Header Ads



போராடும் மரம், கங்கணத்துடன் மயில்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரசாரங்கள் யாவும் ஓய்வதற்கு இன்னும் 6 நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், பிரதான அரசியல்கட்சிகள் அனைத்தும் இறுதிக்கட்ட பரப்புரையை நேற்றுமுதல் தீவிரப்படுத்தியுள்ளன.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன சூறாவளிப் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளன.

மேற்படி கட்சிகளின் தலைவர்களும் உயர்மட்ட பிரமுகர்களும் நேரடியாகவே களமிறங்கி பரப்புரைப் போரை வழிநடத்துவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இரவு, பகல் பாராது பல தொகுதிகளிலும் ஒரே நாளில் தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதனால் தேர்தல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, இது உள்ளூராட்சிஅதிகாரத்தை தீர்மானிக்கின்ற தேர்தலாக இருந்தாலும், தேசியக் கட்சிகளுக்கு அனைத்து விதத்திலும் முக்கியத்துவம்பெற்ற தேர்தலாகவே பார்க்கப்படுகின்றது. மத்தியில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கும், அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குமான கீழ்மட்ட அரசியல் இயந்திரமாக உள்ளூராட்சி சபைகள் விளங்குவதால் அதில் வெற்றிக்கொடியை பறக்கவிடவேண்டும் என்பதில் கட்சிகள் குறியாக இருக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி பொது வேட்பாளராகக் களமிறங்கிய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன மீண்டும் சுதந்திரக் கட்சிக்குள் சென்று அதன் தலைமைப்பொறுப்பை ஏற்றபின்னர் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். எனவே, இதில் வெற்றிக்கனியை ருசித்து தனது பக்கமே மக்கள் நிற்கின்றனர் என்பதை மஹிந்த அணிக்குக் காட்டவேண்டிய தேவைப்பாடு அவருக்கிருக்கின்றது.

சிலவேளை, சுதந்திரக் கட்சியைவிட மஹிந்த அணி கூடுதல் வாக்குகளைப்பெற்றால் அது மைத்திரி அணிக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். மாறாக, மஹிந்த அணி மண்கவ்வினால் கூட்டு எதிரணியிலுள்ள பலர் மைத்திரி பக்கம் குத்துக்கரணம் அடித்துவிடுவர்.

அதன்பின்னர் கூட்டு எதிரணி அரசியல் ரீதியாக அநாதையாகும் நிலைமை காணப்படும். ஆகவே, இவ்விரு அணிகளுக்கும் பலத்தைக் காட்டவேண்டிய கட்டாயத் தேவைப்பாடு இருக்கின்றது.

அதேபோல் பிணைமுறி தலையிடியால் திக்குமுக்காடிப்போயுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, குட்டித் தேர்தலில் தமக்கு மக்கள் ஆணை கிடைக்கும் என்றும், அதன்பின்னர் இந்தத் தலைவலி தீரும் என்றும் உறுதியாக நம்புகின்றது. வாக்குவேட்டையில் பின்னடைவு ஏற்படும்பட்சத்தில் தெற்கு அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்படக்கூடும். அது ஐ.தே.கவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் கனவை சூனியமாக்கக்கூடும் என்று அரசியல் நிபுணர்களால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மாற்று கூட்டமைப்பொன்று அவசியம் என்ற தொனியில் வடக்கு, கிழக்கில் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்தச் சவாலை முறியடித்து தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தாங்கள்தான் என்பதை நிரூபிக்கவேண்டிய கட்டாய சூழ்நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. மாறாக, மாற்றுக்கட்சிகள் வெற்றிநடைபோடும் பட்சத்தில் மத்திய அரசுடன் பேரம்பேசும் சக்தியிலும் அது தாக்கத்தை செலுத்திவிடக்கூடும்.

இதற்கிடையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மலையகத்தில் கடும்போட்டி நிலவுகின்றது. மலையக மக்கள் தமது பக்கமே நிற்கின்றனர் என்று இருதரப்பினரும் அறிவித்துவருகின்றனர். எனவே, மக்கள் எவர் பக்கம் என்பதை நாடிபிடித்துப் பார்க்கும் தேர்தலாகவே இந்தக் குட்டித் தேர்தல் பார்க்கப்படுகின்றது. முஸ்லிம் மக்களின் ஏகோபித்த ஆதரவு தமக்கே இருக்கின்றது என்ற அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் கடுமையாகப் போராடிவருவதுடன், அந்த நிலைமையை மாற்றி தாமும் களத்தில் இருக்கின்றோம் என்றதொரு நிலையை ஏற்படுத்துவதற்காக மக்கள் காங்கிரஸும் கடும் கங்கணத்துடன் செயற்பட்டுவருகின்றது.

அடுத்து நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலிலும் உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் முடிவுகள் தாக்கம் செலுத்தும் என்பதாலும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு மக்கள் ஆணை இருக்கின்றதா என்பதை அறிந்துகொள்வதற்காகவுமென மிக முக்கிய அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கான முன்னோட்டமாக மக்கள் கருத்துக்கணிப்பாகவே குட்டித் தேர்தல் பார்க்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.