Header Ads



கல்வி சம்பந்தப்பட்ட பெயர்களும், இலங்கை முஸ்லிம்களும்


- எம். எஸ். எம் ஜான்ஸின் -


நமது மூதாதையர்  காலனித்துவ இருட்டினுள் 350 வருடங்களுக்கு மேல் அதாவது இஸ்லாத்தை முழுமையாக வெளிக்காட்டி வாழ முடியாத காலப்பகுதியில் வாழ்ந்தாலும் பரம்பரை பரம்பரையாக இஸ்லாத்தை பாதுகாக்க பல்வேறு வகைகளில் திட்டமிட்டு செயற்பட்டுள்ளார்கள். இன்றைய கட்டுரையில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் தியாகங்கள் திட்டமிடல்கள் நடவடிக்கைகளை சற்று அலசுவோம்.  


ஒருபுறம் இஸ்லாத்தை கற்பதற்கான சூழ்நிலைகள் வசதிகள் மட்டுமல்ல அக்காலத்தில் உலமாக்களும் அரிதான  ஊராக  யாழ்ப்பாணம் இருந்துள்ளது. மறுபுறம் வசதி வாய்ப்புகளையும் , பதவிகளையும் கல்வி கற்கும் வாய்ப்பையும் வழங்கி முஸ்லிம்களை மதம் மாற்றி தமது மதத்துக்கு இழுத்தெடுக்க போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும் பின்னர் ஆங்கிலேயரும் பல்வேறு முயற்சிகளை செய்தார்கள். 


ஆனால் மூதாதையரின் ஒரு பிரிவினர் பகலில் வியாபாரிகளாகவும் இரவில் போராளிகளாகவும் மாறி நாட்டை அந்நியர்  ஆட்சியிலிருந்து மீட்க போராடினர். இன்னொரு பிரிவினர் இரவு நேர கல்வி கற்கைகளை சிறுவர்களுக்கு போதித்தனர். இதற்காக சில வீடுகளை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இரவு நேரத்தில் விளக்கு வெளிச்சத்தில் அல் குர்ஆனை ஓதுவதற்கு பழக்கினார்.  பௌர்ணமி வெளிச்சம் கிடைக்கும் நாட்களில் நிலா வெளிச்சத்தையும் பயன்படுத்தினர்.   அக்காலத்தில் வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்த காரணத்தினால் மண்ணில் எழுதியே பாடங்களும் அரபு எழுத்துக்களும் போதிக்கப் பட்டன.


போர்த்துக்கீசருடன் பேரம் பேசி தாம் தொழுவதற்கு தடை ஏற்படுத்தாதவிடத்து மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறி வியாபாரம் செய்வோம் என்றும் அதில் ஒரு தொகையை வரியாக செலுத்துவோம்  என்றும் உடன்படிக்கை செய்தனர். 


அதன் பிரகாரம் 1620 இல் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய  20000 முஸ்லிம்களில் சுமார் முன்னூறு பேர் மீண்டும் யா- பண்ணை பட்டணம்   (யாழ்ப்பாணம் )     சென்று குடியேறினர். படிப்படியாக இன்னும் சிலர் நல்லூர், கொழும்புத்துறை, சோனகர் நகர் பிரதேசங்களிலும் மீளக் குடியேறினர் .  


முஸ்லிம்களின் வெளியேற்றத்தினால் செயலிழந்திருந்த மற்றும் உடைக்கப் பட்டிருந்த பள்ளிவாசல்களின் மிஞ்சிய பகுதிகளை தொழுகைக்காக பயன்படுத்தினர். சில வாரங்களில்  அவற்றை செப்பனிட்டனர்.     இவ்வாறு   கைவிடப்பட்ட நல்லூர் சோனகர் புறத்திலிருந்த பள்ளிவாசல் , கொழும்புத்துறையிலிருந்த பள்ளிவாசல்,  மற்றும்  சோனக வாடி ( இரண்டாம் குறுக்குத் தெரு)  பள்ளிவாசல் போன்றவரை தமது தொழுகைகளுக்காக உபயோகித்தனர்.


