Header Ads



மகிந்தவின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு – தடை உத்தரவு பிறப்பிக்கவும் நீதிமன்றம் மறுப்பு

பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமன இடைநிறுத்தத்துக்கு எதிராக மஹிந்த தரப்பு உயர்நீதிமன்றத்தில் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் அந்த மேன்முறையீட்டை நிராகரித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக, மகிந்த தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிராக, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

பிரதமராக மகிந்த ராஜபக்சவும், ஏனைய அமைச்சர்களும், தமது பதவிநிலைப் பணிகளை ஆற்றுவதற்கு தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக, மகிந்த தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது.

உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்களான ஈவா வணசுந்தர, புவனேக அலுவிகார, விஜித மழலகொட ஆகியோரைக் கொண்ட குழாம் இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த மேன்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களைக் குழாமே, விசாரிக்க வேண்டும் என்று  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சார்பில், அவரது சட்டத்தணிகளால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட  நகர்த்தல் மனு பரிசீலிக்கப்பட்டு அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

ஈவா வணசுந்தர, புவனேக அலுவிகார, விஜித மழலகொட ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாமே இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அத்துடன், மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் என்பதால், இந்த மனுவை, நீதியரசர் ஈவா வணசுந்தர விசாரிக்கக் கூடாது என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதியரசர் ஈவா வணசுந்தரவின் ஓய்வு அறிவிப்பை நீதியரசர் புவனேக அலுவிகார வெளியிட்டார். அவர் விசாரித்து தீர்ப்பளிக்கும் கடைசி மனு இதுவே என்றும், அவர் கூறினார்.

இதையடுத்து, காலை  தொடக்கம் மாலை வரை மகிந்த ராஜபக்சவின் மேன்முறையீட்டு மனு மீது விசாரணைகள் நடத்தப்பட்டன.

இதன் முடிவில் இன்று மாலை தமது தீர்ப்பை நீதியரசர்கள் குழாம் அறிவித்தது.

இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று மூன்று நீதியரசர்களும் அறிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.