Header Ads



ஞானசாரருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை - நிரபராதி என்கிறார் அவர்

நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பாக பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை மேல் முறையிட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது.

கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதியன்று, ஊடகவியலாளர் பிரகித் எக்னளிகொட காணாமல் போனது தொடர்பான வழக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போது நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் முலம், கலகோட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சாட்டி கோமாகம மாஜிஸ்ட்ரேட் நீதிபதி ரங்க திசநாயக்க புகாரொன்றை சமர்பித்திருந்தார்.

இதன்படி சட்ட மா அதிபரினால் ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்ட பின்னர் தான் நிரபராதி என்று ஞானசார தேரர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதன் பின்னர் விசாரணை எதிர்வரும் மே மாதம் 16-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய ஞானசார தேரர் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் காரணமின்றி விளக்க மறியலில் வைக்கப்பட்டதை எதிர்த்து தான் அன்று நீதிமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

ஆனால் நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கத்துடன், தான் அதனை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.