Header Ads



உறுதியான ஈமானுடன் வாழ்வோம்..!

இஸ்லாம் என்ற மார்க்கமானது யார் வீட்டுச் சொத்துமல்ல, யாரும் உரிமை கொண்டாடி விட முடியாத உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான மார்க்கமாகும். இத்தகைய மார்க்கத்தை ஏற்றுப் பின்பற்றிக் கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள், இன்னும் இந்த மார்க்கம் சென்றடையாத உள்ளங்களுக்கு இந்த மார்க்கத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உணர்வற்றிருக்கின்றனர்.

இந்த நிலை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் வாழ்ந்த அந்த சத்தியத் தோழர்களின் நிலைக்கு முற்றிலும் மாற்றமானது. அவர்கள் எந்தக் கணம் இஸ்லாத்திற்குள் நுழைந்தார்களோ, அதன் மறு நிமிடம், தான் அறிந்து கொண்ட இந்த இறைத்தூதை அறியாத மக்களுக்கு எடுத்துச் சென்று சொல்வதில் விரைந்து செயல்பட்டார்கள்.

உதாரணமாக, துஃபைல் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் குறிப்பிடலாம். அவர் எந்தக் கணம் இஸ்லாத்திற்குள் நுழைந்தாரோ அடுத்த விநாடி, தன்னுடைய கோத்திரத்தவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல விரைந்தார், தாமதிக்கவில்லை. அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட புதிய நபர் தான். ஆனால் இன்றைக்கு பிறவி முஸ்லிம்களாக இருந்து கொண்டு, இஸ்லாத்தைப் பற்றி அடுத்த மக்களுக்கு எடுத்துரைப்பதில் அலட்சியமாக இருந்து கொண்டிருக்கும் நம் மக்கள் போல அவர் இருக்கவில்லை. மாறாக, தான் எந்த சத்தியத்தை சத்தியம் என்று ஏற்றுக் கொண்டாரோ, அதன் மறுவிநாடி, தான் ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது, இந்த அழைப்பை செவி மடுக்கவியலாமல் இருக்கும் தன்னுடைய குலத்தவர்களும் பெற்றுக் கொள்ள வேண்டும், இந்த மார்க்கத்தை அவர்களிடம் சேர்ப்பித்து விட வேண்டும் என்ற ஆவலில், அது தன் மீது இறைவன் சுமத்திய கடமை என்பதையும் உணர்ந்து அதனை நிறைவேற்ற விரைந்து சென்றதைப் பார்க்க முடிகின்றது.

இன்னும் இறைத்தோழர்கள் எப்பொழுது எந்தக் கணம் இஸ்லாத்தை சத்திய மார்க்கம் என ஏற்றுக் கொண்டார்களோ, அப்பொழுதே இறை நிராகரிப்பாளர்களுக்கும் தங்களுக்குமிடையில் தெளிவானதொரு வரையறையை ஏற்படுத்திக் கொண்டார்கள். துமாமா பின் ஜன்தல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் யமாமா பகுதியின் சிற்றரசராக இருந்தார்கள், அவர்களை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைது செய்து மதீனத்துப் பள்ளியில் கட்டி வைத்திருந்த சமயம், துமாமாவே இஸ்லாத்தை ஏற்றுக் கொள் என்று மூன்று நாட்களாக அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து வைத்தார்கள்.

மூன்றாவது நாள், அவரது கட்டுக்களை அவிழ்த்து விடச் சொல்லி அவரை விடுதலை செய்த பொழுது, எந்த நிர்ப்பந்தமும் இன்றி அவராகவே பக்கத்தில் இருந்த தோட்டத்திற்குச் சென்று குளித்து விட்டு வந்து, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட துமாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், உம்ரா செய்யும் நிமித்தமாக மக்காவிற்குச் சென்ற பொழுது, அங்கிருந்த குறைஷிகளைப் பார்த்துச் சொன்னார்கள், ''குறைஷிகளே! நான் சொல்வதைக் கேட்டுக் கொள்ளுங்கள்! (இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படுவதை நிறுத்திக் கொள்ளுங்கள், இல்லையெனில்) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அனுமதி இல்லாமல், யமாமா பகுதியிலிருந்து ஒரு மணிக் கோதுமை கூட உங்களை வந்து சேராது.'' (புகாரீ, ஃபத்ஹுல் பாரி 8ஃ78).

துமாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த அறிவிப்பு, அவர்களுக்கிருந்த ஈமானின் வேகத்தை நமக்கு உணர்த்துவதோடு, இஸ்லாத்திற்கெதிரான சக்திகளை வலுவிழக்கச் செய்வதற்காக தன்னுடைய அதிகார பலத்தைப் பிரயோகித்து, அவர்கள் மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி, அதன் மூலம் இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு தன்னுடைய வளங்களைப் பயன்படுத்திய அவர்களது ஈமானிய வேகத்தைப் பார்க்க முடிகின்றது. இன்னும் இன்றைய காலகட்டம் முஸ்லிம்களை அச்சுறுத்தல்கள் மூலமும் அடக்குமுறைகள் மூலம் ஈமானை விட்டும், இஸ்லாத்தை விட்டும் வெகு தூரம் அவர்களை அப்புறப்படுத்தக் கூடிய முயற்சிகளை இஸ்லாத்தின் எதிரிகள் செய்து வருகின்றார்கள். திடீர் இழப்புகள், அச்சம், பயம் ஆகியவைகள் திடீரென முஸ்லிம்களை சுற்றிச் சுழற்றும் பொழுது, இஸ்லாம் இதற்கு என்ன மருத்துவத்தை வைத்திருக்கின்றது என்று ஆராயமால், திருமறையிலிருந்தும், சுன்னாவிலிருந்தும் படிப்பினை பெறாமல், கண்கள் நிலை குத்தி நிற்கின்ற நிலையில் முஸ்லிம்கள் தங்களது ஈமானை இஸ்லாத்தை இழந்து விடக் கூடிய நிலையைப் பார்க்கின்றோம்.

அவர் தான் எதற்காக தன்னுடைய ஈமானை இழந்தேன் என்பதை, தனக்கேற்பட்ட பயத்தின் மூலம் அதனை நியாயப்படுத்த முனைகின்றார். அதேவேளையில் தனக்கேற்பட்ட அந்த சூழ்நிலைத் தாக்கத்தின் காரணமாக எழுந்த பிரச்னைகளை உறுதியான மனதுடன் அவர் எதிர்த்துப் போரடவில்லை. இவை அனைத்தும் அவருக்கு ஏற்பட்டு விட்ட ஈமானின் பலவீனத்தைத் தான் குறிக்கின்றது, இன்னும் அவரது ஈமான் உறுதியாக இறைவனுக்காகவே வாழ்கின்றோம், அவனிடமே நம்முடைய திரும்புதல் இருக்கின்றது என்ற நிலைப்பாட்டுக்கு அவர் வரவில்லை, இன்னும் அவரிடம் உண்மையிலேயே உறுதியான ஈமான் இருந்திருக்கும் என்றால், தனக்கேற்பட்ட அந்தச் சூழ்நிலையில் அவர் உறுதியான இறை நம்பிக்கையுடன் நேர்மையான முறையில் நடந்திருப்பார், வழி தவறியிருக்க மாட்டார். இஸ்லாத்தில் உறுதியாக இருந்திருப்பார்.

ஷேக் முஹம்மது ஸாலிஹ் அல் முனஜ்ஜத் ''ஈமானின் பலவீனங்கள்''

No comments

Powered by Blogger.