யாழ் கோட்டைக்குள் இருந்த பள்ளிவாசல், இரண்டாம் குறுக்குத் தெருவில் இருந்த பள்ளிவாசல்,  கண்டி வீதியிலிருந்து இன்னொரு பள்ளிவாசல் போன்ற மூன்று   பெரிய ஜும்மா பள்ளிவாசல்கள் அழிக்கப் பட்டிருந்தன. நல்லூர் ஜும்மா பள்ளிவாசல் பகுதியளவில் சேதப் படுத்தப் பட்டிருந்தது. ஏனைய சிறிய அளவிலான  18 பள்ளிவாசல்கள் எரித்து அழிக்கப் பட்டிருந்தன (மூலம் : ஒல்லாந்தர் குறிப்புகள்) .  இந்த வரலாறுகளை இங்கே கூறுவதற்கு காரணம் யாழ்ப்பாண முஸ்லிம்கள் எவ்வாறான  ஒரு அடக்குமுறையின் கீழ் தமது மார்க்கத்தை காப்பாற்றி வந்துள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டவே.  

 இவர்கள் தொழில் செய்யும் நோக்கத்தை விட   தமது பூர்வீக இடங்களையும் பள்ளிவாசல்களை மீண்டும் செயற்பாட்டு நிலைக்கு கொண்டுவருவதை நோக்கமாக கொண்டுதான் போர்த்துக்கீசருடன் உடன்பாட்டுக்கு வந்தனர். 


ஒல்லாந்தர் காலத்தில் நல்லூர் வெளியேற்றம் மற்றும் முஸ்லிம்களின் பொது சொத்துக்கள் பறிக்கப் பட்ட போதிலும் அவர்கள் மனம் தளர்ந்து விடவில்லை. தமது பூர்வீக  பூமியாகிய நல்லூர் பள்ளிவாசலை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் உபயோகித்து வந்தனர். வெள்ளிக்கிழமைகளில் வண்ணார் பண்ணை பிரதேசத்திலுள்ள  சோனகர்  நகரிலிருந்து வுழு செய்துகொண்டு நல்லூர் நோக்கி நடந்து சென்று அங்கு குத்பா பேருரையை கேட்டுவிட்டு ஜும்மா தொழுகையையும் நிறைவேற்றி முடித்த பின்னர் தமது பூங்கா வளவில்   (யாழ் கச்சேரி  முன்பாகவுள்ளது)     ஆர்ப்பாட்டம்   செய்து வந்தனர் என்று ஒல்லாந்தர் குறிப்புகள் கூறுகின்றன. (இலங்கை முஸ்லிம்களின் வரலாறு -எம்.எஸ்.எம். ஜான்ஸின்  -2010) .     


இந்த இரண்டு ஆட்சிக்காலத்திலும் வெளியூரிலிருந்து இஸ்லாமிய போதகர்கள் வருகை தடை செய்யப் பட்டிருந்தது.  முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து வரவும் அனுமதிக்கப் படவில்லை. ஆளுநர்கள் மாறிய  காலப் பகுதியில் முஸ்லிம்கள் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து உலமாக்களை வரவைத்து மார்க்க கல்வியை கற்றுக் கொண்டனர். 

அவ்வாறு கப்பல்களில் அழைத்து வரப்பட்ட உலமாக்கள்  பல  மாதங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கி மார்க்கட் கல்வியை கற்றுக் கொடுத்தனர். சிலர் அங்கேயே திருமணம் முடித்து தொடர்ந்து வாழ்ந்தனர். இவ்வாறான காலப் பகுதியில் இவர்களிடம் மார்க்க கல்வியை கற்க இலங்கையில் ஏனைய பாகங்களிலிருந்தும் முஸ்லிம்கள் சென்றுள்ளனர்.

