Header Ads



சோமாலியாவில் குண்டுத் தாக்குதல் - 230 பேர் வபாத்


சோமாலியா நாட்டின் தலைநகரான மொகதிஷுவின் பிரதான பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 230 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் உள்ள ஹோட்டலின் வாசலில், வெடிபொருட்களோடு வந்த ஒரு லாரி வெடித்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.

அல்-ஷபாப் குழு 2007-ல் கிளர்ச்சியை தொடங்கியதில் இருந்து, இதுவே சோமலியாவில் நடந்த மோசமான தாக்குதல்.

வெடிகுண்டு தாக்குதலில் இறந்தவர்களுக்கு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அதிபர் முகம்மது அப்துல்லாஹ் "ஃபார்மஜோ" முகம்மது அறிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை நடத்தியது யார் என தெளிவாக தெரியவில்லை. அரசுக்கு எதிராக போராடிவரும், அல்-ஷபாப் குழுவின் தொடர் இலக்காக மொகதிஷு இருந்து வருகிறது.

ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் பேசிய போலீஸ் அதிகாரி இப்ராஹிம் முகமது இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அச்சங்கள் இருப்பதாக கூறினார். "300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அதில் சிலர் மோசமாக காயமடைந்துள்ளனர்" என்கிறார் அவர்.

மடினா மாவட்டத்தில் நடந்த இரண்டாவது வெடிகுண்டு தாக்குதலில், இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்தில் உள்ள, பிபிசியின் சோமாலியா செய்தியாளர் கூறுகையில், சஃபாரி ஹோட்டல் முழுமையாக இடிந்து தரைமட்டமாகிவிட்டதாகவும், இடிபாடுகளுக்கு இடையே மக்கள் சிக்கியிருக்கலாம் என எண்ணுவதாகவும் கூறினார்.

மொகதிஷூவில் வசிக்கும் முஹதிஎன் அலி , ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "இதுவரை நான் பார்த்ததிலேயே இதுதான் மிகப்பெரிய குண்டு வெடிப்பு, அந்த பகுதியையே அது முழுமையாக அழித்துவிட்டது" என்றார்.

No comments

Powered by Blogger.