Header Ads



அரசியலும், இராஜதந்திரமும் முஸ்லிம்சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் ஆயுதங்களாகும்…!

நாம் நிகழ்வுகளால் உந்தப் படுகின்றோம் நிகழ்ச்சி நிரல்களை மறந்து விடுகின்றோம். ஆங்காங்கே இடம்பெறுகின்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நன்கு திட்டமிடப்பட்டு அரசியல் உள்நோக்கங்களுடன் அரங்கேற்றப்படும் கொடூரமான நாடகங்களாகும். சொல்லப்படுகின்ற உடனடிக் காரணங்கள் யாவும் இட்டுக்கட்டப்படும் புனைகதைகளாகும்.

ஹலால் முதல் அளுத்கமை வரை முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டித் தனங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன, முஸ்லிம் அரசியல் தலைமைகள் எவ்வாறு போனாலும் சிவில் சன்மார்கத் தலைமைகள் முஸ்லிம்களை சரியாக வழிநடத்தியமை முஸ்லிம்கள் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டமை , சமாதான சகவாழ்வு நிகழ்ச்சி நிரலை தீவிரப் படுத்தியமை நாடு தழுவிய அமைதியின்மை ஏற்படுவதனை தவிர்த்தது. இது குறித்து பல தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் திருப்தியை வெளியிட்டிருந்தன.

இலங்கையில் 2015 ல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தமை உண்மைதான், அதற்கு முஸ்லிம்களும் பிரதான பங்களிப்பினைச் செய்தார்கள், தமிழர்களும் செய்தார்கள், தேசிய அரசியல் சக்திகளும் செய்தன, பின்னால் சர்வதேச பிராந்திய சக்திகளும் செய்தன.

ஆனால், இனவாத சக்திகள் அழிந்துவிடவில்லை, அவர்களை பின்னாலிருந்து கருவிகளாக இயக்குகின்ற பிராந்திய மற்றும் சர்வதேச மேலாதிக்க சக்திகள் அழிந்துவிடவில்லை, மீண்டுமொரு ஆட்சிமாற்றத்தை விரும்புகின்ற புதிய சக்திகள் தோன்றுவதற்கான அதே வழிமுறைகளை புதுப் புது வடிவங்களில் களநிலவரங்களில் கையாள்வதற்கான சத்தியப் பாடுகளும் இல்லாமல் இல்லை.

முதலாம் இரண்டாம் தரப்புகளை விடவும் மூன்றாம் நான்காம் தரப்புகள் விடயத்தில் நாம் இரட்டிப்பு அவதானத்துடன் செயற்படல் வேண்டும், எமது சமயோசிதமும், சாமர்த்தியமும், சாணக்கியமும் இராஜ தந்திரமும் இங்கு தான் தேவேப்படுகின்றன, உள்வீட்டில் பங்காளிச் சண்டைகளுக்கல்ல.

அரசியலும் இராஜ தந்திரமும் இந்த உம்மத்து பறிகொடுத்து பரிதவிக்கும் பிரதான ஆயுதங்களாகும்.
கடந்த காலங்களில் இனமத வெறி கடும்போக்கு நிகழ்ச்சி நிரல்களை தீவிரமாக முன்னேடுத்த சக்திகள் நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதான பதவிகளை வகிப்பதனையும் நாம் அறிவோம்.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சவால்களை இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ, பிரதேச ரீதியாகவோ , மொழி ரீதியாகவோ நாம் அணுகாது, தேசத்தில் உள்ள சகல முற்போக்கு தேசிய சக்திகளுடனும் இணைந்து அவற்றை தேசிய பாதுகாப்பிற்கும், சமாதான சகவாழ்விற்கும், இனங்களுக்கிடையிலான, நல்லிணக்கத்திற்கும், தேசத்தின் ஸ்திரத் தன்மைக்கும், அபிவிருத்தியிற்கும் விடுக்கப்படும் சவால்களாக நாம் எதிர்கொள்ளல் வேண்டும்.

இனவாத மதவாத சக்திகள் எந்த தரப்பில் இருக்கின்றார்கள் என்பதனை விட குறிப்பிட்ட தரப்புக்கள் அத்தகைய சக்திகளை எவ்வாறு கடந்த காலங்களில் கையாண்டார்கள், எதிர்காலத்தில் கையாள்வார்கள் என்பதிலேயே நாம் அவதானமாக இருக்க வேண்டும்.

