Header Ads



ஊருக்கொரு எம்.பி.யும், தேசியப் பட்டியல் பங்கீடும்..!

-ஏ.எல்.நிப்றாஸ்-

தேர்தல் திருவிழா நெருங்கிவிட்டால், சமூகம் என்ற கோட்பாடு வலுவிழந்து ஊர் பற்றிய அக்கறை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டு விடுகின்றது. ஊருக்கொரு எம்.பி.யை பெறுவது சாத்தியமற்றது என்று தெரிந்திருந்தும் ஒவ்வொரு முஸ்லிம் பிரதேசங்களும் தமக்கென பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்பதைக் காண்கின்றோம். இது எப்படியென்றால், ஒரேயொரு கோழியை சமைத்துவிட்டு வீட்டில் இருக்கின்ற 5 பிள்ளைகளும் எங்களுக்கு கோழியின் கால் பகுதி (லெக் பீஸ்) வேண்டுமென்று அடம்பிடித்து அழுவதைப் போன்றதாகும்.

இது மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு மனோநிலை என்றாலும் கூட, இவ்வாறு மக்கள் எண்ணுவதற்கு காரண காரியங்களும் இல்லாமலில்லை. அதாவது - இதற்கு முன்னர் ஒரு ஊரில் இருந்து தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்த மக்கள் பிரதிநிதிகள் அந்த ஊருக்கு மட்டுமே அதிக சேவைகளை செய்திருப்பார்கள். பக்கத்து ஊர்க்கார மக்கள் பார்த்து பொறாமை கொள்ளுமளவுக்கு அபிவிருத்தி வேலைகள் அந்த ஊரில் செய்யப்பட்டிருக்கும். அந்த ஊரைச் சேர்ந்தவர்களே அந்த அரசியல்வாதியால் அதிகம் நன்மை அடைந்திருப்பர். எம்.பி. இல்லாத ஊர் கிட்டத்தட்ட பாழடைந்து போய் கிடைக்கும். அது ஒருபுறமிக்க அமைச்சர்களும் எம்.பி.க்களும் இருக்கும் சில ஊர்களிலும் இதுதான் நிலைமை என்பது வேறுகதை. 

இவ்வாறாக எம்.பி. ஒருவர் இருந்து வளர்ச்சியடைந்த ஊருக்கு அருகிலிருக்கும் பிரதேசத்தின் மக்கள், தாமும் அதுபோல அபிவிருத்திகளை காண வேண்டும் என்பதற்காக தமது ஊருக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தேவை என்ற வேட்கைக்கு உள்ளாகுவர். 

ஏற்கனவே ஒரு எம்.பி.யை தெரிவு செய்திருந்த போதும் அவர் ஒரு வேலைக்காகதவர் என்று பின்னாளில் புரிந்து கொண்ட மக்கள் அவருக்கு பதிலீடாக இன்னுமொருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற நெஞ்சுரத்தில் ஊருக்கு எம்.பி.யாக வேறொருவரை தெரிவு செய்ய வேண்டும் என நினைப்பார்கள். அதேபோல் ஏற்கனவே எம்.பி. இருந்து அதன் அனுகூலங்களை அனுபவித்த பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கு தொடர்ந்தும் அந்த ருசி தேவைப்படும், இருக்கின்ற எம்.பி.யை இழந்து பல வருடங்களுக்கு அரசியல் அனாதையாகிவிடக் கூடாது என்று அவர்கள் எண்ணத் தலைப்படுவர். அதனால் அவர்களுக்கும் ஊருக்கொரு எம்.பி. வேண்டும்.  இவ்வாறுதான் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு எம்.பி. தேவை என்ற உத்வேகம் பிறக்கின்றது. 

