Header Ads



இஸ்லாத்தை நான் ஏற்றுக்கொள்வது, அல்லாஹ்வின் நாட்டம் - பௌத்த பேராசிரியர் கனோக்

(ஆதில் அலி சப்ரி)

எனது மேசையில் எப்போதும் அல்குர்ஆனொன்று இருக்கும். நான் ஒவ்வொருநாளும் அதனை வாசிப்பேன். அல்குர்ஆனில் இருந்து மூன்று வசனங்களை தெரிவுசெய்து எமது பாடசாலையிலும் காட்சிப்படுத்தியுள் ளேன். முஸ்லிம்களை நடுநிலையான சமூகமாக ஆக்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகின்றான். இலங்கை முஸ்லிம்களும் நடுநிலை சிந்தனையுடன் செயற்படவேண்டும் என்று தாய்லாந்தின் பட்டானி பல்கலைக்கழக பௌத்த பேராசிரியர் கலாநிதி கனோக் வொங்ட்ரன்கோன் தெரிவித்தார். 

ஜாமிஆ நளீமியா இஸ்லாமிய கலாபீடமும் மற்றும் நொலேஜ் பொக்ஸ் ஊடக நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலங்கை- தாய்லாந்து சூழலில் இஸ்லாம் மற்றும் பௌத்தத்திற்கிடையிலான சகவாழ்வு என்ற விரிவுரையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கலாநிதி கனோக் வொங்ட்ரன்கோனின் உரையின் தொகுப்பை இங்கே தருகின்றோம்.

நான் உங்கள் முன் உரையாற்ற கிடைத்த சந்தர்ப்பத்தை மகிழ்ச்சியானதாக கருதுகின்றேன். இங்கு வருகைதந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இஸ்லாம்- பௌத்தத்திற்கிடையிலான சகவாழ்வு பற்றிய எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். நான் ஒரு பௌத்தனாக இருந்த போதும் இஸ்லாத்தின் மீது உறுதியான ஆர்வம் கொண்டவன். நான் ஒரு உலமாவோ, இஸ்லாமிய அறிஞனோ அல்ல என்பதை மனதில் கொள்க. வெறுமனே, இஸ்லாத்தைக் கற்கும் மாணவன். எனக்கு அரபு மொழியும் தெரியாது. அது மிகக் கடினமான மொழி. இஸ்லாமிய விடயங்களை ஆங்கிலத்திலேயே வாசிக்கிறேன். இஸ்லாத்தை நல்ல நோக்கத்திற்காகவே கற்கிறேன். என்னால் ஏதும் தவறுகள் இடம்பெற்றால், அதற்காக ஆரம்பத்திலேயே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். 

இலங்கைத் தீவில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே பதட்டமான சூழ்நிலை வளர்ந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. யாரும் அதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. நாம் அது குறித்து சிந்தித்து, ஒன்றாக இணைந்து பணியாற்ற முயற்சிக்கவேண்டும். நாட்டை இது முஸ்லிம் பகுதி, இது பௌத்த பகுதியென்று துண்டுபோட முடியாது. நாம் எவ்வாறு ஒற்றுபட்டு வாழ முடியும் என்பது பற்றி சிந்திக்க  வேண்டும். 

