Header Ads



நளீம் ஹாஜியார் கண்கலங்கிச் சொன்ன அந்த 3 ஹம்தலாக்கள்


1987 ஆம் ஆண்டு எமது பட்டமளிப்பு விழா நளீம் ஹாஜியாரின் தலைமையில் தான் இடம் பெற்றது முதலாவது பட்டமளிப்பு விழாவிற்கு மெளலானா அபுல் ஹஸன் அலி நத்வி வருகை தந்திருந்தார்கள்.

எமக்கான பட்டமளிப்பு விழா இடம் பெற்ற தினம் பகலுணவு பெரும் விருந்தாக டைனிங் ஹாலில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

அங்கு ஹாஜியார் சிறு உரையொன்றையாற்ற எழுந்து நின்று " அல்ஹம்து லில்லாஹ்" என்று சொன்னார்.. அழுது விட்டார் மீண்டும் சொன்னார் உணர்ச்சி மேலீட்டால் பேச முடியவில்லை, ஹால் ஊசி விழுந்தால் கேட்குமளவு மெளனித்துப் போனது.

சுதாகரித்துக் கொண்டு மூன்றாவது முறை அல்ஹம்து லில்லாஹ் என்று சொன்னார்.

அன்பிற்குரிய பட்டதாரிகளே உங்களுக்கு பட்டச் சான்றிதல்களை வழங்கி விட்டு அதற்காக காலையில் ஆடிடாரியத்தில் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி விட்டேன், எங்களது கடமைகளை நாங்கள் செய்து விட்டோம் இனி நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி உங்கள் கடமைகளை செய்யுங்கள்.
நான் இப்போது இங்கே நன்றி சொன்னது ஒரு விசேஷமான காரணத்துக்கு இப்போது எனது மனதில் பட்டது.

எத்தனை கோடி வருஷத்துக்கு முன்னால அல்லாஹ் இந்த உலகத்தை படைத்திருப்பான், யோசிச்சி பாருங்கள், அதுல எத்தனை ஆயிரம் படைப்புகள படைச்சிருப்பான், அவனுடைய கழாவுலயும் கத்ரலயும் உள்ளபடி எல்லாவற்றையும் தீர்மானிச்சு இயக்கிக் கொண்டிருக்கிறான்.

அல்ஹம்து லில்லாஹ்..
அல்ஹம்து லில்லாஹ்..
அல்ஹம்து லில்லாஹ்.. அழுகை..

இந்த பூமியை மண்ணை கோடிக்கணக்கான வருஷத்துக்கு முதல் படைத்த நாயன்..

இந்த 40 ஏக்கர் காணியையும் படைச்ச நேரத்துல அவனுடைய கழாவுல இந்த நளீமுடைய பெயரையும் எழுதி வச்சிருப்பானே! 

அந்த நளீம் தன்னுடைய தீனுக்காக ஜாமியாஹ் ஒன்றை இந்த மண்ணில் உருவாக்க வேண்டும் என எழுதி வச்சிருப்பானே!

(உணர்ச்சி மேலீட்டால் மெளனம்)

அதுக்காக அவனுக்கு நான் இதுபோல எத்தனை ஆயுல் தந்தாலும் நன்றி சொல்லி முடிக்க ஏழுமோ.. என்னோட நீங்கள் எல்லோருமாக அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்லுங்கோ!

எல்லோருமாக விருந்துண்டு குதூகலத்துடன் அன்றைய நாளை கொண்டாடினோம்..

இன்றுவரை ஹாஜியாரின் அந்த வார்த்தைகள் எனது உள்ளத்தின் ஆழத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது, அடிக்கடி ராபிதா நளீமிய்யீன் கூட்டங்களிலும் நெருக்கமானவர்களிடமும் அதனை சொல்லிக் கொள்வேன்..
ஏனென்றால் எனக்கும் ஒரு அலாதியான பெருமை, மகிழ்ச்சி ஆனந்தம் எல்லாமே... 

அந்த யுக புருஷரின் பெயரை நளீம் என்று கோடானுகோடி வருடங்களுக்கு முன் தனது கழாவிலும் கத்ரிலும் குறித்து வைத்த நாயன் இந்த மண்ணில் வாழ்ந்து வளர்ந்து இன்று அந்த நளீமின் பெயரை நாமும் நளீமீக்களாக தாங்க வேண்டுமென றிஸ்கையும் தண்ணீரையும் சன்மார்க்க கல்வியையும் இங்கு குறித்து வைத்திருந்தானே...

அதற்கும் ஒரு படி மேலாக பட்டச் சான்றிதல் பெறும் முன்னரே அங்கு ஒரு விரிவுரையாளராகவும் நியமிக்கப் படாடிருந்தமை எனது ஆனந்தத்தை பேரானந்தமாக்கி இருந்தது.

