Header Ads



பணம் அச்சிடல் தொடர்பான கட்டுக்கதைகள்


கொவிட்- 19 உலகளாவிய நோய்த்தொற்றுக்கு மத்தியில் மத்திய வங்கியின் முன்னெப்பொழுதுமில்லாத தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டினைத் தொடர்ந்து, குறிப்பாக 2020 இன் முற்பகுதியிலிருந்து பணம் அச்சிடுதலானது இலங்கையில் பிரபல்யமிக்க வாசகங்களின் ஒரு பகுதியாக மாற்றமடைந்துள்ளது.

சுற்றோட்டத்திலுள்ள நாணயத்தின் அதிகரிப்பு, பணச்சந்தையில் விஞ்சியளவிலான திரவத்தன்மை மற்றும் மத்திய வங்கியின் வசமுள்ள அரச பிணையங்களின் உடைமைகள் என்பவற்றுடன் மத்திய வங்கியின் பணம் அச்சிடல் செய்முறை தொடர்பில் பொருளாதாரத்தின் பல்வேறு ஆர்வலர்களினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில் பணம் அச்சிடுகின்ற அதிகாரம் மத்திய வங்கியிடம் காணப்பட்டாலும், வேறு சில நாடுகளில் திறைசேரி அல்லது நிதி அமைச்சு அல்லது பிரத்தியேகமானதொரு அரச முகவராண்மை என்பன கூட பணத்தை அச்சிடுகின்றன.


இலங்கையில் பணச்சபை முறைமைக்குப் பதிலாக 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கி நிறுவப்பட்டதிலிருந்து பணம் அச்சிடல் வகிபாகமானது மத்திய வங்கியின் அதிகார வரம்புக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது.


பணம் என்றால் என்ன?


பொருளாதார நியதிகளில் பணமென்பது மத்திய வங்கியினால் வெளியிடப்படுகின்ற நாணயத்தினை மட்டுமன்றி நிதியியல் நிறுவனங்களில் பொதுமக்களினால் வைத்திருக்கப்படும் வைப்புகளையும் உள்ளடக்குகின்றது. பணமானது முதன்மையாக, கொடுப்பனவுகளைச் செலுத்துகின்ற வழிமுறையொன்றாக அல்லது பரிவர்த்தனை ஊடகமொன்றாகக் கருதப்படுகின்றது. பணம் மூன்று முக்கிய தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளது.


அதாவது (i) பெறுமதிச் சேமிப்பென்பது பணமானது கொள்வனவு செய்கின்ற சக்தியை எதிர்காலத்திற்கு மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது, (ii) கணக்கின் அலகென்பது பணமானது விலைகளைக் குறிப்பீடு செய்வதற்குப் பயன்படுத்தப்படுவதுடன் அது பணப் பெறுமதியை அளவிடுகின்ற நியமமொன்றாகச் செயற்படுகின்றது மற்றும் (iii) பரிவர்த்தனை ஊடகமென்பது பணமானது பொருட்களினதும் பணிகளினதும் பரிவர்த்தனையை வசதிப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றது என்பனவே அவையாகும்.


பொருளாதார நியதிகளில் மக்கள் வைத்திருக்க விரும்புகின்ற மொத்த பணத்தின் அளவானது பணத்திற்கான கேள்வியென அழைக்கப்படுகின்றது. மக்களுக்குப் பல்வேறு காரணிகளுக்காகப் பணம் தேவைப்படுகின்றது. பணத்திற்கான மொத்தக் கேள்வியானது வருமானம், வட்டி வீதங்கள் மற்றும் பணவீக்கம் அதேபோன்று எதிர்காலம் தொடர்பான நிச்சயமற்றதன்மை என்பன உள்ளடங்கலாக பல்வேறு காரணிகளினால் நிர்ணயிக்கப்படுகின்றது. வேறு எந்த நிதியியல் சொத்துக்களுக்கும் மாறாக பணத்தைக் கோருவதற்கான இக்காரணிகளை மூன்று முக்கிய காரணங்களின் மூலம் அதாவது (i) கொடுக்கல்வாங்கலுடன் தொடர்புடைய காரணங்கள், (ii) முன்னெச்சரிக்கைக் காரணங்கள் மற்றும் (iii) ஊக காரணங்கள் என்பனவற்றினால் விளக்கலாம்.


