Header Ads



நீதி ஒழுங்காக நிலைநாட்டப்பட வேண்டுமாயின்,


அரசாங்கம் பாரிய வகையில் ஊழலில் சிக்கியுள்ளது. முன்னேறிச் செல்ல வேண்டுமாயின் இந்த சிக்கலில் இருந்து கட்டாயமாக விடுபட வேண்டும். ஜனவரி 08 ஆந் திகதி ஜனாதிபதி சிறிசேன மீது மக்கள் வைத்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டுமாயின் கடந்த அரசாங்கத்தின் புகழ் பெற்ற ஊழல்வாதிகள், மோசடிக்காரர்களுக்கு கட்டாயமாகத் தண்டனை வழங்கப்பட வேண்டும். எனினும் அரசாங்கம் அதனைச் செய்ய முடியாத பலவீன நிலையில் உள்ளது.

முதலாவது, அரசாங்கத்திற்கு ஊழலைத் தடுப்பதற்கான அரசியல் உறுதிபூணல் உள்ளது என்பதைக் காண முடியவில்லை. ஒருபுறம் ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதனையும், மறுபுறம் ஊழல்வாதிகளுடன் கூட்டிணைவதையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. முதலாவதாகக் குறிப்பிட்டது ஒரு தேசிய நோக்கமாகும். இரண்டாவதாகக் குறிப்பிட்டது ஒரு அரசியல் கட்சியின் நோக்கமாகும். தனக்கு கட்சியை விட நாடு தான் முக்கியம் என்று ஜனாதிபதி தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். அதனால் அவர் நாட்டின் தேவைக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். இந்த இரண்டையும் செய்ய முற்படும்போது அரசாங்கத்திற்கு ஊழலுக்கு எதிரானதோர் அரசியல் உறுதிபூணல் இல்லை என்பதாகவே தெரிகிறது.

இரண்டாவது, ஊழல்வாதிகளுக்கு எதிராகவுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரித்தல், மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றன அவற்றுடன் தொடர்பான அரச நிறுவனங்களினால் வினைத்திறனற்ற முறையில், மிக மெதுவாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் என்பன அதற்கான சிறந்த உதாரணங்களாகும். அந்த நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டாலும், அடுத்து அது நீதிமன்றத்தினுள் முடங்கிப் போவதைக் காண்கிறோம். இன்று அவ்வாறான வழக்கொன்றினை விசாரிக்கும் நீதிமன்றம், அடுத்த வழக்கு விசாரிப்பு தினமாக இன்னும் ஆறு மாதம் கடந்த திகதியொன்றைக் குறிக்கிறது. வருடமொன்றில் இரு தடவைகள் மாத்திரமே வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த அனைத்துப் பலவீனங்களினதும் பொதுவான விளைவாகக் காணப்படுவது ஜனவரி 08 இன் மக்கள் எதிர்பார்ப்பு கருத்திற் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்படுவதாகும். அந்த நிலைமையைப் பொறுத்துக் கொள்வதற்கு இந்த நாட்டில் மாற்றமொன்றை எதிர்பார்த்த எவரும் விரும்ப மாட்டார்கள். எனினும், ராஜபக்ஷ அரசாங்க காலத்தைப் போன்று காட்டு நீதிமன்றங்களை ஏற்பத்தி, காட்டுச் சட்டங்கள் ஊடாக இதனைச் செய்யும் தேவை மாற்றத்திற்குப் பங்களிப்பு வழங்கிய எவருக்கும் இல்லை. அந்த அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்திற்கு ஏற்ப, நியாயமான முறையில் இடம்பெற வேண்டும். 

அந்த இடத்திலேயே அரசாங்கத்தின் அரசியல் உறுதிபூணல் முன்னிலை பெற வேண்டியுள்ளது. 

