Header Ads



'கிழக்கு முதலமைச்சை முஸ்லிம்களுக்கு சொந்தமானதாக காட்டி, முரண்பாட்டை வளர்க்க முயற்சி'

கிழக்கு மாகாண முதலமைச்சு என்பது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானது என்கின்ற ஒரு தோற்றப்பாட்டினை உருவாக்கி சமூகங்களுக்கிடையில் பிளவினை ஏற்படுத்தி அரசியல் இலாபம் காண ஒரு சில அரசியல் வாதிகள் முற்படுகின்றனர் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாபில் நசீர் அஹமட் அவர்களினால் மாகாண சபை நிதியிலிருந்து இரண்டு கோடி ரூபா செலவில் ஏறாவூர் அல் முனீரா பாடசாலைக்கான இரண்டு மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்...

கிழக்கு மாகாண முதலமைச்சர் முதலமைச்சராக பதவியேற்று ஒரு வருடம் எட்டு மாதங்களே கடந்த நிலையில் கிழக்கு மாகாண சபை மூலம் அதிகளவான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம். கோடிக்கணக்கான ரூபாய்களை மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அபிவிருத்திக்கு மாத்திரமன்றி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏனைய நான்கு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அபிவிருத்திக்கெனவும் ஒதுக்கியுள்ளோம்.

கல்வி வளர்ச்சி, வேலையில்லா பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்பு தொடர்பான பிரச்சினை, வேலையில்லா இளைஞர்களின் பிரச்சினை மற்றும் 13ஆம் திருத்த சட்டத்தினை அமுல்படுத்துவது தொடர்பான அனைத்து விடயங்களின் தீர்வுகளுக்குமான முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகின்றோம். 13ஆம் திருத்த சட்டம் என்பது இலங்கை அரசியல் யாப்பில் உள்ள ஒரு விடயமாகும். 

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த சட்ட மூலங்களை அமுல்ப்படுத்துவோம் என்று சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களே அதற்கு தடையாகவும் உள்ளமை மிகவும் வருந்தத்தக்கதாவுள்ளது. 13ஆம் திருத்த சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்கின்ற விடயத்தில் எமது முதலமைச்சரும் உறுதியாக உள்ளார்.

13ஆம் திருத்த சட்டம் நூறு சதவீதம் அமுல்ப்படுத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே வட, கிழக்கிலுள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் சிறுபான்மை  மக்களுக்கான  75 சதவீதமான தீர்வுகளையேனும் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

அல் முனீரா பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாபில் Z.A. நசீர் அஹமட் மற்றும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் M. ஷிப்லி பாறூக், மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் M.I. சேகு அலி மற்றும் மாவட்ட பாடசாலைகள் வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் A.M.M. ஹக்கீம்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.    

No comments

Powered by Blogger.