அது மட்டுமன்றி கடந்தகால சம்பவங்களும் இதற்கு காரணமாகி விடுகின்றன. முஸ்லிம் அரசியலில் இது விடயத்தில் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. ஒரு மாவட்டத்தில், பல ஊர் மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஏனைய ஊர்களை மாற்றாந்தாய் மனப்பாங்குடன் அல்லது இரண்டாம் நிலையில் வைத்து நோக்குகின்ற தன்மை அதிகமாக அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒருபடி மேலே சென்று வாக்களித்து பக்கத்து ஊர் மக்களுக்கே அநியாயம் இழைத்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் நமது தந்தையர்களின் காலத்தில் இருந்தனர், நம்முடைய காலத்திலும் இருக்கின்றனர். 

ஆகவே, பொதுவாக அரசியல்வாதிகளின் நடுவு நிலையற்ற செயற்பாடும் தூரநோக்கற்ற தீர்மானங்களுமே இன்று ஊருக்கொரு எம்.பி. கோஷத்திற்கு அடிப்படை காரணமாகியிருக்கின்றது எனலாம். அதுமாத்திரமன்றி அரசியல் ரீதியான பிரதேசவாதங்கள் தோற்றம் பெறுவதற்கும் இது வழிவகுத்திருக்கின்றது. ஒரு சில அரசியல்வாதிகளைப் பொறுத்தமட்டில் இது அவர்களுக்கு விருப்பமின்றியே நடந்து விடுகின்றது. ஆனால் பல அரசியல்வாதிகள் தமக்கு ஒரு நிரந்தரமான வாக்குவங்கி இருக்க வேண்டும் என்ற நோக்கில் இதற்காக மறைமுகமாக திட்டமிட்டு செயற்படுகின்றனர். ஆனால் இதன் பிரதிபலனை அவ்வாறானவர்கள் உணரும் தருணம் வரும்.

பிரதேசங்களை பிரித்து பிரித்து ஆட்சிசெய்ததன் எதிர்விளைவை ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் முஸ்லிம் தலைமைகள் எதிர்கொள்கின்றார்;கள். அதாவது, ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வேட்பாளரையேனும் நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் கட்சித் தலைமைகளுக்கு ஏற்படுகின்றது. ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த பொதுமக்களும் தமது பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை களத்தில் இறக்குமாறு கோரிக்கை விடுகின்ற நிலைமை காணப்படுகின்றது. ஒவ்வொரு பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் அந்த ஊரை மட்டுமே கவனித்துக் கொள்ளும் வியூகம் அவ்விடத்தில் தோல்வியடைகின்றது. குறிப்பாக கட்சித் தலைமைகள் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் மிகப் பெரிய சிக்கலை எதிர்நோக்க நேரிடுகின்றது. 

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வேட்பாளரை போடுவது சாத்தியமற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ அல்லது மக்கள் காங்கிரஸோ, தேசிய காங்கிரஸோ எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒவ்வொரு ஊரிலும் வேட்பாளர்களை நிறுத்த முடியாது. அவ்வாறு மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கக் கூடிய இதயசுத்தியுடைய ஆளுமைகளை ஒவ்வொரு பிரதேசத்திலும் தேடிப்பிடிப்பது சிரமம் என்பது ஒருபுறமிக்க, அவ்வாறு செய்வதற்கு வேட்பாளர் பட்டியல் இடமளிக்காது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் இதுபோன்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட்டால் ஓரளவுக்கு இதனைச் செய்யலாம். என்றாலும் அவ்வாறு நியமிக்கப்படுபவர்களில் மூன்று நான்கு பேரை தவிர மற்ற அனைவரும் பெயரளவிலான 'டம்மி' வேட்பாளர்களாகவே இருப்பார்கள். மறுபுறத்தில், பெரும்பான்மை கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து களமிறங்கினால் தம்முடைய கட்சி சார்பாக மூன்று நான்கு பேரை நிறுத்துவதற்கே கட்சித் தலைமைகள் தோப்புக்கரணம் போட வேண்டியிருக்கும். 

