Header Ads



பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர், வீடு செல்ல முடியாத நிலை

முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், தனக்கெதிரான வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் வீடு செல்ல முடியாத துரதிஷ்ட நிலையை எதிர்கொண்டுள்ளார்.

சுதந்திரக்கட்சியின் முன்னாள் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான ஜனக பண்டார தென்னகோன்,

1999ம் ஆண்டு தேர்தலின்போது மாத்தளையில் ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் வழக்கொன்றை எதிர்கொண்டுள்ளார்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கின் காரணமாக பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்த ஜனக தென்னகோன், மருத்துவமனையிலேயே நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் சில மாதங்கள் கழிந்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டது.

நேற்றைய தினம் அவர் கொழும்பு தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வண்டி மூலமாக மாத்தளை நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.

சக்கர நாற்காலியில் உட்கார்ந்த நிலையில் நீதிமன்றத்திற்கு வருகை தந்து பிணைப் பத்திரத்தில் கையெழுத்திட்ட ஜனக பண்டார, அதே அம்புலன்சில் மீண்டும் மருத்துவமனை திரும்பியுள்ளார்.

தற்போதைக்கு அவரது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு இன்னும் சில மாதங்கள் வரை அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.