மக்கள் தங்கள் கொடுக்கல்வாங்கல் நோக்கங்களுக்காக பணத்தைக் கோருகின்றனர். கொடுக்கல்வாங்கலுடன் தொடர்புடைய காரணிகளுக்காக வைத்திருக்கின்ற பணத்தின் அளவு கொடுக்கல்வாங்கல்களுக்கான பண மீதிகள் எனப்படுகின்றன. கொடுக்கல்வாங்கல்களுக்கான பண மீதிகள் உயர்ந்தளவிலான பெயரளவு மொ.உ.உற்பத்தி வளர்ச்சி, பொருட்கள் மற்றும் பணிகள் மீது செலவழிப்பதற்கான உயர்ந்தளவிலான நாட்டம் போன்ற வடிவிலான மேம்பட்ட பொருளாதார நிலைமைகள் உள்ளடங்கலாக பல்வேறு காரணிகள் மீது தங்கியுள்ளன.


எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய திட்டமிடப்படாத அல்லது அவசர செலவினங்களைப் பூரணப்படுத்தும் பொருட்டு முற்காப்பு வழிமுறையொன்றாகவும் மக்கள் பணத்தைக் கோருவதுடன் இது 2020இல் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினைத் தொடர்ந்து நகர்வு மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில்; எடுத்துக்காட்டப்பட்டது. சில நேரங்களில் மக்கள் ஊக நோக்கங்களுக்காக அதாவது, இன்று பணத்தை வைத்திருப்பதன் மூலம் எதிர்காலத்தில் வேறு ஏதேனும் சொத்துக்களிலும் பார்க்க சிறந்த வருவய்களை ஈட்டுவதற்காகவும் பணத்தை வைத்திருக்கின்றனர். இருப்பினும், பணத்திற்கான ஊகக் கேள்வியானது வருவாய் வீதம் மற்றும் பணத்தை வைத்திருப்பதற்கான சந்தர்ப்பச் செலவு என்பவற்றில் தங்கியுள்ளது.


இதற்கமைய, வருமானம், வட்டிவீதங்கள், பொருளாதாரத்தின் விலைமட்டம், வைப்பு வீதம், செல்வம், தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள், கொடுக்கல்வாங்கல் செலவுகள் மற்றும் பொதுமக்களின் கொடுப்பனவு வழக்கங்கள் என்பன உள்ளடங்கலாக பல்வேறு காரணிகளினால் பணத்திற்கான மொத்தக் கேள்வி தளம்பலடைகின்றது. வங்கித்தொழில் வசதிகளிலுள்ள புத்துருவாக்கங்களுடன் வன் பணத்தை வைத்திருப்பதன் முக்கியத்துவம் தற்போது ஓரளவு குறைவடையக் கூடும். ஒட்டுமொத்தமாக, பொதுமக்கள் பணத்திற்கான தங்களது கேள்வியை அதிகரிக்கும் போது, ​​பொருளாதாரத்திற்குப் புதிய பணத்தினை வெளியிடுவதில் நன்கு நிறுவப்பட்ட பன்னாட்டு ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொறிமுறையொன்றினைப் பின்பற்றும் வேளையில் பொருளாதாரத்தின் சாத்தியமான கேள்வி அழுத்தங்களைக் கண்காணித்து புதிய பணத்திற்கான கேள்வியைப் பூரணப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய வங்கி மேற்கொள்கின்றது.


பிரபல்யமிக்க வாசகங்களில் குறிப்பிடப்பட்டவாறு பணம் அச்சிடலென்பது பொருளாதாரத்திற்குப் புதிய பணத்தை வெளியிடுதலாகும். பொருளாதார நியதிகளில் மத்திய வங்கியொன்றினால் வெளியிடப்படுகின்ற புதிய பணமானது ஒதுக்குப்பண வெளியீடாக அறியப்படுகின்றது. மத்திய வங்கிப் பண வெளியீட்டின் அடிப்படையில் வர்த்தக வங்கிகள் அதிகளவிலான பணத்தை உருவாக்க முடியுமென்பதனால் ஒதுக்குப் பணமானது நாட்டின் நாணயத் தளமாகவும் (அல்லது உயர் வலுப் பணம்) அழைக்கப்படுகின்றது.


ஒதுக்குப் பணமானது மத்திய வங்கியின் நாணயப் பொறுப்பாகவும் கருதப்படுகின்றது. ஒதுக்குப் பணத்தின் பொறுப்புப் பக்கமானது மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட மொத்த நாணயம் மற்றும் மத்திய வங்கியில் வணிக வங்கிகளின் வைப்புக்கள் என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது. இலங்கையில், மத்திய வங்கியின் பொறுப்புகளாகவுள்ள சில அரச முகவராண்மைகளதும் முதனிலை வணிகர்களதும் கணக்கு நிலுவைகளும் ஒதுக்குப் பணத்தில் உள்ளடங்கியுள்ளன.


பணச் சபை முறைமையின் கீழ், செலாவணி வீதமானது ஒற்றை நாணயமொன்றிற்கு அல்லது நாணயங்களின் கூடையொன்றிற்கு (திருத்தப்படாவிட்டால்) தொடர்ந்தும் நிலையானதாகக் காணப்படுகின்றது. பணச் சபையானது ஏற்றுமதிகள், முதலீடுகள், வெளிநாட்டு மானியங்கள் ஊடாக அல்லது நாட்டிற்கான வேறேதேனும் பெறுகைகள் ஊடாக ஏதேனும் மேலதிக வெளிநாட்டுச் சொத்துகளைப் பெற்றால், பணச் சபையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் அதிகரிக்க வேண்டுமென்பதுடன் அவ்வதிகரிப்புடன் இசைந்து செல்லும் விதத்தில் பணச் சபை முறைமையின் கீழ் பொருளாதாரத்திற்குப் புதிய பணத்தை வழங்குவதன் மூலம் நாட்டின் பண இருப்பும் அதிகரிக்கும். பணச் சபையிலிருந்து வெளிநாட்டுச் சொத்துக்களின் ஏதேனும் தேறிய வெளிப்பாய்ச்சல் காணப்பட்டால், நாட்டின் பண நிரம்பலானது தேறிய வெளிநாட்டு வெளிப்பாய்ச்சலின் பெறுமதிக்கு நிகரான அளவொன்றினால் குறைக்கப்பட வேண்டும். மத்திய வங்கி நிறுவப்பட்டதுடன் நாட்டின் நாணயத் தளமானது மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் பணச் சபையினைப் போலன்றி மத்திய வங்கியொன்று உள்நாட்டுச் சொத்துக்களையும் திரட்ட முடியும்.


இதற்கமைய, பொருளாதார நியதிகளில், மத்திய வங்கி பொருளாதாரத்திற்குப் புதிய பணத்தை வழங்குவதற்கு இரண்டு முக்கிய முறைகள் காணப்படுகின்றன. ஒருபுறம், ஏனைய விடயங்களை நிலையாக வைத்துக்கொண்டு, மத்திய வங்கி உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு அல்லது அரசாங்கத்திற்கு கொடுகடன் வழங்குகின்ற போது, ​​அது புதிய பணத்தை அச்சிடுகிடுகின்றதுடன் இது தொழில்நுட்ப ரீதியாக உள்நாட்டுச் சொத்துக்களின் திரட்சியென அழைக்கப்படுகின்றது. மறுபுறம், ஏனைய விடயங்களை நிலையாக வைத்துக்கொண்டு, மத்திய வங்கி உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்து அல்லது அரசாங்கத்தினால் பெறப்பட்ட உட்பாய்ச்சல்களிலிருந்து வெளிநாட்டுச் செலாவணியைக் கொள்வனவு செய்கின்ற போது, ​​அது புதிய பணத்தை அச்சிடுகின்றதுடன் இது தொழில்நுட்ப ரீதியாக வெளிநாட்டுச் சொத்துக் திரட்சியென அறியப்படுகின்றது. இவ்விரண்டு சொத்துக்களின் மொத்தப் பெறுமதி ஒதுக்குப் பணமென அழைக்கப்படுகின்றது.


நாட்டிற்கு வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களைப் பெறுவதற்குப் பல வழிகள் காணப்படுகின்றன. பொருட்கள் மற்றும் பணிகள் என்பவற்றிலிருந்தான ஏற்றுமதி வருவாய்கள், தொழிலாளர் பணவனுப்பல்கள், சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள், வெளிநாட்டு முதலீட்டுப் பாய்ச்சல்கள், வெளிநாடுகளிலிருந்தான கடன் பெறுகைகள் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் இலாபங்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டுச் செலாவணி வருமானம் உள்ளடங்கலாக ஏனைய பல்வேறு பெறுகைகள் என்பன ஊடாக இலங்கை வெளிநாட்டுச் செலாவணியைப் பெறுகின்றது. இத்தகைய வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களின் பெரும்பாலானவை வர்த்தக வங்கிகள் தமது கணக்கு வைத்திருப்பாளர்களின் சார்பில் பெறுகின்ற வேளையில் வெளிநாட்டிலிருந்தான ஏனைய அரசாங்கங்கள், கொடை வழங்கும் முகவராண்மைகள் மற்றும் பல்புடை நிதியியல் நிறுவனங்கள் என்பவற்றிலிருந்தான அரசாங்க கடன் பெறுகைகள் அல்லது கொடைகள் என்பன அரசாங்கத்தின் சார்பில் மத்திய வங்கிக்குக் கிடைக்கப்பெறுவதுடன் இது அரசாங்கம் அத்தகைய பெறுகைகளை மத்திய வங்கிக்கு விற்பனை செய்யும் போது மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் சேர்க்கப்படுகின்றது.


அதேவேளை, தனிநபர்கள் மற்றும் கம்பனிகள் அதேபோன்று அரசாங்கம் என்பன வணிகப்பொருட்களின் இறக்குமதிகளுக்கு பணம் செலுத்துவதல், பணிக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல், வெளிநாட்டுப் பயணங்களுக்குச் செலுத்துதல், இலாபங்களை மீளனுப்புதல் மற்றும் வெளிநாட்டுப் படுகடனை மீளச்செலுத்துதல் போன்றவற்றிற்கு வெளிநாட்டுச் செலாவணியை வேண்டி நிற்கின்றன. குறிப்பாக, அரசாங்கம் அதன் வெளிநாட்டுப் படுகடனை மீளச்செலுத்தும் போது மற்றும் அரசாங்கத்திடம் வெளிநாட்டுச் செலாவணி கிடைப்பனவாகக் காணப்படாத பட்சத்தில், அரசாங்கத்தின் சார்பில் மத்திய வங்கியினால் அத்தகைய வெளிநாட்டுப் படுகடன் மீளச்செலுத்தப்படுவதுடன் இது மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களை குறைக்கின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில், அரசாங்கம் இலங்கை ரூபாவிற்கு நிகரான தொகையை மத்திய வங்கிக்குச் செலுத்த வேண்டும் என்பதுடன் பொதுவாக, இது தற்போதுள்ள ரூபா பண இருப்பினையும் குறைக்கின்றது (அரசாங்கம் மத்திய வங்கியிடமிருந்து இலங்கை ரூபாவையும் கடனாகப் பெறாவிட்டால்). வங்கித்தொழில்; துறையானது பொருளாதாரத்திலுள்ள சகல ஆர்வலர்களதும் அத்தகைய சகல வெளிநாட்டுச் செலாவணி வெளிப்பாய்ச்சல் தேவைப்பாடுகளையும் பூர்த்தி செய்த பின்னர், மத்திய வங்கி வங்கிகளிடமிருந்து வெளிநாட்டுச் செலாவணியைக் கொள்வனவு செய்ய முடிவதுடன் இது மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் சேர்க்கப்படும்.


மத்திய வங்கி வெளிநாட்டுச் செலாவணியைத் திரட்டும் போது, மத்திய வங்கி பொருளாதாரத்திற்குப் புதிய பணத்தை வழங்குகின்றது. இதனடிப்படையில் வர்த்தக வங்கிகளுடன் அல்லது அரசாங்கத்துடன் மத்திய வங்கி மேற்கொள்கின்ற வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல்வாங்கல்கள் மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களை மாற்றுவதுடன் நாட்டின் பண இருப்புக்களைப் பாதிக்கின்றன. இருப்பினும், அத்தகைய பண இருப்பின் அதிகரிப்பு தேவையான பண அளவிற்கு அப்பால் காணப்படும் பட்சத்தில் நாட்டில் நாணய விரிவாக்கத்தினை விளைவற்றதாக்கும் பொருட்டு அரச பிணையங்களை அதன் கையிருப்பிலிருந்து விற்பனை செய்வதன் மூலம் மத்திய வங்கி அத்தகைய விஞ்சியளவிலான பண இருப்பினை ஈர்த்தெடுக்க முடியும்.


