லக்கூடிய ஒரு சிங்கள ஊடகத்தினை முஸ்லிம்கள் உருவாக்க வேண்டும். முஸ்லிம்கள் தொடர்பாக நடைபெற்றுவரும் வன்முறைகள் அடக்குமுறைகளை எதிர்கொள்வதில் எங்களுக்குள்ள மிகப்பெரும் பலவீனங்களுல் குறிப்பிடக்கூடிய இரண்டாக உள்ளவை ஒன்று சிங்கள ஊடகத்தின் அவசியம் உணரப்படாமை மற்றது சம்பவங்களும் இழப்புக்களும் ஒரு தொகுப்பாக மும்மொழிகளிலும் ஆவணப்படுத்தப்படாமை. இதுவே இன்று நாம் உருவாக்க வேண்டிய ஊடகக் கருவிகளாகும்.

இதனை மேற்கொள்வதற்கு அதிகாரமும் வசதியுமுள்ள தரப்பினர்களாக இருப்பவர்கள் எமது அரசியல்வாதிகள்தான் அவர்கள் அறிக்கைகளை மட்டும் விடுத்துக்கொண்டிருக்காது ஊடகம் மற்றும் ஆவணப்படுத்தல் விடயங்களை செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளலாம். இதற்காக முன்னின்று செயற்படுகின்றவர்களிடத்தில் அதிகாரமும் வசதியுமில்லாதிருக்கின்றது அப்படியானவர்களை அடையாளம் கண்டு அதற்கான அதிகாரங்களையும் வசதிகளையும் செய்துகொடுத்தால் இது இலகுவான ஒரு காரியமாகவே நடைபெறும். இதுவரையான அளுத்கம அழித்தொழிப்புத் தொடர்பான கணிசமான ஆவண சேகரிப்புக்கள் என்னிடமும் உள்ளது இதற்காக என்னாலும் உதவ முடியும்.

No comments

Powered by Blogger.