Header Ads



இலங்கை அரசு எதிர்நோக்கியிருக்கும் சவால்களும், சில தீர்வுகளும் ..

-MM. Muhammad Arshad-

பல சவால்களுக்கு மத்தியில் நல்லாட்சி என்ற பெயரில் உருவான அரசாங்கம் இன்றுவரை  பல சவால்களுக்கு  முகம்கொடுத்தவண்ணமே இருக்கிறது. இருந்தாலும் ஆட்சிக்கு வந்ததும் தேசியஅரசாங்கம்  ஒன்றை நிறுவி அதன்ஊடாக அதிரடியாக  நாட்டுக்கு தேவையான சில நல்ல வேலைத்திட்டங்களையும்  செய்தார்கள் . உதாரணமாக ,நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஓரளவு நீக்கியமை, அதன் சில அதிகாரங்களை பாராளுமன்றத்துக்கு வழங்கியமை  , ஊழல் மோசடி செய்தவர்களை விசாரிக்க FCID போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவியமை. இவ்வாறு அரசாங்கம் கவர்ச்சியான செயட்பாட்டுடனேயே தங்கள் ஆட்டங்களை ஆரம்பித்தார்கள் . இவைகள் அரசியல் ரீதியில் அவர்கள் சாதித்தவற்றில் குறிப்பிடத்தக்கதாகும். இருந்தாலும் ஆட்டத்தின் நடுவே உள்நாட்டு , வெளிநாட்டு எதிரணியினரின் சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலையும் இவ்வரசுக்கு ஏற்பட்டது, ஏற்பட்டுகொண்டும் இருக்கிறது. இது நாட்டுக்கும் மக்களுக்கும் ஒரு கவலையான விடயமே . மஹிந்த ராஜபக்ச அணியினரின் மறைமுக சவால்கள் இன்றும் அரசாங்கத்தை ஒரு ஸ்திரதன்மையற்றதாக மாற்றும் போக்கையே கொண்டிருகிறது . தோற்றவர் தோற்றவராக வீட்டில் இருக்காமல் அரசியலில் தொடர்து இருக்கும் நிர்பந்த நிலையும் மகிந்த ராஜபக்சவுக்கு இன்னும் இருக்கிறது. காரணம் அவருடைய மற்றும்  அவரின் குடும்பத்தினதும்  கடந்தகால மோசடி செயற்பாடுகளுக்கு இன்னும் உரிய பாதுகாப்பு கிடைக்கவில்லை . எனவே இவரின் ஊடாக இவரின் நட்பு நாடுகள் இலங்கையில் இன்னும் அரசியலை நடத்திக்கொண்டுதான் இருகின்றார்கள் . எனவே தற்போதைய அரசாங்கம் உள்நாட்டு வெளிநாட்டு அணியுடன் மோதிக்கொண்டு தங்கள் ஆட்சியை , கட்சியை தக்கவைத்துக்கொள்ள அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிலை ஏற்பட்டிருகிறது  . முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  விசுவாசிகள் இன்றும்   பல உயர் அரச பதவிகளில் இருந்துகொண்டு அரசாங்கத்துக்கு எதிராக பல்வேறு சதிகளில் ஈடுபடுவதாக தெரிகிறது. இவை அனைத்தும்  தெரிந்தாலும் மகிந்தவை கைது செய்ய முடியாத நிர்பந்த  நிலையும் இவ்வரசுக்கு ஏற்பட்டிருகிறது காரணம் யுத்தத்தை முடித்தவர் என்ற தனிப்பெரும் செல்வாக்கு உடையவராக இன்றும் பெரும்பான்மை மக்களிடையே ஒரு ஹீரோ அந்தஸ்தில் இருந்துகொண்டிருகிறார் . எனவே இவ்வரசு முதல்கட்டமாக பெரும்பான்மை மக்களின் உள்ளங்களில் ஹீரோ வாக இருக்கும் மகிந்தவை பற்றிய எண்ணங்களை நீக்கும் செயல்களில் இறங்கியிருகிறது   . இப்பாரிய குழப்பங்களும் சவால்களும் நிறைந்த சூழலிலேயே இத்தேசிய அரசு ஓடிகொண்டிருக்கிறது  .