முன்னர் கூறியது போன்று, மத்திய வங்கி உள்நாட்டுச் சொத்துக்களையும் திரட்ட முடியும். மத்திய வங்கி உள்நாட்டுச் சொத்துக்களைத் திரட்டுகின்ற சில மூலங்கள் காணப்படுகின்றன. வங்கிகளுக்கு வங்கியாளராக, மத்திய வங்கி வங்கிகளுக்கு கொடுகடன் வசதிகளை வழங்க முடியும் என்பதுடன் அது நிகழும் பட்சத்தில், ​​பொருளாதாரத்திற்குப் புதிய பணத்தை வெளியிடுவதன் மூலம் மத்திய வங்கி உள்நாட்டு சொத்துக்களைத் திரட்டுகின்றது. அரசாங்கத்திற்கான வங்கியாளராக, மத்திய வங்கி அரசாங்கத்திற்கும் கொடுகடனை வழங்க முடியும்.


தற்போது, ​​மத்திய வங்கி அரசாங்கத்திற்குக் கொடுகடனை வழங்குவதற்கு இரண்டு முறைகள் காணப்படுகின்றன. நாணய விதிச் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரவுள்ள ஆண்டிற்கான ஒப்புதலளிக்கப்பட்ட தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கமைய மதிப்பிடப்பட்ட அரச வருவாயின் உயர்ந்தபட்சம் 10 சதவீதம் வரை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு முற்பணங்களை வழங்க முடியும். இதற்கமைய, அரசாங்கம் தனது வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தில் அதன் வருமான மதிப்பீடுகளை அதிகரிக்கின்ற போதெல்லாம், அரசாங்கத்திற்குக் கொடுகடன் வசதிகளை வழங்கி அரசாங்கத்தினால் கோரப்படுகின்றவாறு புதிய பணத்தை வெளியிடுவதற்கு மத்திய வங்கி சட்டத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றது. மத்திய வங்கி முதலாந்தர சந்தையிலிருந்து குறுங்கால அரச பிணையங்களையும் (திறைசேரி முறிகளை மாத்திரம்) கொள்வனவு செய்ய முடியும். மத்திய வங்கியினால் முதலாந்தர சந்தையிலிருந்து அரச பிணையங்களைக் கொள்வனவு செய்வதானது பொருளாதாரத்திற்குப் புதிய பணத்தை நிரம்பல் செய்கின்ற முக்கியமானதொரு வழியாகக் காணப்படுவதுடன் இதன் விளைவாக மத்திய வங்கியின் வசமுள்ள அரச பிணையங்கள் அதிகரிக்கின்றன.


மத்திய வங்கி தொடர்புடைய ரூபா பெறுமதியினை அரசாங்கக் கணக்கில் வரவு வைப்பதுடன் அரசாங்கம் அதன் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கு இதனைப் பயன்படுத்துகின்றது. மாறாக, மத்திய வங்கியின் இருப்புக்களிலிருந்து ஏதேனும் அரச பிணையத்தின் முதிர்ச்சியொன்று காணப்படும் போது, ​​அரசாங்கம் அவ்வரச பிணையங்களின் பெறுமதியை மத்திய வங்கிக்கு மீளச்செலுத்த வேண்டும். இதன் விளைவாக, தளப் பண இருப்பு குறைக்கப்படுகின்றது. அதேபோன்று, வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட ஏதேனும் கடன்களை மீளச்செலுத்தினால், அது மத்திய வங்கியின் உள்நாட்டுச் சொத்துக்களைக் குறைப்பதுடன் அதன்மூலம் மத்திய வங்கி ஏற்கனவே பொருளாதாரத்திற்கு வழங்கியிருந்த தளப் பண இருப்பைக் குறைக்கின்றது.