தற்போது காணப்படும் நிறுவன அமைப்பில் இந்த விசாரணைகளை மேற்கொள்வதற்கான இயலாமைகள், தடைகள் காணப்படின், அவற்றை முறையாக மேற்கொள்வதற்காக வேண்டி அந்த நிறுவனங்களினுள் தனியான பிரிவுகளை நிறுவ முடியும். அதற்குத் தேவையான வளங்களையும், வசதிகளையும் வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அடுத்து, இக்குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காகத் தினமும் கூடுகின்ற விசேட நீதிமன்றமொன்றை நிறுவுவதன் மூலம் நீதிமன்ற அமைப்பினுள் ஏற்படும் தாமதங்களை தவிர்க்கலாம். அது எவரிடமும் பழிவாங்குவதற்காகத் தனியான நீதிமன்றமொன்றை அமைப்பது என்று கருத்தல்ல. இந்த ஊழல், மோசடிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய விசேட சட்டங்களை உருவாக்க வேண்டிய அவசியமும் இல்லை. தற்போது காணப்படும் சட்டங்கள் அதற்கு மிகவும் போதுமானவையாக உள்ளன. தேவைப்படுவது காணப்படும் சட்டங்களின் கீழ் வினைத்திறன் மிக்க வகையில் செயற்பட முடியுமான நீதிமன்றமொன்றை நிறுவுவதாகும்.

இங்கையின் மேல்நீதிமன்ற அமைப்பில் விசேட துறைகளுக்காக விசேட மேல்நீதிமன்றங்களை நிறுவுவது புதியதோர் விடயம் அல்ல. வணிக மேல்;நீதிமன்றம், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம், பாதாள சந்தேக நபர்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறைச்சாலையினுள் நிறுவப்பட்டுள்ள நீதிமன்றம் போன்றன அதற்கான அண்மைக் கால சிறந்த உதாரணங்களாகும்.

ஊழல், மோசடிகள் தொடர்பான வழக்குகளை விசரிப்பதற்கும் இவ்வாறான விசேட நீதிமன்றமென்றை நிறுவ முடியும். அது ஒருபோதும் சட்டத்திற்குப் புறம்பானதாக மாட்டாது. அது சட்ட அமைப்பினுள் மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். நீதிமன்றத்தின் பக்கசார்பின்மை தொடர்பாக எழுப்ப முடியுமான கேள்விகளுக்குப் பதிலாக அதனை மூன்று பேரைக் கொண்ட மேல்நீதிமன்றமாக நிறுவ முடியும். அதாவது, அங்கே மூன்று மேல்நீதிமன்ற நீதிபதிகளினாலேயே வழக்குகள் விசாரிக்கப்படும். விசேட விடயத் துறையொன்றே அவர்களுக்கு ஒப்படைக்கப்படுவதால் தினமும் அவர்களுக்கு வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளலாம். மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவினரால் மேல்நீதிமன்றமொன்றில் விசாரிக்கப்படும் வழக்கிற்கு உச்ச நீதிமன்றத்திலேயே மேன்முறையீடு செய்யலாம். அதன் காரணமாக வழக்குத் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடுகளை மேற்கொண்டு காலங் கடத்துவதைக் குறைக்க முடியும். அதன் ஊடாக சட்ட நடவடிக்கைகள் குறிப்படத்தக்க வகையில் விரைவாக மேற்கொள்ளப்படும். 

இவ்வாறான விரைவான பாதையில் பயணிக்காவிடின், ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல்வாதிகளுக்கு, மோசடிக்காரர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை நடாத்தி முடிப்பதற்கு இன்னும் ஒரு தசாப்பதத்திற்கும் அதிகமான காலம் எடுக்கும். எனினும், ஓரு வருடம் கடப்பதற்கு முன்பு இந்த அரசாங்கத்தின் மீது தற்போதுள்ள சிறிதளாவன நம்பிக்கை கூட அப்போது முழுமையாக அற்றுப் போய் விடும். 

ராவய ஆசிரியர் தலைப்பு – 2016.05.22
தமிழில் - ஹேனேகெதர பழீல்     

1 comment:

Powered by Blogger.