Header Ads



ரத்தத்தில் ஒளிந்திருக்கும் 3 மாத ரகசியம்!

ஆரோக்கியமாக வாழ்வது என்பது பயணத்தின் கடைசி இலக்கு அல்ல... அது வாழ்க்கைப் பாதை!

நீரிழிவு மருத்துவரை சந்திக்கச் செல்கையில், வழக்கமான ஃபாஸ்ட்டிங், போஸ்ட் பெரெண்டியல்  ரத்தப் பரிசோதனைகளோடு, HbA1c எனும் ரத்தப் பரிசோதனையையும் செய்யச் சொல்கிறாரே? இது என்ன சோதனை? க்ளைகேட்டட்  ஹீமோகுளோபின் (Glycated hemoglobin) என்பதையே HbA1c எனக் குறிப்பிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட  காலகட்டத்துக்கான பிளாஸ்மா குளுக்கோஸ் அடர்த்தியை அறிவதற்காக க்ளைகேட்டட் ஹீமோகுளோபின் எனும் ஒருவகை  ஹீமோகுளோபினை ஆராயும் சோதனைதான் இது. 

இன்னும் தெளிவாகச் சொல்வதானால் ரத்தச் சிவப்பு அணுக்களில் இருந்து தொடங்க வேண்டும். சிவப்பு அணுக்களில்  ஹீமோகுளோபின் என்கிற இரும்புப் புரதம் இருக்கிறது. இது ரத்தத்தில் குளுக்கோஸ்  அதிகரிக்கும் போதெல்லாம் சிறிதளவு  குளுக்கோஸை தன்னிடம் கிரகித்துக்  கொள்கிறது. அப்படிக் கிரகித்துக்கொள்ளப்படும் குளுக்கோஸை (இதுதான் க்ளைகேட்டட்  ஹீமோகுளோபின்), அந்தச் சிவப்பணுவின்  வாழ்நாள் முடியும் வரை தக்க வைத்துக் கொள்கிறது. 

ஒரு சிவப்பணுவின் வாழ்வுக்காலம் 120 நாட்கள். அதனால் ஒரு சிவப்பணுவில் ரத்தச் சர்க்கரை அதிகபட்சம் 4 மாதங்கள் வரை  இருக்கும். இச்சிவப்பணுக்களில் உள்ள சர்க்கரையை  அளந்தால், ரத்த சர்க்கரையின் அளவு கடந்த 3 மாதங்களில் சராசரியாக   எப்படி இருந்திருக்கிறது என அறிய முடியும். இயல்பான அளவு குளுக்கோஸ், அதற்கேற்ப இயல்பான அளவு க்ளைகேட்டட்  ஹீமோகுளோபினையே உருவாக்கும். குளுக்கோஸ் அளவு அதிகமாகும் போது, இதன் அளவும் அதற்கேற்ப அனுமானிக்கக்கூடிய  அளவில் அதிகரிக்கும். அதனால், இதுவே கடந்த 3 மாத கால ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை அறிய உதவும் அளவீடாக  உதவுகிறது.

க்ளைகேட்டட் ஹீமோகுளோபினின் அளவு தாறுமாறாக இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? ரத்த சர்க்கரை எகிறிக் கிடக்கிறது  என்று அர்த்தம். அதாவது, நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தம். உணவிலும் உடற்பயிற்சியிலும் மருந்து  மாத்திரைகளிலும் கவனமே செலுத்தவில்லை என்றும் அர்த்தம். க்ளைகேட்டட் ஹீமோகுளோபின் அதிகமாவது என்பது நீரிழிவு  தொடர்புடையது மட்டுமல்ல... இது இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், பார்வைக் குறைபாடுகள் உள்பட அனைத்துக்கும்  அகலப்பாதை அமைத்துத் தரும்.  ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதால் உயர் ரத்த அழுத்த பிரச்னை தொடங்கும். ஹார்ட்  அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற பெரிய சிக்கல்களுக்கும் இது வழி வகுக்கும். விழித்திரையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு பார்வை 
பறிபோகவும் கூடும். 

நரம்புகளையும் இது பாதிப்பதால் காலில் எரிச்சல், மதமதப்பு, தொடு உணர்வு  குறைதல், பாதத்தில் புண்கள், அவை  குணமாக  நீண்ட காலம் ஆவது உள்பட ஏராளமான சிக்கல்கள் ஏற்படும். சரும நோய்கள் தொற்றும். விதவிதமான வலிகள் வாழ்வில் வந்து  சேரும். பல், காது, மூக்கு, எலும்பு என உடலின் சகல பகுதிகளையும் தாக்கும். அது மட்டுமல்ல... தாம்பத்திய உறவில் ஆர்வம்  குறைவதோடு, விறைப்புத்தன்மை குறைதல் போன்ற பிரச்னைகளும் உண்டாகும். கர்ப்பிணிகளின்  HbA1c அளவு அதிகமாக  இருப்பின், பிரசவத்திலும் சிக்கல்கள் ஏற்படும்.

இதனால்தான் 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது   HbA1c அளவைப் பரிசோதித்து, அதற்கேற்ப மருத்துவர் அறிவுறுத்தும்  சிகிச்சை முறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்கிறோம்.

No comments

Powered by Blogger.