ஆட்சி  மாற்றத்துடன் சீனாவுடன் மகிந்த அரசாங்கம் இலங்கையில் மேற்கொண்ட பல வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன .  அத்துடன் வெளிநாட்டு முதலீடுகள் இன்றி நாடு பொருளாதார வீழ்ச்சியையும் சந்தித்திருகிறது. இதன் விளைவாக மீண்டும் சீனாவுடன் இணைந்து செயலாற்றும் நிர்பந்த நிலையும் இவ்வரசுக்கு ஏற்பட்டிருகிறது. இதன் விளைவாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் சீனாவுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் தற்போதைய அரசாங்கத்தின் நட்பு நாடானதும் சீனாவை எதிரியாகவும்  பார்க்கும்  அமெரிக்கா எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை   . இதனை நன்கு புரிந்துகொண்ட சீனாவும் சில நிபந்தனைகளுடன் இலங்கையில் கடந்த அரசாங்கத்தில் மேற்கொண்ட வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிகிறது. பொதுவாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள பொருளாதார , அரசியல்  உறவுகள் பழமையானது . பண்டாரநாயக ஜாபகரத்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (BMICH) சீனா அரசினால் கட்டிக்கொடுக்கபட்டது. இப்படி இன்னும் பல விடயங்களில் இரு நாடுகளுகுமிடையிலான தொடர்பு வரலாருமிக்கது . பொதுவாக அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுகள் ஜனநாயகம் , மனித உரிமைகள் நிலைநாட்டல் என்ற பெயரிலேயே அமையும். எந்த நாட்டில் இவைகள் மீறப்படுகிறதோ அந்த நாடுகளில் தலையிட்டு உதவிபுரிந்து அந்த நாடுகளில்  அவர்களின் ஆதிக்கத்தை செலுத்துவார்கள். இதுதான் அவர்களின் இராஜதந்திரம் . அவர்களிடமிருந்து முதலீடுகள் எதிர்பார்ப்பது பெரும்பாலும்  சாத்தியமில்லாத விடயம் . இலங்கையிலும் கடந்த அரசாங்கத்தின் யுத்த வெற்றியில் போர் குற்றங்கள் இடம்பெற்றதாகவும் மனித உரிமைகள் மீரப்பட்டதாகவும் அதனை விசாரிக்க எவ்வித நடவடிக்கைகளும் மேட்கொள்ளவில்லை என  கூறியே பழைய அரசை கவிழ்த்து  தற்போதைய அரசாங்கத்தை உருவாக்க அமெரிக்கா போன்ற நாடுகள்  உதவி புரிந்தன . இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் அவர்களுக்கும் கடன் பட்டிருகிறது . அமெரிக்கா , இந்தியா போன்ற நாடுகளின் கட்டுபாட்டை மீறியும் தற்போதைய அரசாங்கம் வெளிநாட்டு கொள்கைகளை வகுக்க முடியாமல் இருக்கிறது . இதுவும் தற்போதைய அரசு எதிர்நோக்கியிருக்கும் ஒரு சவாலாகும் . நண்பனையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் , நண்பன் கைவிட்டால் எதிரிகளின் பலம் ஓங்கிவிடும் என்ற நிலை . இலங்கை போன்ற சிறிய மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் எப்போதுமே குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் தங்கியிராமல் சகல நாடுகளையும் அனுசரித்து நடக்கும் சிறந்த வெளிநாட்டு இராஜதந்திர கொள்கைகளை வகுக்கவேண்டும் . அதுவே நாட்டை சிறந்த முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்ல கூடியது . தற்போதைய நிலையில் அரசாங்கம் இதைப்பற்றி அதிகம் சிந்திக்கவேண்டும் . இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீனா பயணம் வரவேற்கதக்கது .