இவ்வாறான சந்தர்ப்பங்களை சமாளிப்பதற்காக தேசியப் பட்டியலை கையாள்கின்ற ஒரு முறைமையை நீண்டகாலமாக முஸ்லிம் கட்சித்தலைமைகள் கடைப்பிடித்து வருகின்றனர். யாருடைய பெயரையாவது தேசியப்பட்டியலில் போடுவது பின்னர் தேர்தலில் தேசியப் பட்டியல் உறுப்புரிமை கிடைத்தால் அவருக்கு சில மாதங்கள் வழங்கிவிட்டு அதைப்பறித்து இன்னுமொரு பிரதேசத்தை சேர்ந்தவருக்கு கொடுப்பது, அல்லது அதை பெயர் பிரேரிக்கப்பட்ட நபருக்கு கொடுக்காமலேயே ஏமாற்றி விடுவதும் நடந்திருக்கின்றது. அதேவேளை, எதிர்பார்த்த தேசியப் பட்டியலை சிங்கள ஆட்சியாளர்கள் முஸ்லிம் கட்சிகளுக்கு வழங்காமலும் விட்டுள்ளனர். இதுவே தேசியப் பட்டியல் பற்றிய முஸ்லிம் அரசியல் நிலைமை.

ஆனால் இலங்கையின் அரசியலுக்கு தேவையான சில அரசியல் ஆளுமைகளும் தேசியப் பட்டியல் எம்.பி.க்களாக பதவி வகித்தது சற்றே ஆறுதலாக இருந்தது. குறிப்பாக சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ரி. சுமந்திரன், மு.கா. செயலாளர் எம்.ரி. ஹசன் அலி போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மீதான மதிப்பை பாதுகாத்தவர்கள் என்று கூறலாம். 

இந்நிலையில், தேர்தல் சட்டவிதிமுறைகளை அச்சொட்டாக நடைமுறைப்படுத்துவதில் தனக்கிருக்கும் தைரியத்தை கடந்த ஜனாதிபதித் தேர்தலிலேயே நிரூபித்துக் காட்டியவரான தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, தேசியப்பட்டியல் தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் காட்டமான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாகப்பட்டது – 'இத்தேர்தலுக்கான தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்படாத மற்றும் போட்டியிடாத நபர்கள் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டவிதியை இம்முறை இறுக்கமாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் அவர் அடித்துக் கூறியிருக்கின்றார். இது பலருக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கின்றது.

மு.கா.வுக்கு சவாலான அறிவிப்பு

முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தமட்டில் வழக்கம் போல பெரும்பான்மை கட்சிகளுக்கு கிடைக்கும் தேசியப் பட்டியலிலேயே இம்முறையும் தங்கியிருக்கின்றன. அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தமக்கு வழங்கப்பட்ட 2 தேசியப்பட்டியல் இட ஒதுக்கீடுகளிலும் கட்சியின் செயலாளர் ஹசனலி மற்றும் கல்முனை உதவி மேயர் நிசாம் காரியப்பர் ஆகியோரின் பெயரை இட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதன் செயலாளர் ஹமீட் மற்றும் மாகாண சபை உறுப்பினரும் அண்மையில் கட்சி தாவி வந்தவருமான ஜமீல் ஆகியோருக்கு தேசியப்பட்டியலை பங்கீடு செய்திருக்கின்றது. தேசிய காங்கிரஸ் தனக்கு கிடைக்குமென எதிர்பார்க்கும் ஒரு தேசியப்பட்டியலுக்கு அட்டாளைச்சேனையை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பையின் பெயரை போட்டிருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேசம் மு.கா.வின் கோட்டையாக இருந்து வருகின்ற போதும் அவ்வூருக்கு தேசியப்பட்டியல் தருவதாக பல தடவை மு.கா. வாக்குறுதியளித்திருக்கின்றது. இன்று வரையும் கட்சித்தலைமை அந்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை. இவ்வாறான நிலையில் இம்முறை அப்பிரதேசத்தின் ஊருக்கொரு எம்.பி. என்ற ஆசைக்காக மு.கா. சார்பில் ஒரு வேட்பாளர் நிறுத்தப்படவுமில்லை, தேசியப்பட்டியலில் அவ்வூரை சேர்ந்த யாரும் உள்ளடக்கப்படவும் இல்லை. ஒவ்வொரு ஊருக்கும் எம்.பி. என்ற அடிப்படையில் பெயர்களை போட்டால் தமது கட்சிக்கு அதிகமான தேசியப்பட்டியல்கள் வேண்டுமென தலைவர் நினைத்திருக்கக் கூடும். இதற்கு வேறுகாரணங்களும் தலைவர் வசம் இருந்திருக்கலாம். 

