Header Ads



தேசியப் பட்டியலுக்கு எதிரான, அடிப்படை உரிமை மனுவில் கோளாறு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுவை திருத்தி ஒரு வாரத்திற்குள் மீண்டும் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுவை மஹஜன எக்ஸத் பெரமுனவின் சோமவீர சந்ரசிறி தாக்கல் செய்திருந்தார்.

பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் , உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, அனில் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு மீண்டும் இன்று (31) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் நாளை (01) பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால் இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா தெரிவித்தார்.

எனினும் மனுவுடன் தொடர்புடைய ஒரு சில முக்கிய ஆவணங்கள் இல்லை எனவும் பிரதிவாதிகளுக்கு இது தொடர்பிலான ஆவணங்கள் கிடைக்கவில்லையெனவும், அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ள ஆவணக் கோவைகளிலும் அநேகமான ஆவணங்கள் இல்லாமையினால் மனுவை இன்று பரிசீலிக்க முடியாது என பிரதம நீதியரசர் இதன்போது தெரிவித்தார்.

இந்த மனுவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதை தாமும் உணர்வதாக இதன்போது மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்திற்குள் மனுவில் திருத்தம் மேற்கொண்டு மீளத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை செப்டம்பர் 10 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

No comments

Powered by Blogger.