Header Ads



கிழக்கு மாகாணத்திற்கு செய்யும், வரலாற்றுத் துரோகம்

13ஆவது திருத்த சட்டத்தை அவமதிக்கும் வகையில் பொறுப்பற்ற விதத்தில் கல்வியமைச்சின் செயலாளர் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்க விடயம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் இன்றைய அமர்வு இடம்பெற்றபோது கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு தென் மாகாணங்களில் நியமனம் வழங்க வேண்டாம் என கொண்டு வரப்பட்ட பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்று போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மாகாணத்தின் முதலமைச்சர் என்ற ரீதியில் தாமும் கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபானி அவர்களும் கிழக்கு மாகாண ஆசிரிய நியமனங்கள் குறித்த தகவல்களை கோரி விடுத்த கோரிக்கைக்கு அமைய கல்வியமைச்சின் செயலாளர் கவனத்தில் கொள்ளாமை கண்டிக்கத்தக்க விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கல்வியியற் கல்லூரிகளில் கற்ற ஆசிரியர்களின் நியமனங்கள் தொடர்பான தகவல்கள் வெளிவந்த போது கடந்த மாதம் இது தொடர்பான தகவல்களை கோரி எழுத்துமூலம் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை பதிலளிக்காமை கிழக்கு மாகாண சபையை அவமதிக்கும் செயலாகும் என கிழக்கு முதல்வரின் உரையில் சுட்டிக்காட்டப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கான பாரிய குறைபாடு இருக்கையில் தாம் அது குறித்து பல தடதவகள் கல்வியமைச்சின் செயலாளருக்கு அறிவித்தும் அதனையும் உதாசீனப்படுத்தி கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு வெளிமாகணங்களில் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கூறினார் .

எவ்வாறாயினும் வட மாகாணத்தால் கோரப்பட்ட அத்தனை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு எவ்வித பரீட்சைகளும் இன்றி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் கல்வியமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

மாகாணங்கள் தொடர்பில் கல்வியமைச்சு காட்டும் பாரபட்சம் கிழக்கு மாகாணத்துக்கு செய்யப்படும் வரலாற்றுத் துரோகமாகும் என குறிப்பிட்டார் .

அத்துடன் கிழக்கு மாகாண டிப்பளாமா கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்கள் தொடர்பில் முதலமைச்சரும் கல்வியமைச்சரும் நாளை பிரதமரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் இந்தப் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் டிப்ளோமா கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு மாகாணத்திலேயே நியமனங்களை வழங்குவதற்கு முதலமைச்சர் உட்பட மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மாத்திரமன்றி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுத்து வருவதாக முதலமைச்சர் கூறினார்.

No comments

Powered by Blogger.