மத்திய வங்கியானது அதன் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் ஊடாக பொருத்தமான சந்தைத் திரவத்தன்மை நிலையொன்றினைப் பேணும் பொருட்டு உள்நாட்டுப் பணச் சந்தையில் செல்வாக்குச் செலுத்துவதுடன் அதுவும் பண இருப்பைப் பாதிக்கின்றது. இதற்கமைய, சந்தைக்குத் திரவத்தன்மையினை வழங்கும் பொருட்டு திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் என்பவற்றை உள்ளடக்கிய அரச பிணையங்களை இரண்டாந்தரச் சந்தையிலிருந்து மத்திய வங்கி கொள்வனவு செய்கின்ற போது, ​​அது மத்திய வங்கியின் உள்நாட்டுச் சொத்துக்களை அதிகரிப்பதுடன் அதன்மூலம் பொருளாதாரத்திற்குப் புதிய பணத்தை வழங்குகின்றது. இது நாட்டின் ரூபா பண இருப்பை அதிகரிக்கின்றது.


அதேவேளை, நாணய விதிச் சட்டத்தின் பிரிவு 39இன் படி, சட்டபூர்வமாக குறித்துரைக்கப்பட்ட இலாபப் பகிர்ந்தளிப்புச் செய்முறையைப் பின்பற்றி ஒவ்வொரு நிதியாண்டிற்கும் பின்னர் 60 நாட்களுக்குள் மத்திய வங்கி அதன் பகிர்ந்தளிக்கக்கூடிய இலாபத்தினை அரசாங்கத்திற்கு மாற்ற வேண்டும். இத்தகைய இலாபப் பகிர்ந்தளிப்புக்கள் பொருளாதாரத்திற்குப் புதிய பண வெளியீட்டினையும் தோற்றுவிக்கின்றன.



2020 இல் ஏற்பட்ட கொவிட்-19 நோய்ப்பரவல் மற்றும் அதன் விளைவாக மேற்கொள்ளப்பட்ட கட்டுப்படுத்தல் வழிமுறைகள் என்பன தாழ்ந்தளவிலான பணவீக்கச் சூழலொன்றில் 2020இல் பொருளாதாரத்தின் மீட்சிக்கு ஆதரவளிக்கும் பொருட்டு மிகவும் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாடொன்றினை மத்திய வங்கி நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது. இவ்வுலகளாவிய நோய்த்தொற்றுக் காலப்பகுதியில், குறிப்பாக அரசாங்கத்திற்கான புதிய வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களின் கடுமையான பற்றாக்குறையொன்று காணப்பட்டமையினால், நாட்டின் வெளிநாட்டுச் செலாவணியைப் பயன்படுத்தி வெளிநாட்டுச் செலாவணியுடன் தொடர்புடைய அநேகமாக சகல கொடுப்பனவுகளும் மேற்கொள்ளப்பட்டன.


இதன் விளைவாக, மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்ததுடன் 2021 ஓகஸ்ட் தொடக்கம் மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் தொடர்ந்தும் எதிர்மறையான நிலைமையினைக் கொண்டிருந்தன. அதேவேளை, உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்து வெளிநாட்டுச் செலாவணியைத் தேடிக்கொள்வது கடினமாக இருந்தமையினால், அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் பொருட்டு மத்திய வங்கி அதன் வரையறுக்கப்பட்ட திரவ ஒதுக்குகளைப் பயன்படுத்தி வெளிநாட்டுச் செலாவணியைச் சந்தைக்கு வழங்கியது.


நாட்டிற்கான தரமிடல் குறைக்கப்பட்டமைக்கு மத்தியில் அரசாங்கத்திற்கான வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களின் பற்றாக்குறையானது மொத்த அலுவல்சார் ஒதுக்குகளின் வீழ்ச்சியை மேலும் மோசமடையச் செய்ததுடன் அரசாங்கத்தின் முதிர்ச்சியடைகின்ற படுகடன் கடப்பாடுகளைப் பூரணப்படுத்துவதற்கு மத்திய வங்கி தொடர்ந்தும் வெளிநாட்டுச் செலாவணியை வழங்கியது. அதேவேளை, உலகளாவிய நோய்த்தொற்றின் விளைவுகளைத் தணிப்பதற்கான அதிகரித்த செலவினங்களுக்கு மத்தியில், 2019இன் பிற்பகுதியிலும் 2020இன் முற்பகுதியிலும் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வரிக் குறைப்புகளுடன் அரசிறை சடுதியாக வீழ்ச்சியடைந்தது.


