Header Ads



ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எம்.எம். ஹமீத் காலமானார்.


- பேருவளை பீ.எம். முக்தார் -


ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் பிரபல ரகர் விளையாட்டு வீரருமான ரீ.எம்.எம். ஹமீத் தனது 77 ஆவது வயதில் வத்தளையில் காலமானார். 


மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான இவர் 1971 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்து நாட்டின் பல பகுதிகளிலும் சேவையாற்றியுள்ளார். 


முன்னாள் சபா நாயகர் தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஏ. பாக்கீர் மாக்காரின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றினார். அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவரது புதல்வர் முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாகவும் சிறப்பாக சேவையாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றுக் கொண்டார். 


பின்னர் கல்முனை மற்றும் அளுத்கமை பகுதிகளில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராகவும் கடமையாற்றினார். பின்னர் பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றியுள்ளார். 


கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ரகர் அணியின் தலைவராகவும் இலங்கை பொலிஸ் ரகர் அணியிலும் பங்குபற்றி தமது திறமைகளை வெளிக்காட்டி புகழ் பெற்றுக் கொடுத்தவர் ஆவார். 


அத்தோடு இலங்கை ரகர் யூனியனின் கௌரவ செயலாளராகவும் பதவிவகித்த இவர் மூன்று மொழிகளிலும் மிகவும் பாண்டித்தியம் பெற்றவராகவும் விளங்கினார். 


இவரது சகோதரரரான முன்னாள் பிரதி பொலிஸ்மாஅதிபராகவும் பதவி வகித்ததோடு முன்னால் ஜனாதிபதி அமரர் ஜே.ஆர் ஜயவர்தனவின் பிரதம பாதுகாப்பு அதிகாரியாகவும் கடமையாற்றினார். கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ரகர் அணியின் தலைவராகவும் இலங்கை பொலிஸ் ரகர் அணியிலும் அங்கம் வகித்தார். 


அன்னாரின் ஜனாஸா 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு வத்தளை அக்பர் டவுன் பள்ளிவாசல் மையவாடியில் நள்ளடக்கம் செய்யப்படும். 


இவரது மறைவு குறித்து முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அனுதாபச் செய்தியொன்றை விடுத்துள்ளார். நீதியாகவும் நேர்மையாகவும் தமது கடமையை நிறைவேற்றிய சிறந்த மனிதரை இழந்து விட்டோம். பொலிஸ் சேவையில் கடமையாற்றிய போதிலும் ஐவேளைத் தொழுகையை செவ்வனே நிறைவேற்றி சிறந்த அமல்களையும் செய்து அனைவரினதும் நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டார். மனிதநேயமிக்க ஒரு மாமனிதரை நாம் இழந்துள்ளோம். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் செய்த நற்கருமங்களை அங்கீகரித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திப்போமாக! ஆமீன்

No comments

Powered by Blogger.