ஒல்லாந்தர் குறிப்புகளின் படி,  தாடி வைக்கவும். தொப்பி போடவும்  பெண்கள்  பர்தா அணியவும் முஸ்லிம்கள் வரிகட்டினர். சிலர் இவ்வாறான அனுமதிகளுக்கு பகரமாக ஒல்லாந்தரின் கப்பல்களிலிருந்து பொருட்களை  கூலி வாங்காமல் இறக்கி ஏற்றும் வேலையை செய்தனர். சிலர் ஒல்லாந்தரால் தினமும் வசூலிக்கப் படும் நாணயங்களை எண்ணி கொடுத்தனர். இப்படி இஸ்லாமிய கலாச்சாரத்தை காசு கொடுத்து முஸ்லிம்கள் பாதுகாத்தனர். இன்று ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் பர்தா அணிந்தால் தண்டம் விதிக்கப் படுகிறது. அன்று அதற்காக காலனித்துவ ஆட்சியாளர்களால் வரி விதிக்கப் பட்டது. 

இவையெல்லாம் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் சந்தித்த அடக்குமுறைகள். இவ்வாறான இஸ்லாத்தையும் முஸ்லிம்களையு நசுக்கும் செயற்பாடுகளை யாழ்ப்பாண முஸ்லிம்கள் வரி செலுத்தியும் ஊழியம் செய்தும் அதற்கு மாற்று ஏற்பாடுகளை இரகசியமாக செய்தும் பாதுகாத்தார்கள். 


இஸ்லாத்தை வெளிப்படுத்துவது ஆபத்தான ஒரு காலமாகவும் அது இருந்தது. அல்லாஹ்வின் உதவியுடன் அவற்றையெல்லாம் தமது வியூகங்களாலும் அர்ப்பணிப்பாலும் தகர்த்தெறிந்து இஸ்லாத்தை  முஸ்லிம்கள் பாதுகாத்தார்கள். 


அதுமட்டுமல்ல  இஸ்லாத்தை அதன் கலாச்சார பாரம்பரியங்களையும் எந்த வகையில் முடியுமோ அவ்வாறெல்லாம் அந்த முஸ்லிம்கள் பாதுகாத்தார்கள்.  


1900 களில் ஏனைய மதங்களை சேர்ந்த மூன்று  இலட்சம் மக்கள் மத்தியில் 4000 நபர்களாக வாழ்ந்த முஸ்லிம்கள் தமது  பிரதேசத்தை கலாச்சார மற்றும் பண்பாட்டு ஊடுருவல்களில் இருந்தும் மதம் மாற்றும் வியூகங்களில் இருந்தும் பாதுகாத்துள்ளார்கள். 

இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான பள்ளிகள் தனியார் பள்ளிகளாக இருந்தன. அவை வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன், ஆங்கிலிக்கன், மற்றும் ரோமன் கத்தோலிக்கர்கள் போன்ற பல்வேறு கிறிஸ்தவ சமயப் பரப்புரைக் குழுக்களாலும், அத்துடன் பௌத்த தியோசாஃபிகல் சொசைட்டி போன்ற வளர்ந்து வரும் பௌத்த மற்றும் இந்து மறுமலர்ச்சிக் குழுக்களாலும் நடத்தப்பட்டன.


இந்த மத அமைப்புகள் தங்கள் சொந்த நிறுவன நிதிகள், மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பள்ளிக் கட்டணங்கள், மற்றும் உள்ளூர் அல்லது வெளிநாட்டு தர்ம நன்கொடைகள் ஆகியவற்றிலிருந்து ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கின.


அரசாங்க மானியங்கள்: பொதுக் கல்வித் துறையால் ஒழுங்குபடுத்தப்பட்ட காலனித்துவ "உதவி மானியம்" (Grant-in-Aid) அமைப்பின் கீழ், பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் மாணவர்களின் செயல்திறன் மற்றும் வருகையின் அடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கு நிதி மானியங்களை வழங்கியது. இந்த மானியங்கள் சமயப் பரப்புரை அமைப்புகளுக்குப் பெருமளவில் நிதியுதவி அளித்து, அவர்கள் தங்கள் ஆசிரியர்களின் சம்பளத்தை வழங்க உதவின.