கிரமமான கொடுப்பனவுகளைக் குறிப்பாக, வெளிநாட்டுப் படுகடனின் நிதியிடல் உள்ளடங்கலாக படுகடன் பணிக்கொடுப்பனவுக் கடப்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு, வெளிநாட்டுச் செலாவணியைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான இலங்கை ரூபாவும் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், மத்திய வங்கியினால் திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்வதன் வாயிலாக மத்திய வங்கியிலிருந்து அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டதுடன் அதன்மூலம் பொருளாதாரத்திற்குப் புதிய பணம் வழங்கப்பட்டது. மத்திய வங்கியினால் திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்வதன் மூலம் உருவாக்கப்பட்ட அப்புதிய பணம் அரசாங்கத்தின் படுகடன் கடப்பாடுகளை நிறைவேற்றும் பொருட்டு அரசாங்கத்தினால் வெளிநாட்டுச் செலாவணியைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டதுடன் அதன்மூலம் மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் குறைக்கப்பட்டு, ஒதுக்குப் பணத்தின் தரத்தினைப் பாதித்தது.


இதற்கமைய, மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் குறைவடைதலினைத் தொடர்ந்து மத்திய வங்கியின் உள்நாட்டு சொத்துக்களின் விரிவாக்கத்தின் காரணமாக ஒதுக்குப் பணத்தின் மீதான தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. ஆதலால், எந்தவொரு பகுப்பாய்வும் பொருளாதாரத்திற்குப் புதிய பணத்தை வழங்குவதிலுள்ள ஒரு பக்கத்தினை மாத்திரம் பகுப்பாய்வு செய்வதனைப் பார்க்க பணம் அச்சிடல் பற்றிய கருத்தொன்றினைப் பெறுவதற்கு மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட மொத்தப் பணத்தைக் கருத்திற்கொள்ள வேண்டும்.


இலங்கை தற்போது தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் எதிர்மறையான நிலைமையினைக் கொண்டுள்ள தீவிரமானதொரு சூழ்நிலையில் உள்ளதுடன் நாடுகள் எதிர்மறையான தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களைக் கொண்டிருப்பதானது மிகவும் அசாதாரணமானதாகக் காணப்படுவதுடன் இது பண இருப்பானது வெளிநாட்டுச் சொத்துக்களினால் பிணையிடப்படாதுள்ள வேளையில் உள்நாட்டுச் சொத்துக்களினால் முழுமையாக பிணையிடப்பட்டுள்ளமையைக் குறிக்கின்றது.


நாடு தேறிய அடிப்படையில் கணிசமானளவிலான வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களைப் பெற்றுக்கொள்ளும் வரை, மத்திய வங்கியின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் உயர் மட்டங்களில் தொடர்ந்தும் காணப்படக்கூடும். பன்னாட்டு நாணய நிதியத்துடனான விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் ஒப்புதலானது மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களை விரைவாகக் கட்டியெழுப்புவதற்கானதொரு வழியினை வகுக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், அதிகரித்த அரசிறைச் சேகரிப்பு மற்றும் அரசாங்கத்திற்கான வெளிநாட்டு நிதியிடலின் மீளாரம்பம் என்பவற்றுடன் இணைந்து அரசாங்கத்திற்கு நிதியிடலிலிருந்து மத்திய வங்கியினைத் தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகளின் அறிமுகத்துடன் மத்திய வங்கி அரசாங்கத்திற்கு நிதியிடலின் ஊடாக தேறிய உள்நாட்டுச் சொத்துக்களின் மேலதிக கட்டியெழுப்புதல் தடுக்கப்படும்.


