அரவிந்த டி சில்வா அவரது மனைவி - 40 மில்லியன் ரூபா பறிமுதல்
எயார்பஸ் கொடுக்கல் - வாங்கல் முறைகேடு தொடர்பான விசாரணைகளில், நீதிமன்ற உத்தரவுகளை மீறி முன்னிலையாகாத குற்றச்சாட்டின் கீழ், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி மறைந்த கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவின் பிணைப் பணத்தை அரசுடைமையாக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் 2ஆம் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிரியங்கா நியோமாலி, நீதிமன்ற விசாரணைகளுக்குத் தொடர்ந்து சமூகமளிக்காமல் தவிர்த்து வந்தமையினால், அவருக்கு எதிராக ஏற்கனவே பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பிரியங்கா நியோமாலி சார்பில் நீதிமன்றத்தில் பிணை நின்றிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோர், தங்களை பிணைப் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஒப்பந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரியங்கா நியோமாலி, நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தப்பிச் சென்றதை அடுத்து, முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிணைநின்ற 40 மில்லியன் ரூபா பிணைத்தொகையைப் பறிமுதல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment