Header Ads



பெரும்பான்மையினரின் கைகளில், கிழக்கின் ஆட்சி - எச்சரிக்கிறார் பசீர்

-UL மப்றூக்-

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் ஒத்திவைக்கப்படும் காலம் முழுவதும், பெரும்பான்மையினரின் கைகளிலேயே கிழக்கின் ஆட்சி இருக்குமெனவும், அவர்கள் நினைத்ததை அக்காலத்துக்குள் அவர்கள் அடைவார்கள் எனவும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் அரசியல் மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் நிலையிலேயே, இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாண சபை கலைந்ததும், அதிகாரிகளுக்கு மேலதிகமாக, சபையில் அரசியல் ரீதியாக அதிகாரம் பொருந்தியவர்கள், இருவர்தான் எஞ்சுவர்: ஒருவர் ஆளுநர் ரோகித போகொல்லாகம; மற்றவர் சபைத் தவிசாளர் கலப்பதி ஆகியோராவர்.

“மாகாண சபைகள் சட்டத்துக்கு அமைவாக, சபையொன்றின் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் தவிசாளர் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்களின் பதவிகள், சபை கலைந்தவுடன் வறிதாகும். அடுத்த தேர்தல் முடிந்து, புதிய சபை பதவியேற்கும் வரை, தவிசாளர் பதவி தொடரும்.

“எனவே, கிழக்கு மாகாண சபை கலைந்த பின்னும், இரண்டு பெரும்பான்மையினரின் அதிகாரம் நிலைத்து நிற்கும். ஆதலால், கிழக்கின் அதிகாரம் முழுமையாக அடுத்த தேர்தல் வரை, கிழக்கு சிறுபான்மைச் சமூகமான பெரும்பான்மையினரின் கைகளிலேயே இருக்கும்.

“ஆளுநர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்; தவிசாளர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர். இவ்விரு தேசியக் கட்சிகளும், மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப் போடுவதால் நன்மை அடையும்.

“மாகாண சபைத் தேர்தல் எத்தனை வருடங்களுக்கு ஒத்திப் போடப்படும் எனத் தெரியாது. ஒத்திப் போடப்படும் வரையான அத்தனை காலமும், கிழக்கில் தனிப் பெரும்பான்மையின ஆட்சியே நடைபெறும்” என்றார்.

No comments

Powered by Blogger.