சாதாரண பொருளாதார நிலைமைகளின் கீழ், ஒரு நாட்டினது ஒட்டுமொத்த நாணய விரிவாக்கமானது பொருளாதாரத்தில் கொடுக்கல்வாங்கல்களின் ஒட்டுமொத்த பெறுமதியுடன் பொருந்த வேண்டும். மக்களின் வருமான மட்டங்களில் பொதுவான அதிகரிப்பு ஏற்படுவதன் காரணமாக எந்தவொரு விஞ்சியளவிலுமான பண அச்சிடலும் பொருளாதாரத்தில் கேள்வி அழுத்தங்களை உருவாக்கக் கூடுமென்பது பொதுவான புரிதலாகும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் மற்றும் பணிகளுக்கான கேள்விக்கு மேலதிகமாக, அதிகரித்த வருமானத்தின் பகுதியொன்றினை பொருட்கள் மற்றும் பணிகளின் இறக்குமதிகளுக்காகத் திருப்பிவிடப்படலாம் என்பதுடன் திறந்த பொருளாதார கட்டமைப்பொன்றினுள் சென்மதி நிலுவை மற்றும் செலாவணி வீதம் என்பன மீதான அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.


ஒரு நாட்டின் மொத்தப் பண நிரம்பலானது நாணயத் தளத்தின் அல்லது ஒதுக்குப் பணத்தின் அடிப்படையிலமைந்துள்ளமையினால் விஞ்சியளவிலான பணம் அச்சிடலானது பணவீக்க அழுத்தங்களுக்கு வழிவகுப்பதனால் மத்திய வங்கியொன்றினால் பொருளாதாரத்திற்குப் புதிய பணத்தை வழங்குவதில் நன்கு கட்டுப்படுத்தப்பட்ட பொறிமுறையொன்று காணப்படுகின்றது


அண்மைய தசாப்தங்களில் பண நிரம்பலிற்கும் பணவீக்கத்திற்கும் இடையிலான இணைப்பானது உலகளவிலும் இலங்கையிலும் பலவீனமடைந்து வருகின்றது. இது இலங்கை உள்ளடங்கலாக உலகெங்கிலுமுள்ள பல மத்திய வங்கிகள், நடுத்தர காலப்பகுதியில் பணவீக்கத்தினை இலக்கிடப்பட்ட மட்டங்களில் நிலைநிறுத்துவதற்காக பணவீக்க இலக்கிடல் நாணயக் கொள்கைக் கட்டமைப்பிற்கு மாறுவதற்கு முக்கியமானதொரு காரணமாகும். உலகளாவிய நிதியியல் நெருக்கடி மற்றும் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று என்பவற்றிற்கு மத்தியில் உலகெங்கிலுமுள்ள பல மத்திய வங்கிகள் அவற்றினது தொடர்புடைய பொருளாதாரங்களைத் தூண்டும் பொருட்டு பண நிரம்பலினை விரிவுபடுத்தின.


இருப்பினும், இத்தகைய விரிவாக்கங்கள் விஞ்சியளவிலான பணவீக்க அழுத்தங்களை உருவாக்கவில்லை. ஆயினும், பொருளாதாரங்கள் மீட்சிக்கான சமிக்ஞைகளைக் காண்பிக்கத் தொடங்கிய போது முக்கிய மத்திய வங்கிகளின் ஐந்தொகைகளில் அத்தகைய விரிவாக்கங்கள் படிப்படியாக மீளப் பெறப்படுகின்றன. இத்தகைய மீளப் பெறலும் எதிர்காலத்தில் உயர்ந்தளவிலான பணவீக்கத்திற்கு வழிவகுக்கக்கூடிய பாதகமான பணவீக்க எதிர்பார்க்கைகளைக் கட்டுப்படுத்த உதவியது. இது விஞ்சியளவிலான பண நிரம்பலானது உயர்ந்தளவிலான பணவீக்கத்திற்கு வழிவகுக்கக்கூடுமென்பதற்கான சாத்தியப்பாடொன்று காணப்படுவதனை காண்பிப்பதுடன் கூட்டுக் கேள்வி மீதான அதன் சாத்தியமான நேரடித் தாக்கத்தின் காரணமாக மட்டுமன்றி செலாவணி வீத அழுத்தங்கள் மற்றும் பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பன மீதான விஞ்சியளவிலான பண நிரம்பலின் சாத்தியமான தாக்கத்தின் காரணமாகவும் உலகெங்கிலுமுள்ள மத்திய வங்கிகள் இது குறித்து தொடர்ந்தும் விழிப்புடன் இருக்கின்றன.


ஜனக எதிரிசிங்ஹ

பணம் மற்றும் வங்கித்தொழில் பிரிவின் தலைவர்/சிரேஷ்ட பொருளியலாளர்

பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

இலங்கை மத்திய வங்கி

No comments

Powered by Blogger.