Header Ads



ரஷியாவுக்கு துருக்கி எச்சரிக்கை

துருக்கி வான்பகுதியில் ரஷியா போர் விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இனி இதுபோன்ற சம்பவம் நடைபெற்றால் தக்கபதிலடி கொடுக்கப்படும் என்று துருக்கி எச்சரிக்கை விடுத்து உள்ளது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டுப் போர் நடத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்து வருகின்றனர். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையில் உலக நாடுகளின் படை வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு வலுவூட்டுகிற வகையில், கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா வான்தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் போக்கில் அதிருப்தி அடைந்த அமெரிக்கா ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷியா வான்தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. 

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த வாரம் ரஷியா வான்தாக்குதலை தொடங்கியது. ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது ரஷிய போர் விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த பணியில் ஈடுபட்டிருந்த ரஷிய போர் விமானத்தில் ஒன்று, அருகில் உள்ள துருக்கி வான்பரப்புக்குள் கடந்த 3-ந்தேதி அத்துமீறி பறந்ததாக தெரிகிறது. இதனால் துருக்கி பெரும் கோபத்துக்கு உள்ளாகியது. உடனே துருக்கிக்கான ரஷிய தூதரை அழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்தது. 

அப்போது, இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடந்தால், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து ரஷிய வெளியுறவு மந்திரி லவ்ரோ மற்றும் நேட்டோ படை அதிகாரிகளுடனும் துருக்கி வெளியுறவு மந்திரி பெரிடன் சினிர்லியோஜுலு பேச்சு நடத்தினார்.

No comments

Powered by Blogger.