Header Ads



தேசியகீதம் இசைத்தபோது, கண்ணீர்விட்ட மொகமது சிராஜ்

ராஜ்கோட்டில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேற்று இரண்டாவது டி20 போட்டியில் களம் கண்டன.  ஹைதரபாத்தைச் சேர்ந்த 23 வயது மொகமது சிராஜுக்கு தேசிய அணியில் பங்கேற்கும் முதல போட்டி இது. ஓய்வுபெற்ற ஆஷிஸ் நெஹ்ராவுக்கு பதில் சிராஜ் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ஏழ்மையானக் குடும்பத்தைச் சேர்ந்த சிராஜ் சாதாரண ஆட்டோ ஓட்டுநரின் மகன். 

ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தாய் நாட்டு அணிக்காக விளையாட வேண்டுமென்பது கனவாக இருக்கும். சிராஜூம் அதற்கு  விதிவிலக்கல்ல. ராஜ்கோட்டில் நேற்றைய ஆட்டத்தில் அவர் அணியில் சேர்க்கப்பட்டார். போட்டித் தொடங்கும் முன் மைதானத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டட போது, சிராஜின் கண்களில் இருந்து தாரைதாரையாக நீர் வழிந்தது.  கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறினர்.

கடந்த ஐபிஎல் ஏலத்தின் போது, சிராஜை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.2.6 கோடிக்கு வாங்கிய போதுதான் கிரிக்கெட் உலகு அவரை அடையாளம் கண்டுகொண்டது. இவரின் அடிப்படை விலை ரூ.20 லட்சம்தான். 10 மடங்கு அதிகமாக விலைக்கு வாங்கப்பட்டதால், கிரிக்கெட் உலகம் இவரைத்   திரும்பிப் பார்த்தது. கடந்த ஐபிஎல் சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். 

முதல் ஆட்டத்தில் களமிறங்கியது குறித்து சிராஜ் கூறுகையில், 'ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்தான் எனது ரோல் மாடல். ஆஸ்திரேலிய அணியின் சொத்து போல அவர் இருந்தார். நானும் ஒருநாள் இந்திய அணிக்கு அவரைப்போல ஆவேன். தந்தை ஓரு ஆட்டோ ஓட்டுநர். என்னை கிரிக்கெட் வீரராக்க அவர் எவ்வளவோ தியாகங்கள் செய்துள்ளார். ஐபிஎல் பணக் கஷ்டத்தைத் தீர்த்தது. தந்தையை இனிமேல் ஆட்டோ ஓட்ட விடமாட்டேன். வீட்டில் அமர்ந்து மீதி காலத்தை அவர் சந்தோஷமாக கழிக்க வேண்டும். தாய் நாட்டுக்காக நான் விளையாட வேண்டுமென்பது அவரின் கனவு. அதை நான் நிறைவேற்றி விட்டேன்' என்கிறார் பெருமையுடன்.

1 comment:

Powered by Blogger.