அடுத்ததாக , உள்நாட்டிலே அரசியலுக்கு அப்பால்  ஏற்பட்டிருக்கும் சவால்கள் முக்கியமானவை  , கடந்த மகிந்த தலைமையிலான அரசில் ஏற்பட்டிருந்த வெளிப்படையான  இன ரீதியான முருகல்களை இவ்வரசு இடைநிறுத்தியது பாராட்டுக்குரிய ஓர் அம்சமாகும் . கடந்த காலத்தில் ஏற்பட்ட இன ரீதியான முறுகல்களே நாட்டை 30 வருடங்கள் அழிவுக்கு கொண்டுசென்றது , பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்தது, மேலும் அந்நிய நாடுகள் ஆதிக்கம் செலுத்த காரணமாக இருந்தது என்பதை நாட்டில் உள்ள எல்லா மக்களும் நன்கு உணர்ந்திருகிரார்கள் . மேலும் இவ்வினரீதியான இன்னுமொரு முறுகலுக்கு மகிந்த ராஜபக்ச துணை போனதன் விளைவே அவர் தோற்கடிக்கப்பட முக்கிய காரணமாகவும் இருந்தது. இந்த உண்மைகளை உணர்ந்து எதிர்காலத்தில் இவ்வாறான இனவிரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்காமல் இருப்பது  இந்த அரசாங்கமும்  எதிர்காலங்களில் ஆட்சிக்கு வரும் அரசும் நன்குணரவேண்டிய முக்கிய அம்சமாகும். ஏனெனில் இதன் பாதிப்பு பயங்கரமானது  . எனவே இனங்களுக்கிடையிலான ஒற்றுமைகளை ஏற்படுத்தி பாதுகாப்பை உறுதிபடுத்த  அரசாங்கம் சிறந்த திட்டங்களை வகுக்கவேண்டும். தற்போதைய அரசுக்கு இருக்கும் ஏனைய சவால்களுக்கு மத்தியில் இதனையும் செய்வதற்கான வேலைத்திட்டங்களையும் உடனே ஆரம்பிக்கவேண்டும். மேலும்  முதலீடுகள் இடைநிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி பொருட்களின் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது. தற்போதைய அரசு , பாராளுமன்றத்தில் தங்கள் ஸ்திரதன்மையை பாதுகாக்க பாரளுமன்ற உருபினர்களுகான சலுகைகளை அதிகரித்த வண்ணமும் , அமைச்சு பதவிகளை வழங்கிய வண்ணமும் இருக்கின்றது. இதுவும் மக்களின் வாழ்க்கை செலவுகள் அதிகரிக்க காரணமானது .  ஒரு அரசாங்கம் மக்களுக்கு என்னதான் செய்தாலும் மக்களுக்கு உரிய பாதுகாப்பையும் பொருளாதார ரீதியாக தன்னிறைவையும் வழங்காதபோது இவ்வரசாங்கத்தை மக்கள் கவிழ்த்தே தீருவார்கள் என்பது வெளிபடையான உண்மையாகும் . இதற்கான வேலைத்திட்டத்தையும் அரசு மேற்கொள்ளவேண்டும் . விலை அதிகரிப்புகள் , சில அரச உத்தியோகத்தர்களின் முன்னைய சலுகைகள் பரிகப்பட்டது , தேர்தல் வாக்குறுதிகள் சில நிறைவேற்ற தாமதமாதல், சில வாக்குறுதிகள் நிறைவேற்றபடாமை உதாரணமாக , கடந்த அரசில் ஊழல் செய்தவர்கள் தண்டிகப்படாமை . அப்படியான அமைச்சர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது  போன்றன மக்கள் மத்தியில் தற்போதைய அரசு பற்றிய ஒரு எதிர்மறை சிந்தனைகளை எட்படுதியிருகிறது.  ஆனாலும்  சில விடயங்களில் அரசாங்கம் நிர்பந்த நிலைக்கு உட்பட்டதன் விளைவாகவே இந்நிலை ஏற்பட்டிருகிறது  என்பதும் உண்மையே . எந்த அரசும் எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் சீர்படுத்துவது என்பது நடைமுறைக்கு சாத்தியமான ஒன்றல்ல என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம் .

அரசியல் ஸ்திரமற்ற தன்மையும் அதிலுள்ள சவால்களும் ,  வெளிநாட்டு கொள்கைகளில் உள்ள குறைபாடுகலுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது. எனவே இவ்வரசு சகல சவால்களுக்கும் முகம்கொடுக்கவேண்டிய திட்டங்களை வகுத்து உள்நாட்டு வெளிநாட்டு சவால்களை வெற்றிகொண்டு  எதிர்வரும் காலங்களில் சிறப்பான  ஆட்சியை  அமைக்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது .

No comments

Powered by Blogger.