Header Ads



சிறிலங்கா கடற்படையின் முதலாவது மரைன் படைப்பிரிவு - அமெரிக்க கடற்படையும் பயிற்சி


சிறிலங்கா கடற்படையின் முதலாவது மரைன் படைப்பிரிவு பற்றாலியன், பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,  சிறிலங்கா கடற்படையின் மரைன் படையணியின் அணிவகுப்பை பார்வையிட்டு, அவர்களுக்கான சின்னங்களை இன்று அணிவித்தார்.

இந்த நிகழ்வு முன்னாள் முள்ளிக்குளத்தில் உள்ள சிறிலங்கா கடற்படையின் எஸ்எல்என்எஸ் பரண தளத்தில் இடம்பெற்றது.

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டுள்ள முதலாவது மரைன் பற்றாலியனில், 6 அதிகாரிகளும், 158 படையினருமாக மொத்தம் 164 மரைன் கொமாண்டோக்கள் பயிற்சியை முடித்து வெளியேறியுள்ளனர்.

கடலிலும் தரையிலும் போரிடும் வகையில், அமெரிக்க கடற்படையின் மரைன் படைப்பிரிவை ஒத்ததாக இந்த மரைன் பற்றாலியன் சிறிலங்கா கடற்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா மரைன் கொமாண்டோக்களுக்கு அமெரிக்க கடற்படையும் பயிற்சிகளை அளித்திருந்தது.

இன்றைய பயிற்சி நிறைவு நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, சிறிலங்காவின் முப்படைகளின் தளபதிகள், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், பாதுகாப்பு ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிறிலங்கா மரைன் படைப்பிரிவினர், போர் ஒத்திகைகளையும் மேற்கொண்டனர்.




No comments

Powered by Blogger.