அல்ஹம்து லில்லாஹ்..
அல்ஹம்து லில்லாஹ்..
அல்ஹம்து லில்லாஹ்..!

ஆனால் ...

அது அமானிதத்தை சுமந்து உரியவர்களிடம் ஒப்படைத்த சாதனை வீரனின் ஹம்துகள் அவர் அழுதார் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அந்த வார்த்தைகள் வந்தன...

எம்மீது சுமத்தப்பட்டுள்ள அமானிதங்கள்.. நாங்கள் அங்கு கழித்த நாட்கள் கற்றவைகள் பெற்றவைகள்.. அந்த முஜத்தித் எம்மீது சுமத்தியுள்ள அமானிதங்கள்..!

கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே இந்த பிரபஞ்சத்தில் இந்த பால்வெளி மண்டலத்தில் இந்த சூரிய குடுமம்பத்தில் இந்த புவியில் இந்த நாட்டில் இந்த நளீம் எனும் முஜத்தித் மீதும் அவரது தோழர்கள் மீதும் சுமத்திய அந்த அமானிதம் எத்தகைய மகத்துவமானது..

சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே! என்று அந்த உருக்கத்துடன் அந்த ஆழத்துடன் சொன்ன பொழுது தான்.. அந்த குர்ஆனிய வசனத்திற்கான தப்ஸீர் விளக்கம் உடல் அறிவு ஆன்மா என எல்லா அங்கங்களையும் அதிரவைத்து ஆட்டங் காணச் செய்தது..

"நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதை சுமந்தான். நிச்சயமாக மனிதன் அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான்."

இந்த அமானிதம் மனித குலத்தின் மீது...

நபிமார்களுடைய ரஸுல்மார்களுடைய அவர்களது வாரிசுகளான ஹவாரிய்யீன்கள் சஹாபாக்கள் தாபியீன்கள் இமாம்கள் முஜத்திதுகள் உலமாக்கள் எல்லோர் மீதும் சுமத்தப்பட்டது..

இந்த உலகத்தின் பால் இந்த உம்மத்தின் பால், இந்த தேசத்தின் பால், இந்த சமூகத்தின் பால்.. என எம்மீது சுமத்தப்பட்டுள்ள இமாலய அமானிதம் எத்தகையது..

இந்த அமானிதத்தை நாம் சுமப்பதில் இடம், காலம், நாம் பெற்றவைகள், கற்றவைகள் என எல்லா பெளதீக காரணிகளுக்கும், வேறுபாடுகளுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும் அப்பால் நாம் மொத்தமாகவே முழுமையடைவோம்..
ஆனால், ஒவ்வொருவரும் தனித்தனியாகவே அழைக்கப் படுகிறோம்.. தனித்தனியாகவே விசாரிக்கப்படுவோம்..

ஹாஜியார்.. அவரோடு இருந்த ஸ்தாபக தோழர்கள், அறிஞர்கள் ஏ எம் ஏ அஸீஸ், நீதிபதி அமீன், தாஸீம் நத்வி, மஸுத் ஆலிம், இப்ழால் சேர், பழீலுல் ஹக் சேர், வதூத் மெளலவி, கபூர் நானா, கலாநிதி ஷுக்ரி.. ஷெய்க் கைருல் பஷர்...

இந்த வரிசையில்.. எமக்கான அழைப்பு வரமுன்... தயாராகிக் கொள்வோம்..

எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களது பாவங்களை குறை குற்றங்களை பலவவீனங்களை மன்னிப்பானாக, எங்களது எஞ்சிய காலத்தில் எம்மை மென்மேலும் எம்மீது சுமத்தப்பட்டுள்ள அமானிதம் குறித்த பிரக்ஞையுடன் வாழ்ந்து அவனது திருப்தியை வென்றவர்களாக அவனிடம் மீளுகிற பாக்கியத்தை தருவானாக!

உங்களது துஆக்களில் எங்களையும் மறந்து விடாதீர்கள்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

1 comment:

  1. நளீமிக்கள் வாழும் ஒவ்வொரு கிராமங்களிலும் புனித குர்ஆனின் போதனையின்படியான, அனைவருக்கும் நீதியானதும், முன்மாதிரியானதுமான ஆட்சியை உருவாக்கி மக்களுக்கு சேவை செய்வது, அல்லாஹ்வுக்கும், நளீம் ஹாஜியாருக்கும், இந்நாட்டுக்கும் நன்றி செலுத்துவதற்கு ஒப்பானதாகும்.

    ReplyDelete

Powered by Blogger.