Header Ads



''ரவூப் ஹக்கீம் மீது, முத்திரை குத்த முயற்சி''

'தேசத்துரோகி என்றும், நாட்டைக் காட்டிக் கொடுத்தவர் என்றும் பெருந்தேசிய கடும் போக்காளர்களினாலும், பொதுபலசேனா போன்ற பௌத்த தீவிரவாத இயக்களினாலும் சரமாரியாக விமர்சிக்கப்பட்டு - நீதி அமைச்சர் கைது செய்யப்பட வேண்டும், இவரது அமைச்சுப் பதவி பறிக்கப்பட வேண்டும் என்று இவர்களால் கோரப்படும் இந்த நாட்டின் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றஊப் ஹக்கீம் அவர்கள் அளுத்கம கலவரத்தின் பின் முதன் முதலாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் அக்கரைப்பற்று மண்ணுக்கு எதிர்வரும் 18ஆந் திகதி இப்தார் நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தரவுள்ளார். இங்கு சமுகமளித்திருக்கும் பெருந்திரளான உலமாக்கள், கட்சித் தொண்டர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் அவர் வருகை தரும் அந்த 'இப்தார்' நிகழ்வில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்'. 

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களின் பங்களிப்புடன் அக்கரைப்பற்று புதுப்பள்ளியடியில் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வின் முடிவில் உரையாற்றிய கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், கட்சியின் ஊடகப் பணிப்பாளருமாகிய அஷ;nஷய்க் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி குறிப்பிட்டார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

'முஸ்லிம் சமூகத்தின் அங்கங்களான அளுத்கம, தர்ஹாநகர், பேருவல போன்ற நகரங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் காவப்பட்ட உயிர்களுக்கும், எரிக்கப்பட்ட கடை வீடுகளுக்கும், அழித்து நாசமாக்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்களுக்கும் நீதி விசாரணையும், நிவாரணமும் உடனடியாக கிடைக்க வேண்டும், இதற்குக் காரணமாக இருந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பவற்றைச் சற்று உரத்த குரலில் பேசிய ஒரே காரணத்திற்காகவே இவ்வாறு இந்த நாட்டின் நீதி அமைச்சரை துரோகி என்றும், காட்டிக் கொடுத்தவர் என்றும் நியாயமற்ற முறையில் முத்திரை குத்த முற்பட்டிருக்கிறார்கள். 

இனக்கலவரங்களின் மூலம் கொள்ளையில் ஈடுபடவும், அதில் குளிர்காயவும் நினைக்கின்ற இந்த அற்பர்களின் சதிகளை முஸ்லிம் சமூகம் விளங்கிக் கொண்டது போன்றே இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகங்களும், சர்வதேசமும் கூட விளங்கிக் கொண்டன என்ற உண்மையை இவர்கள் அறிந்தபோதே இவ்வாறு அளவுக்கதிகமாக கூக்குரல் போட முனைந்திருக்கிறார்கள்' என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் இறுதியில் அக்கரைப்பற்றின் மூத்த உலமாக்களில் ஒருவரான அல்ஹாஜ் ஆப்தீன் ஆலிம் அவர்களால் இப்தார் பிரார்த்தனையும் நிகழ்த்தப்பட்டது. 

No comments

Powered by Blogger.