Header Ads



பிரிவின் உச்சம், பாசத்தின் எச்சம்...!


கருவறையைப் பிரிந்த
கவலையில் அழுதிடும்
பிறக்கின்ற பிள்ளையின்
சுரக்கின்ற கண்ணீரில்
திறக்கின்றது வாழ்க்கை.

இரு வயது
எய்தபின்
பருகிய பாலில்
உருகிய பாசம்
உம்மாவை பிரிவது
உள்ளத்தை வாட்டும்

ஐந்து வயது வரை
மேய்ந்து திரிந்தவனை
மொண்ட சூரிக்கு
கொண்டு விட்ட நாள்
உள்ளத்துள் பிரிவுத் துயர்
மெல்லத் தலை தூக்கும்.

பத்து வயது வரை
பொத்தி வளர்த்தவனை
விடுதியில் விட்டு
வீடு வரும் போது
சடுதியாய் மனதுள்
சஞ்சலம் வாட்டும்

பன்னிரண்டு ஆண்டு
பதின் மூன்று ஆண்டு
தன்னையே சுற்றிய
பெண்மகள் வளர்ந்து
சற்றே ஒதுங்க
பெற்ற தந்தையின்
உள்ளத்தில் பிரிவு
முள்ளாய் குத்தும்.

இருபது வயதில்
ஒரு தொழில் தேடி
ஊரை பிரிந்து
வேறாகும் போது
பழகிய நட்பின்
அழகிய நாட்கள்
பிரிவதைக் கண்டு
கருகும் உள்ளம்.

சொந்தப் பிள்ளை
பந்தத்தில் இணையும்
திரு மண நாளில்
அருமை பிள்ளையின்
பிரிவை நினைத்து
கருவில் சுமந்த
ஒருதாய் அழுவதும்
சிந்தை உடைந்து
தந்தை அழுவதும்
பிரிவில் எழுந்திடும்
பிள்ளைப் பாசம்.

தாலாட்டுப் பாடிய
தந்தையை தாயும்
வாழ்வை முடித்து
மீளாத் துயில் கொள்ள
பிள்ளைகள் கண்களும்
உள்ளமும் அழுவது
பிரிவின் உச்சம்
பாசத்தின் எச்சம்.

(காத்தான்குடி நிஷவ்ஸ் -26/11/2105)

No comments

Powered by Blogger.