அவ்வப்போது சந்தர்பங்களை சமாளிக்கவும் பின்னர் மறந்துவிடவும் கூடிய உஷார் மடையர்கள் போல் செலாற்றுவதில் அல்லது எதிர்வினையாற்றல்களோடு நின்று கொள்வதில் நாம் பிரசித்தமாக இருக்கின்றோம்.

ஏதேனுமொரு பிரச்சினை தோன்றுகிற பொழுது உடனடியாக அரசியல் வாதிகளையோ, பிரபலங்களையோ , கொழும்பிலுள்ள ஸ்தாபனங் களையோ அணுகுவது வழமையாக இருக்கின்றது, சமகாலத்தில் அரசியல் ரீதியாகவும், இயக்க ரீதியாகவும் தமக்குள்ளே முரண் பட்டு , பிளவுண்டுள்ள முஸ்லிம் சமூகம் ஒற்றுமையின்மையால் பல்வேறு துறைகளிலும் வலுவிழந்து பாரிய தலைமைத்துவ வெற்றிடம் ஒன்றுடன் பெரும் நம்பிக்கையீனத்துடன் இருக்கின்றமை யாவரும் அறிந்த விடயமே.

அம்பையும் ஈட்டியையும் யார் யார் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகின்றார்கள் என்பதே எம்முன்னுள்ள பிரதான கேள்வியாகும்.

தேசிய அரசியல் கள நிலவரங்களை, தேசிய அரசியல் தலைமைகளின் திரிசங்கு நிலைமைகளை கவனத்தில் கொண்டு சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம் அரசியல் சிவில் சன்மார்கத் தலைமைகள் கூட்டுப் பொறுப்புணர்வுடன், சாணக்கியமாகவும், சாதுரியமாகவும் சமூகத்தின் தேசிய நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க வேண்டும்!

தேசிய பிராந்திய மாவட்ட மட்டங்களில் மாத்திரமன்றி , ஊர் மற்றும் மஹா ல்லா மட்டத்திலான சகல தரப்புக் களையும் உள்வாங்கிய அடிமட்ட தலைமைத்துவ கட்டமைப்புகளை -மஜ்லிஸ் அல்-ஷூராக்களை- (ஆலோசனை சபைகளை ) பள்ளி வாசல் நிர்வாகங்களுக்கு புறம்பாக அமைத்துக் கொள்ள வேண்டும். சமூகத்தில் உள்ள உலமாக்கள், படித்தவர்கள், தொழிலதிபர்கள், இளைஞர், மாதர் பிரதி நிதிகள் ,அரசியல்,சமய இயக்கப் பிரதி நிதிகள் என சகல தரப் புகளையும் கொண்ட நிரந்தரமான ஆலோசன சபைகளை நாம் அமைத்துக் கொள்வதன் மூலம், ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும் மிகச் சரியாக , ஆழமாக ஆராயப் பட்ட தீர்வுகளை, வழிகாட்டல்களை மொத்தத்தில் தலைமைத் துவத்தை ஒவ்வொரு கிராமும் அவ்வப்போது பெற்றுக்கொள்ள முடியும்.

"தெளிவான தேசிய சமூக பார்வையும்,கூட்டுப் பொறுப்பும், மூலோபாய திட்டமிடல்களும் இல்லாமல் பயணிக்கும் ஒரு சமூகம் அடுத்தடுத்த சமூகங்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை,அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் ஆயுதங்களாகும்…!”

இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன்

1 comment:

  1. the first issue is no one is there to lead the muslims community. second issue is JAMMAIYATHUL ULAMA also not representing all the muslims of the island, mostly their functions are limited between west and middle part of island. even JAMMAIYATHUL ULAMA prepair to lead all the muslims of the country also most of the jamath (SLTJ, CTJ, JAMATHEY ISLAM AND ETC) will not accept the leadership of JAMMAIYATHUL ULAMA. now the challenge is to gather all the muslims under one leadership, at least to face the common issues of the muslims community.

    ReplyDelete

Powered by Blogger.