Header Ads



சிறிலங்காவுக்கு போர்க்கப்பல் வழங்கும் ரஷ்யா, கெலிஹெப்டர் பராமரிப்பு நிலையத்தையும் நிறுவ திட்டம்

சிறிலங்காவுக்கு ஜிபாட் 3.9 (Gepard 3.9) ரகத்தைச் சேர்ந்த போர்க்கப்பல்களை வழங்குவது தொடர்பான உடன்பாடு குறித்த பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

மலேசியாவின் லங்காவி நகரில் நடந்து வரும் லிமா-2017 எனப்படும், அனைத்துலக கடல்சார் மற்றும் விமான கண்காட்சியில் பங்கேற்றுள்ள, இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ரஷ்யாவின் சமஷ்டி சேவை பிரதித் தலைவர் மிகெய்ல் பெருக்கோவ், ரஷ்ய ஊடகமான ஸ்புட்னிக்கிற்கு இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா தரப்புடன் இணைந்து வரைவு உடன்பாடு தயாரிக்கப்பட்டுள்ளது. சில தொழில்நுட்ப விபரங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் மாத்திரம் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன என்று, மிகெய்ல் பெருக்கோவ் தெரிவித்துள்ளார்.

ஜிபாட் 3.9 போர்க்கப்பல்கள், போர்க்காலத்தில், எதிரிகளின்  விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்கிகளை எதிர்த்துப் போரிடக் கூடியவை. பாதுகாப்பு வழங்கல் ,ரோந்துக் கடமைகள், தரையிறக்க நடவடிக்கைக்கான சூட்டாதரவு, கண்ணிவெடிகளை விதைத்தல் போன்றவற்றில் இந்தக் கப்பல்களை ஈடுபடுத்த முடியும்.

வியட்னாமுக்கு இரண்டு ஜிபாட் 3.9 போர்க்கப்பல்களை 2011ஆம் ஆண்டு ரஷ்யா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2

சிறிலங்காவில் பயன்படுத்தப்படும் ரஷ்யத் தயாரிப்பு உலங்கு வானூர்திகளின், பராமரிப்பு சேவை நிலையம் ஒன்றை சிறிலங்காவில் அமைப்பதற்கான யோசனையை ரஷ்யா முன்மொழிந்துள்ளது.

இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ரஷ்யாவின் சமஷ்டி சேவை பிரதித் தலைவர் மிகெய்ல் பெருக்கோவ் இந்த முன்மொழிவைச் செய்துள்ளதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியாவில் நடைபெறும் லிமா-2017 இராணுவ கண்காட்சியில் பங்கேற்றுள்ள இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ரஷ்யாவின் சமஷ்டி சேவை பிரதித் தலைவர் மிகெய்ல் பெருக்கோவ் இதுதொடர்பாக தகவல் வெளியிடுகையில்,  உலங்குவானூர்தி பராமரிப்பு சேவை நிலையம் ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தையும், கவசவாகனங்களுக்கான உதிரிப்பாகங்களை வழங்குவதற்கான திட்டம் ஒன்றையும் சிறிலங்காவிடம் சமர்ப்பித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் 12,  எம்.ஐ-8, மற்றும் எம்ஐ-17 போக்குவரத்து உலங்குவானூர்திகள், 6, எம்,ஐ-24 பி தாக்குதல் உலங்குவானூர்திகள், மற்றும் 36, பிஎம்பி- காலாட்படை சண்டை வாகனங்கள், மற்றும் 50, பிரிஆர்-80 துருப்புக்காவி கவசவாகனங்கள் என்பன தற்போது பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.