Header Ads



வீட்டிற்குள் புகுந்துள்ள சாத்தானும், நமது குழந்தைகளும்..!

-மு.இ.உமர் அலி -

மில்லேனியம் வருடத்திற்கு  பின்னால்  உலக  சமூகம்  பல்வேறுபட்ட இலத்திரனியல் மாற்றங்களுக்கு  உட்பட்டிருப்பது  சகலருக்கும் புரிந்ததோர் விடையம்.அந்த  அடிப்படையில்  நமது  நாட்டின் முஸ்லீம் சமூகத்தில் நடுத்தரமான  ஒரு குடும்பத்தினை  எடுத்து நோக்கும்போது   ஏலேக்ட்ரோனிக் தொடர்பு  சாதனங்களின்  ஆளுகை  மிக  அதிகமாக  காணப்படுவதுடன் அக்குடும்பத்தின் அங்கத்தவர்களை  அவை  ஆக்கிரமித்தும் காணப்படுகின்றன.இந்தக்கருத்தினை  எவரும் ஏற்றுக்கொள்ள பின்னிற்க மாட்டார்கள் என்பது எனது  கருத்து.

கார்டூன்கள்,வீடியோ கேம்களும் 

எந்தப்பிரயோசனமும்  இல்லாத  கற்பனைக் காட்டூன்களுக்கும், முடிவே இல்லாத  சில  கேம்களுக்கும் முழுநேரம் அடிமையாகிவிட்ட குழந்தைகள் ஒருபுறம், வாட்ஸ் அப், முகநூல், வைபர்  என்று அவற்றையே சதா நோண்டிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் மறுபுறம்.  

கேம்களுக்கு அடிமையாகிவிட்ட  சிறுவர்கள்  எப்போது  பாடசாலை முடிவடையும், எப்போது  டியூசன்  முடிவடையும், வீட்டுக்கு  வந்த விருந்தாளிகள்  எப்போது  போவார்கள்? என்று அங்கலாய்த்துக்கொண்டு இருப்பதனால்  கல்விச்செயல்பாடுகளில் ஈடுபாடு மிகக் குறைவானவர்களாகவே  இருக்கின்றனர். நித்திரைக்குச்செல்லுதல், உணவுண்ணுதல்  போன்ற அடிப்படைச் செயல்பாடுகளிலும்   கவனம் செலுத்தாது  காணப்படுகின்றனர். இடையே நிறுத்தும்படி  வற்புறுத்தினால் அடம்பிடிக்கின்றனர்,அழுகின்றனர்.

ஏனோ தானோ என்று  கடமைக்காக புத்தகங்களை  புரட்டினாலும்  அவர்களது கவனமெல்லாம்  குறிப்பிட்ட  அல்லது ஒதுக்கப்பட்ட   நேரம் முடிவடைந்ததும் தாம் பார்க்கப்போகின்ற கார்ட்டூன் பற்றி அல்லது விளையாடப்போகின்ற  கேம்கள்  பற்றியே இருக்கின்றது.

சிறுவர்கள்  பொய்யான  வாழ்க்கையை வாழ்வதற்கு  வீட்டிலேயே  நாம் அவர்களுக்கு  கஷ்டப்பட்டு சம்பாதித்த நமது  பணத்தின் மூலமாக பயிற்சியளித்துக் கொண்டிருக்கின்றோம். ஒரு  உப்புச்சப்பில்லாத எதிர்காலத்திற்கு  அடித்தளம் போட்டுக்கொடுக்கின்றோம். நகைச்சுவையாக சொல்லப்போனால்  சொந்தச்செலவிலேயே  சூனியம்  வைத்திருக்கின்றோம்.