அந்த காலப் பகுதியில் திண்ணைப் பாடசாலைகள் முஸ்லிம்  பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப் பட்டன. 1890 களில்  முஸ்லிம்களும் தமக்கான பாடசாலைகளை உருவாக்க தொடங்கினர். ஆங்கிலேய அரசின் எந்த நிதியுதவியும் பெறப் படவில்லை.  இலங்கையில் ஏனைய பிரதேசங்களிலும் வாழ்ந்த முஸ்லிம்களும் அவ்வாறானதொரு நிலமையையே எதிர்கொண்டார்கள்.  


யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை முஸ்லீம் பெண்கள் வெளியே செல்வதில்லை. அவ்வாறு செல்வதென்றாலும் முகம் மூடியவர்களாக அல்லது சேலை முந்தானையால் அல்லது முகப்பால்  தமது முகத்தை மறைத்தவர்களாகவே அவர்கள் செல்வார்கள். பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும் பொது இஸ்லாமிய பெயர்களை தேடித் தேடி சூட்டினார்கள். பிள்ளைகளுக்கு மட்டுமல்ல தமது பாடசாலைகளுக்கும் இஸ்லாமிய பெயர்களை சூட்டினார்கள். அவை அர்த்தமுள்ளவை மட்டுமல்ல மார்க்க எழுச்சி கல்வி அறிவு பொது அறிவு போன்றவற்றை வளர்க்கும் கருத்தை தமது பெயர்களிலேயே தாங்கும் விதமாக பெயர் சூட்டப் பட்டன. 


1960-ஆம் ஆண்டின் 5-ஆம் இலக்க உதவி பெறும் பாடசாலைகள் மற்றும் பயிற்சிக் கல்லூரிகள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், உருவாக்கப் பட்ட பின்னர் படிப்படியாக சுயாதீன பாடசாலைகள் அரச பாடசாலைகளாக தம்மை இணைத்துக் கொண்டன.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் பாடசாலைகள் அரச பாடசாலைகளாக மாற்றப் பட்டது 1963 ஆம் ஆண்டிலாகும்.    ஆனால் ஒல்லாந்தர் காலத்திலேயே தங்களுக்கென்று தனியான பாடசாலைகளை முஸ்லிம்கள் அமைத்து கல்வி கற்பித்து கொடுத்த்திருக்கிறார்கள்.  அந்த  கல்வி நிறுவனங்களை இயக்குவதற்கு தேவையான நிதியை பெற சொத்துக்களை வக்ப் செய்துள்ளார்கள். கல்விக்காக தமது சொந்த கட்டிடத்தை வழங்கவும் அங்கே கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கான  சம்பளத்தை தமது சொந்த நிதியிலிருந்தும் செலவு செய்து தமது எதிர்கால  சந்ததியினரின் அறிவுக்கு அத்திபாரம் இட்டுள்ளார்கள். 


அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் காலத்தில் நல்லூரில் இயங்கிய முஸ்லீம் பாடசாலை பறிபோனதால் அங்கிருந்து இடம்பெயர்ந்தவர்கள் தெருவுக்கு ஒரு திண்ணை பாடசாலையை ஆரம்பித்து திண்ணைக் கல்வியை   வழங்கினார்கள். இதற்காக இந்தியாவில் இருந்தும் ஓரளவு மார்க்கம் படித்தவர்களும் உலமாக்களை வருவித்து அவர்களுக்கு வீடுகள் உட்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். இந்தியாவின் அதிராம் பட்டணம், காயல் பட்டணம், கீழக்கரை போன்ற ஊர்களில் இருந்து இவ்வாறான சில மார்க்க மேதைகள்  கொண்டுவரப் பட்டு அவர்களில் ஏறக்குறைய எல்லோருமே யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக தங்கிவிட்டார்கள்.  


