Header Ads



ஜோர்தானில் உள்ள இலங்கை, தூதரகத்தின் முன்மாதிரிமிக்க செயல்

(நா.தனுஜா)

ஜோர்தானிலுள்ள இலங்கைப் பிரஜைகளின் நலனை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அங்குள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்டிருப்பதுடன், தற்போதைய நெருக்கடி நிலையில் தொழில்வாய்ப்புக்களை இழந்த இலங்கையர்களுக்குத் தொழில்வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது.

இதுகுறித்து ஜோர்தானிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஜோர்தானில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் நிலைவரம் குறித்து இலங்கைத் தூதரகம் மிகவும் அவதானிப்புடன் செயற்பட்டுவரும் அதேவேளை, ஜோர்தானிலுள்ள இலங்கைப் பிரஜைகளின் நலனை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக தொழிலுக்குச் செல்ல முடியாத நிலையிலிருக்கும் இலங்கையர்களுக்கு அவசியமான உலர் உணவுப்பொருட்களைத் தூதரகம் தொடர்ச்சியாக விநியோகித்து வருகின்றது. இலங்கை அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் என்பவற்றால் வழங்கப்பட்ட நிதியின் மூலம் இதுவரையில் ஜோர்தானில் உள்ள 576 இலங்கைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் ஜோர்தானிலுள்ள முக்கியமான சில ஆடையுற்பத்தித் தொழிற்சாலைகளுடன் இலங்கைத்தூதரகம் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதுடன், தற்போதைய நெருக்கடியில் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் அந்தத் தொழிற்சாலைகளில் 46 இலங்கையர்களுக்குத் தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. தூதரகத்தின் கோரிக்கையை ஏற்று, இலங்கையர்களுக்குத் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தமையின் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை உறுதிசெய்தமைக்கு தூதரகம் வரவேற்புத் தெரிவித்திருக்கிறது.

அதேபோன்று தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களுடனும் தூதரகம் தொடர்புகளைப் பேணிவருகிறது. ஜோர்தானில் கடந்த மார்ச்மாத இறுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கையர் ஒருவர் இனங்காணப்பட்டதுடன், அவர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறிவிட்டார். அதன் பின்னர் தொற்றுக்குள்ளான எந்தவொரு இலங்கையரும் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் ஜோர்தானிலுள்ள இலங்கையர்களுக்கு அவசியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இலங்கைத் தூதரகம் தயார்நிலையில் இருப்பதுடன், தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து அறிவிப்பதற்கென வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் சேவையிலுள்ள தொலைபேசி இலக்கமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.