மேற்குறிப்பிட்ட பழக்கங்களுக்கு  அடிமையாகிவிட்ட சிறுவர்கள் தொழுகையில் பொடுபோக்குள்ளவர்களாக  காணப்படுவதுடன், பெற்றோர் மற்றும் உறவினர்களை  பெரிதாக சட்டை செய்யாதவர்களாகவும் காணப்படுகின்றனர். மரியாதைகுறைவாக  நடந்துகொள்ளும் விதமும் அவதானிக்கப்பட்டிருக்கின்றது. கார்ட்டூன்களில்  வருகின்றதுபோன்ற  நடை உடை பாவனைகளின்பால்   ஈர்க்கப்பட்டு  அவற்றினைப்போல   செய்ய துடிகின்றனர், அவ்வாறான சந்தர்ப்பங்கள்  கிடைக்காவிடின் மன உழைச்சலுக்குள்ளாகின்றனர்.

இவ்வாறன பிரயோசனமற்ற ,பகட்டான செயற்பாடுகளில் ஈடுபடுவதன்காரணமாக எமது  சிறுவர்களிடம் இன்று  வாசிப்புப்பழக்கம் மிகக்குன்றி விட்டது. சிறுவர்  கதைகளையோ ,நாவல்களையோ , ஹதீதுகளையோ, வரலாறுகளையோ  பத்திரிகைச் செய்திகளையோ படிக்கின்ற  மாணவச்செல்வங்களை  நம்மிடையே காண்பது  மிக  அரிதாகபோய்விட்டது.

கேம்களிலும்  காட்டூன்களிலும்  வருகின்ற கற்பனை  ஹீரோக்களைப் பற்றி தெரிந்திருக்கும்  அளவுக்கு     வாழ்க்கைக்கு  பிரயோசனமளிக்கக்கூடிய   தகவல்களையும் விடையங்களையும் கற்பதில்  சிரத்தையற்று இருக்கின்றார்கள்,

இவை அனைத்தும்  முடிந்துவிட்டால்  போதாக்குறையாக பெற்றோர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்ற   தொடர் நாடகங்களை பார்த்து  அதில்  ஒருவரை எப்படி அவமானப்படுத்தலாம், எப்படி  குழிதோண்டி  வீழ்த்தலாம்,வஞ்சகம் என்றாலென்ன அதை  எப்படி  வளர்ப்பது போன்ற  கீழ்த்தரமான  மனித குணங்களை  கற்றுக்கொள்ளுவதுடன், சமூகப்பிரழ்வான நடவடிக்கைகளினையும்   தொடர் நாடகங்களினூடாக கற்றுக்கொள்ளுகின்றனர்.

இதுதான்  இன்றைய  சிறுவர்களின் நிலைப்பாடு tablet,ஐ பேட்  ,மற்றும் லாப்டாப்  கணினிகளை  வழங்கி அவர்களின்  வாழ்வினை  ஒளி எற்றுகின்றோம்  எனக்கூறிக்கொண்டு  பாழாக்குகின்றோம்.

இவ்வாறன  இலத்திரனியல் மாபியாவின்  பிடியிலிருந்து  எமது மழலைகளை விடுவிப்பதற்கு   பெற்றோர்களும், கற்றோர்களும், மற்றோர்களும் முன்வரவேண்டும். குறிப்பாக நமது சமூகத்தைச்சேர்ந்த உளவியலாளர்கள், மார்க்க  அறிஞர்கள், ஆசிரியர்கள், சிறுவர் வைத்திய நிபுணர்கள், போன்றோர் ஒன்றிணைந்து ஒரு வெற்றியளிக்கக்கூடிய திட்டத்தினை  வரைந்து ஒவ்வொரு  இஸ்லாமிய  குடும்பத்திலும்  நடைமுறைப்படுத்த  முன்வரவேண்டும். 

இஸ்லாமிய கற்கை நெறிகளையும்,சமூக  வின்கானம் கற்கும் பல்கலைக்கழக மாணவர்கள் இந்தத் துறையிலே  தமது  ஆய்வுகளை மேற்கொள்ளுவதன் மூலம்  எதிர்காலத்தில்   சில தீர்வுத்திட்டங்களை கண்டுகொள்ள முடியுமல்லவா?

No comments

Powered by Blogger.