அவர்களின் வரலாற்றை தனியாக எழுதலாம். அதேவேளை யாழ்ப்பாண முஸ்லிம்களின் சோனகர் நகரில்  மூன்று பாடசாலைகள்  1890 களுக்கு பின்னர் செயற்படத் தொடங்கியுள்ளது.  அவற்றில் "மஸ்ர உத் தீன்" பாடசாலை, "மன்பஉல் உலூம்"  மற்றும் அல்லாப் பிச்சை மாமா பள்ளிக்கு கூடம் (முஹம்மதியா பாடசாலை) என்பன 1990 வரை தொடர்ந்து இயங்கியதால் அவற்றின் வரலாற்றை  ஓரளவு அறியக் கூடியதாக இருக்கின்றது. 


அந்த பாடசாலைகளுக்கு சூட்டப் பட்ட பெயர்கள் அந்த முஸ்லிம்கள் எந்தளவுக்கு தூர நோக்குடன் ஆழமான கருத்தை கொண்ட பெயர்களை சூட்டியுள்ளார்கள் என்பதை சொல்லும். அவற்றின் அர்த்தங்களை சற்று நோக்குவோம். 


 அரபு மொழியில் "மன்பஉல் உலூம்" (Manbaul Uloom / منبع العلوم) என்ற சொல்லின் நேரடித் தமிழ் அர்த்தம் "கல்விகளின் ஊற்று" அல்லது "அறிவின் பிறப்பிடம்" என்பதாகும்

'மஸ்ர உத் தீன்' என்ற சொற்றொடர் ஒரு அரபு கூட்டுப்பெயர் அல்லது சொற்றொடர் ஆகும். தமிழில், 'மஸ்ர உத் தீன்' என்பதன் பொருள்"மார்க்கத்தின்    இரவுப் பயணம்" (Night Journey of the Religion) or "மார்க்கத்தின் பாதை"என்ற கருத்துக்களை அவை கொண்டிருந்தாலும் அந்த பெயரின் பின்னால் ஆழமான வரலாறு புதையுண்டு போயுள்ளது. 


அக்காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளால் இயக்கப் படும்  தமது பாடசாலையிலேயே   மாணவர்கள் சேர வேண்டுமென்ற ஒரு நியதி இருந்தது. இதனை முறியடிக்க முஸ்லிம்கள் இரவு நேரத்தில் பாடபோதனைகளை முஸ்லீம் மாணவர்களுக்கு நடத்தினார்கள். அந்த நேரத்தில்  விளக்கு எரிக்க தேவையான எண்ணையை வாங்கவும் தமது சொத்துக்களை சிலர் வக்ப் செய்தனர். அந்த விடயத்தை சுட்டிக் காட்டும் விதமாக 'மார்க்கத்தின் இரவு பாதை' / 'மார்க்கத்தின் பாதை' என்ற இரண்டு அர்த்தங்களை கொண்ட பெயர்களை அவர்கள் சூட்டியுள்ளார்கள். 


கல்விகளின் ஊற்று , 'மார்க்கத்தின் இரவு பாதை' / 'மார்க்கத்தின் பாதை'  என்ற நாமககள் எல்லாம் எவ்வளவு தூர நோக்கம்  மிக்கவை. எவ்வளவு அழகானவை. இஸ்லாத்தை பின்பற்ற பல தடைகளை 350 வருடங்களாக எதிர் கொண்ட மக்கள் தமது மார்க்கத்தை பாதுகாப்பதில் எவ்வளவு தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் செய்து இருப்பார்கள் என்பதை இந்த பெயர்களின் அர்த்தங்களில் உள்ள வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.  

ஏனைய ஊர்களில் காணப்படும் இவ்வாறான அரபுப் பெயர்களுடன் கூடிய புராதன கல்வி நிறுவனங்கள் பற்றி தகவல்கள் சேகரிக்கப் படுகின்றன. இன்ஸா அல்லாஹ் எதிர் காலத்தில் அவையும் பதிவேற்றம் செய்யப் படும். 

நன்றி


No comments

Powered by Blogger.