“அந்தாளை நிம்மதியாக ஆட்சி செய்ய விடுங்கப்பா...”
இவர்கள் பொறுப்பற்ற தனமாக பொது வெளியில் வந்து போடும் கோஷம், “ஆர்டிபிசியல் இன்டர்லிஜன்ஸ்” (AI) மூலம் உடனடியாக சிங்கள மொழியில் மொழி பெயர்க்க பட்டு, சிங்கள பொது வெளிகளில் உலா விட படுகின்றன. அவை “சிங்கள-பெளத்த மத அரசியல்” மீண்டும் தலை தூக்க காரணங்களாக அமைகின்றன. ஆகவே, “அந்தாளை நிம்மதியாக ஆட்சி செய்ய விடுங்கப்பா!” என எதிர் கட்சியில் இருந்தே நான் சொல்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கூட்டணி தலைவர் மனோ எம்பி விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இப்போது யாரும், குற்றம் புரிந்த ஞானசாரரை சிறையில் போட்டது தவறு என சொல்லவில்லை. அவரது சீருடை தான் பிரச்சினை. அதை ஜனாதிபதி அனுர தீர்க்கட்டும். இப்போது, ஜனாதிபதி, உடனடியாக ஞானசாரரின் தேருடை தொடர்பில் பெளத்த தலைமைகளை கண்டு பேசி, இரண்டு வாரங்களில் தீர்வு தருவதாக உறுதி அளித்து உள்ளார். இது அவர் மீதான பெளத்த மத தலைமைகளின் அழுத்தம். அதற்கு அவர் பதில் கூறி உள்ளார்.
நீறு பூத்த நெருப்பாக இருக்கும் “இனவாதம்” முழுமையாக மாற காலம் எடுக்கும். அதை தற்காலிகமாக தரைக்கு அடியில் போட்டது, “அரகல” என்ற கிளர்ச்சி ஆகும். இது தொடர்பில், சமூக ஊடங்களில் கூவி தெரியும், தமிழ் பேசும் “எழுத்தாளர்களுக்கும்”, “பேச்சாளர்களுக்கும்”, கூறுகிறேன். பெளத்த மத தேரர்கள் தொடர்பில், ஜனாதிபதி அனுரவுக்கு உதவி செய்ய வேண்டும் என நீங்கள் விரும்பினால், மீண்டும் மத அரசியல் தலை தூக்காமல் இருக்க வேண்டும் என்றால், தயவு செய்து அமைதியாக இருங்கள்.
நீங்கள் பொது வெளியில் வந்து போடும் “அரோகரா” அல்லது “சபாஷ்” அல்லது “ஜயமேவா” கோஷங்கள் எல்லாம், ஆர்டிபிசியல் இன்டர்லிஜன்ஸ் (AI) மூலம் உடன் “இன்ஸ்டண்டாக” சிங்கள மொழியில் மொழி பெயர்க்க பட்டு, சிங்கள பொது வெளிகளில் உலா விட பட்டு, “சிங்கள-பெளத்த மத அரசியல்” மீண்டும் தலை தூக்க காரணங்களாக அமைகின்றன.
ஆகவே, தமிழ் பேசும் மக்கள், இது பற்றி அதிகம் பேசாமல், “அதே மாதிரி நமது பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுங்கள் ஜனாதிபதி அவர்களே!”, என கோரிக்கை விடுத்து விட்டு அமைதியாக இருக்க வேண்டும். அதாவது, ஜனாதிபதியை நிம்மதியாக ஆட்சி செய்ய விட வேண்டும் என எதிர் கட்சியில் இருந்து நானே சொல்கிறேன்.

Post a Comment