நாம் அண்மையில் உயர்தரப் பாடசாலையொன்றை ஆரம்பித்தோம். விஞ்ஞான பாடத்தில் விபச்சாரம் பற்றி கலந்துரையாடினோம். அதுபற்றிய அல்குர்ஆனின் போதனைகளை ஆராய்ந்
தோம். தீர்வுகள் குறித்து பேசினோம். மாணவர்களும் இலகுவில் புரிந்துகொண்டார்கள். விஞ்ஞாணத்தில் இஸ்லாமிய விழுமியங்கள் உள்ளடக்கப்படவேண்டும். மதச் சார்பற்ற பாடங்கள் மதத்தால் வழிகாட்டப்பட வேண்டும். மதச்சார்பற்ற அறிவு எம்மை அழிவுக்கு இட்டுச் செல்லும். மதக் கல்வியை மதச் சார்பற்ற கல்வியில் இருந்து பிரிக்க முடியாது. எனவே, ஜாமிஆ நளீமிய்யாவில் ஆசிரியர்களுக்கு மதரீதியாக வழிகாட்டும் துறைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். 
நான் கடந்த 10 வருடங்களாக சகவாழ்வு பற்றி பேசிவருகின்றேன். அடுத்த பரம்பரை மாணவர்கள் முரண்பாடுகள் இன்றி சமாதானமாக வாழவேண்டும் என்பதே எனது  நோக்கம். பிரிவினைகள் எம்முடன் முடிந்துவிடட்டும். சிறுவர்களின் பரம்பரை சமாதானமிக்கதாக இருக்க வேண்டும். நான் இஸ்லாத்தைப் படித்தால்தானே முஸ்லிம்கள் சிந்திக்கும் விதத்தை அறிய முடியும். யாரும் யாருக்கும் மதங்களை திணிக்கமுடியாது. ஒவ்வொருவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். 

எனது மேசையில் குர்ஆனொன்றிருக்கும். நான் ஒவ்வொருநாளும் அதனை வாசிப்பேன். நான் அல்குர்ஆனிலிருந்து மூன்று வசனங்களை தெரிவுசெய்து எமது பாடசாலையில் காட்சிப்படுத்தியுள்ளேன். முதலாவது வசனத்தை அல் பாத்திஹாவிலிருந்து தெரிவுசெய்தேன். அது இஹ்தினாஸ் சிராதல் முஸ்தகீம் " எங்களுக்கு நேரான பாதையை காட்டுவாயாக என்ற பிரார்த்தனையாகும். எனது பாடசாலை நேர் வழிகாட்டும் பாடசாலையாக இருக்கும் என்றே பெற்றோரிடம் கூறுவேன். இரண்டாவது, அல் பகராவிலிருந்து.  வகதாலிக ஜஅல்னாகும் உம்மதன் வஸதன் " நாம் உங்களை நடுநிலையான சமூகமாக ஆக்கியுள்ளோம். நீங்கள் நடுநிலையாக இருக்கவேண்டும். 

நீங்கள் வஸதிய்யாவாக இருக்க வேண்டும் இலங்கையிலும் நடுநிலையான வஸதிய்ய சமூகமொன்றே தேவை.  மூன்றாவது அல்குர்ஆன் வசனத்தை பாடசாலை வெளியேறும் வாயிலில் பொறித்துள் ளோம். அதுதான்,  ரஹ்மதன் லில் ஆலமீன்" அகிலத்தாருக்கான அருட்கொடையாகும்.  நீங்கள் இஸ்லாத்தைப் படித்து நடுநிலைமையாக நடைமுறைப்படுத்துங்கள். நீங்கள் படித்தவற்றை உலகத்தாருக்கு கூறவேண்டும். முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி அகிலத்தாருக்கே. இஸ்லாம் நடைமுறை மார்க்கமாகும். 

ஹராம், ஹலால் கோட்பாடு மிக முக்கியமானதாகும். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை போதிக்கின்றது. எனினும் இன்று அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும்  புரிந்து கொள்ள ஆரம்பித் தேன். மக்கள் என்னிடம் எப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என்று கேட்டார்கள். நான் அது அல்லாஹ்வின் நாட்டமாகும் என்று  கூறினேன். நான் இஸ்லாத்தின் விழுமியங்களையே பார்க்கின்றேன். இஸ்லாம் நம்பிக்கைகள், நடைமுறைகள் என இரண்டு பகுதிகளைக் கொண்டது.  இஸ்லாத்தின் இஹ்லாஸ், அமானத் என்ற விடயங்கள் பௌத்தர்களுடனும் பகிரப்பட வேண்டும். 

No comments

Powered by Blogger.