Header Ads

ஆட்டோவை நாடுகின்றவர்களின் தொகையில் வீழ்ச்சி


குறைந்த செலவில் பயணிக்க வேண்டுமானால் முச்சக்கர வண்டியில் பயணிக்க வேண்டும் என்பதெல்லாம் அக்காலம். முச்சக்கரவண்டியில் பயணம் செய்வதென்பதே இக்காலத்தில் ஒரு தடவைக்கு பல தடவை யோசிக்க வேண்டிய விடயமாகிப் போயுள்ளது.


எத்தகைய வீதியிலும், குறுகலான பாதைகளிலும் செல்லக் கூடியதொரு வாகனம் முச்சக்கரவண்டி ஆகும். கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் புதிய இடங்களுக்குச் செல்ல வேண்டுமானால் முச்சக்கர வண்டி ஓட்டுநரிடம் வழி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.


அந்தளவுக்கு வீதிகளையும், அலுவலகங்களையும், பிரதேசங்களையும் நன்கு அறிந்து, தெரிந்தவர்களாக முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் உள்ளனர்.


முன்னரெல்லாம் குறைந்த முதலீட்டில் கூடிய வருமானத்தை எதிர்பார்க்கும் ஒருவர் தெரிவு செய்யும் தொழில் முச்சக்கர வண்டித்துறையாகத்தான் இருக்கும்.


ஆனால், இன்று அந்த நிலைமை மாறி விட்டது. முச்சக்கர வண்டிப் பயணங்கள் அதிக செலவுமிக்கதாக மாறிவிட்டன. இதனால், முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்துபவர்களின் தொகை அண்மைக் காலத்தில் கணிசமானளவு வீழ்ச்சி கண்டுள்ளது.


இதன் காரணமாக, முச்சக்கரவண்டி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முச்சக்கரவண்டித் தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலையேற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கப்படுகின்றது.


முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் அறவிடுவதே, தற்காலத்தில் மக்கள் முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்துவதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு பிரதான காரணமாகும்.


எரிபொருள் விலையேற்றத்தையடுத்து, நாடளாவிய ரீதியில் முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்கள் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கொழும்பு போன்ற நகரங்களில் அறிவிடப்படும் கட்டணத்தை விடவும் அதிக கட்டணம் அறவிடுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


நிர்ணய கட்டணமின்றி, சிறிய தூரத்திற்கும் அவர்கள் அதிக கட்டணம் கோருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். முச்சக்கர வண்டிகளின் ஓட்டுனர்கள் தகுதி, தராதரம் பாராது பயணிகளுடன் முரண்பட்டுக் கொள்வதையும், வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் பல இடங்களில் காண முடிகின்றது. கௌரவமான பிரஜைகள் பலர் முச்சக்கரவண்டி ஓட்டுநர்களால் அவமரியாதைக்கு உட்படுத்தப்படுகின்ற சம்பங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.


அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு இதுவரை டெக்ஸி கட்டண மீற்றர் பொருத்தப்படவில்லை. இதனால் நினைத்த மாத்திரத்தில் அதிக கட்டணம் அறிவிடுவதாக பயணிகள் கவலைப்படுகின்றனர்.


இதன் காரணமாக மக்கள் தற்காலத்தில் முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்துவதிலிருந்து பெரிதும் தவிர்ந்து கொள்கின்றனர். மாற்றீடாக பொதுப் போக்குவரத்து, துவிச்சக்கர வண்டி அல்லது கால்நடைப் பயணத்தை மக்கள் பெரிதும் விரும்பி வருகின்றனர்.


குறித்த சில முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் இழைக்கும் தவறுகளினால், நல்லுள்ளம் படைத்த முச்சக்கரவண்டித் தொழிலாளர்களின் நற்பெயரும் பாதிக்கப்படுகின்றது. தங்களது தொழிலின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி சாரதியொருவர் கவலை தெரிவித்தார். தவணைமுறை கொடுப்பனவு அல்லது வங்கிக் கடனுக்கு முச்சக்கர வண்டிகளைக் கொள்வனவு செய்தவர்கள் அதிகமுள்ளனர். அது மாத்திரமின்றி நிரந்தர உத்தியோகம் அல்லது வியாபாரத் தொழில் செய்பவர்கள் தங்களது மேலதிக வருமானத்திற்காக பகுதிநேரத் தொழிலாகவும் முச்சக்கரவண்டித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறானவர்களின் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகியுள்ளது.


இவைதவிர முச்சக்கரவண்டித் தொழிலை ஆரம்பம் முதல் இன்றுவரை நேர்மையாகத் செய்பவர்களும் சமூகத்தில் இல்லாமலில்லை.


தங்களுக்கென்று ஒரு வாடிக்கையாளர் கூட்டத்தை வைத்துக் கொண்டு நீதி, நியாயமாகத் தொழில் செய்து, அன்றாடம் தங்களது குடும்பத்தை அவர்கள் கவனித்து வருகின்றனர். ஆனால் ஓட்டோ சாரதிகள் சிலரின் அருவருக்கத்தக்க செயற்பாடுகளினால் நேர்மையானவர்களும் கவலையுமடைகின்றனர்.


முச்சக்கர வண்டிகளுக்கு டெக்ஸி மீற்றர் பொருத்தப்படுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


அது மாத்திரமன்றி, முச்சக்கர வண்டியில் பயணம் செய்பவர்களுக்கு பயண முடிவின்போது பற்றுச் சீட்டு வழங்கப்படுவதும் விதிமுறையாகும். ஆனால் இது குறித்து கிராமப் புறங்களில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் கவனம் செலுத்துவதில்லை.


முகம்மட் றிஸான்


No comments

Powered by Blogger.