Header Ads

யா அள்ளாஹ், ஏழைகளின் தலையெழுத்தை அரசியல் கயவர்களின் அதிகாரப் போட்டியின் காலடியில் எழுதி வைத்து விடாதே...!


 இன்று (புதன் 20.07.2022)  பாராளுமன்றில் அடுத்த 02 வருடங்களுக்கான புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார். 

மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் அதிகாரத்தைப் 

பெற்றுக் கொண்டிருப்பது போராட்டக்காரர்களின் தியாகங்களைக் கொச்சைப் படுத்துகின்ற செயலாகும். 

நாட்டையே அதல பாதாளத்திற்குள் தள்ளி, பாராளுமன்றத்தை அசிங்கப்படுத்தியுள்ள அதி உயர்பீட அரசியல் திருடர்களை அரசியலில் இருந்து விரட்டியடிப்பதே  போராட்டக்காரர்களின் பிரதான  இலக்காகவுள்ளது. 

இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தின் சில திருடர்கள் மீண்டும்  ஜனாதிபதிப் பதவிக்கான போட்டியில் களம் இறக்கப்பட்டிருப்பதும், அத் திருடர்களில் ஒருவரைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தை அதே பாராளுமன்றத்தின் ஏனைய திருடர்கள் பெற்றுக் கொண்டிருப்பதும் நாடு தழுவிய ரீதியில்  போராட்டங்களில் ஈடுபட்டு வரும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பாரிய தியாகங்களைக் கொச்சைப் படுத்துகின்ற செயலாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது. 

மக்களின் பாரிய சக்திக்கு முன்னால் சட்டம், ஒழுங்கு, யாப்பு, பாதுகாப்புத் துறையினரின் அதிகாரங்கள் என அனைத்துமே கைகூம்பி நிற்கும்  என்பதையே கடந்த சில மாதங்களாக இலங்கையில் நாம் அவதானித்து  வருகின்றோம். தோல்வியுற்ற முன்னால் ஜனாதிபதியானவர்  தான் பதவியில் இருந்த போதே விரட்டியடிக்கப்பட்டதும், வெளிநாட்டில் ஒளிந்து தலைமறைவாக இருந்து கொண்டு தனது பதவியை அவர் இராஜினாமா செய்ததும், அவரது சகோதர்ரான முன்னால் பிரதமர் துரத்தியடிக்கப்பட்டதும் சட்டத்தின் படியோ, யாப்பின் படியோ இடம்பெறவில்லை.. மாறாக மக்கள் சக்தியே அவர்களுக்கெல்லாம் ஆப்பு வைத்தது. இவ்வாறான நிலையில் அன்மைக் காலமாக இடம்பெற்று வரும் சகல அரசியல் புரட்சிகளுக்கும் முழுமையாக வித்திட்டு வருகின்ற மக்களின் விருப்பத்தின் படியே 

புதிய ஜனாதிபதித் தெரிவு இடம்பெற்றாக வேண்டும். மக்களின் கருத்தும், தெரிவுமே அங்கு  முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.

யாப்பு மற்றும் சட்டத்தின் படிக்கே புதிய ஜனாதிபதித் தெரிவு இடம்பெறும் எனக் கூறிக் கொண்டு பாராளுமன்றத் திருடர்களிடம் குறித்த புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத அநியாயமாகும். 

அதிகாரச் சண்டையாலும், வோட்டு வங்கியை நிறப்பிக் கொள்ள பணத்திற்காக ஆள் வாங்குகின்ற அசிங்கத்தாலும் நாடாளுமன்றம் கடந்த சில தினங்களாகவே நாறிக் கொண்டிருக்கின்றது.     

மக்கள் எழுச்சி காரணமாகவே இவ்வளவும் நடந்திருக்கையில் அடுத்த இரண்டு வருடங்களிற்கான ஜனாதிபதியாக யார் இருக்கப்போகின்றார் ? என்பதை மக்களால் தீர்மானிக்க  முடியாது போனால்……… 

மீண்டும் போராட்டங்கள் வெடித்துக் கொண்டே இருக்கும், நிலையான ஆட்சி முறைமை இருக்காது, சட்ட ஒழுங்கு மேலும் கடுமையாகச் சீர்குலையும், மக்கள் சட்டத்தைக் கையில் எடுப்பர், பல அரசியல் வியாபாரிகளிற்கு எதிராக கோ கம சுலோகங்கள் உருவாகிக் கொண்டிருக்கும், கலவரங்களும், வன்முறைகளும் வெடித்துக் கொண்டிருப்பதை யாராலும் தடுக்க முடியாது போகும், வறுமை அதன் உச்சத்தைத் தொடும், பண வீக்கமும் பொருளாத நெருக்கடியும் நாட்டையே வாட்டி எடுக்கும், சட்ட ஒழுங்கு இல்லாது போயுள்ளது எனக் காரணம் கூறப்பட்டு “இராணுவ அடக்குமுறை ஆட்சி” உருவாகவும் கூடும்.

திருடர்கள் தமக்கான மகா திருட்டுத் தலைதவரை தெரிவு செய்ய மக்களின் போராட்டமும் தியாகமும் அ்டகு வைக்கப்படலாகாது. அடுத்தடுத்த போராட்டங்களின் கருப்பொருள்கள் “அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில் மக்களின் வகிபாகம் யாது” என்பதை மையப்படுத்தியதாகவே  அமைய வேண்டும். 

அள்ளாஹ்வே நன்கறிந்தவன். அவனே நிலையான தீர்வைத் தரக்கூடியவன். 

யா அள்ளாஹ்! 

அன்றாட ஆகாரத்திற்காகவேனும் வழியின்றி அழுது புலம்பிக் கொண்டிருக்கும் ஏழைகளின் தலையெழுத்தை இவ் அசிங்கமான அரசியல் கயவர்களின் அதிகாரப் போட்டியின் காலடியில் எழுதி வைத்து விடாதே.   

அபூ அஹ்மத் ஷfபீக். 

20.07.2022.

No comments

Powered by Blogger.