Header Ads



மென்டிஸ் நிறுவனத்திடம் 3 மில்லியன் ரூபா பெற்ற சுஜீவ

மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், அர்ஜூன் அலோசியசுக்குச் சொந்தமான, மென்டிஸ் நிறுவனத்திடம் இருந்து, 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பெற்றுக் கொண்டுள்ளார்.

கொழும்பு – கோட்டே நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில்  நேற்று மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் யசந்த கோத்தாகொட சமர்ப்பித்த பி அறிக்கையிலேயே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பணத்தை இராஜாங்க அமைச்சர் தனது தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

2015-16 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மூன்று கட்டங்களாக தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை அவர் பெற்றிருக்கிறார்.

அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இந்தக் காசோலைகளில் ஒன்றை, 2015ஆம் ஆண்டு கொம்பனி வீதியில் உள்ள வங்கியொன்றி மாற்றியுள்ளார்.

மேலும் இரண்டு காசோலைகள், அமைச்சரின் பாதுகாப்புக்கான காவல்துறை அதிகாரிகளால், மாற்றப்பட்டுள்ளன. என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன மகேந்திரனின் 3.2 மில்லியன் ரூபா கடனட்டைக் கொடுப்பனவையும், மென்டிஸ் நிறுவனம் கொடுத்து தீர்த்திருப்பதாகவும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, மென்டிஸ் நிறுவனத்திடம் இருந்து 3 மில்லியன் ரூபா  பெறுமதியான காசோலைகளை தனது பரப்புரைக் குழு பெற்றுக் கொண்டது பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்று  இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமக்கான பரப்புரைகளை ஐந்து குழுக்கள் மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

“இந்தக் குழுக்கள் நலன்விரும்பிகளிடம் இருந்து நன்கொடைகளை பெற்றன. எல்லா நிதி நடவடிக்கைகளையும் அமல் என்பவரே கையாண்டார்.

அந்தக் குழுக்கள் மென்டிஸ் நிறுவனத்திடம் நன்கொடை பெற்றது பற்றி நான் அறியவில்லை. அறிந்திருந்தால், அதனைப் பெறுவதற்கு அனுமதித்திருக்கமாட்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.