ஆனால், அந்த ஊரைச் சேர்ந்த உதுமாலெப்பையை தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா நுட்பமான முறையில் தேசியப்பட்டியலில் உள்ளடக்கியது மு.கா.தலைவர் ஹக்கீமுக்கு பெரிய தலையிடியாகி போயிருக்க வேண்டும். அதாவுல்லாவின் பக்கம் வாக்குகள் செல்லவதை தடுக்க மு.கா. சார்பு தேசியப்பட்டியலை அறிவிக்கக வேண்டிய நிர்;ப்பந்தத்திற்கு ஹக்கீம் ஆளானார் என்றே கூற வேண்டும். அதன்படி இம்முறை அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நிச்சயம் வழங்கப்படும் என்று தலைவரே பொதுக் கூட்டத்தில் அறிவித்தார். முன்னமே அப்பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த அதிருப்தி இதனால் குறைந்திருந் வேளையிலேயே, தேர்தல் ஆணையாளரின் மேற்படி அறிவிப்பு வெளியாகி மீண்டும் வாதப்பிரதிவாதங்களுக்கு வழிவகுத்திருக்கின்றது. 

எவ்வாறிருப்பினும், தேசியப்பட்டியலில் பெயர் குறிப்பிடப்படாத, போட்டியிடாத நபர்கள் பலர் கடந்த காலங்களில் தேசியப்பட்டியல் எம்.பி.களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் கூட சாணக்க அமரதுங்கவின் பெயரை பட்டியலில் போட்டு அதனால் எழுந்த சர்ச்சையை அடுத்து அசித்த பெரேராவுக்கு அப்பதவியை கொடுத்தது. அதேபோல் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவர் சில காலம் எம்.பி.யாக இருந்து அவர் இராஜினாமா செய்த பிறகு அல்லது அவர் அப்பதவியை காலிசெய்த பிற்பாடு அதனை வேறொருவருக்கு கொடுக்கும் நடைமுறையும் இதற்கு முன்னர் இருந்துள்ளது. குறிப்பாக அசித்த பெரேராவை இராஜினமா செய்ய வைத்துவிட்டு ஏ.எல்.எம்.அதாவுல்லாவுக்கு சில மாதங்களுக்கான எம்.பி.யை வழங்கியதும் இந்த அடிப்படையில்தான். 

இந்த அனுபவத்தை வைத்துக்கொண்டோ, அன்றேல் சட்டத்தரணி என்ற அறிவை வைத்துக் கொண்டோ மு.கா.தலைவர் அட்டாளைச்சேனைக்கு எம்.பி. தருவதாக கூறியிருக்கலாம். இது தொடர்பான சட்டவிதிகளில் அண்மைக்காலத்தில் சில மாற்றங்கள் பகிரங்கமில்லாமல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. அவ்வாறான மாற்றங்களை தலைவர் அறிந்தே இந்த அறிவிப்பை விடுத்திருக்க வேண்டும். ஆனால் அறியாத்தனமாக அறிவித்திருந்தால், தேர்தல் ஆணையாளரின் 'பிடி' வலுவாக இருக்கும் பட்சத்தில்..... அட்டாளைச்சேனை போன்ற பெயர் குறிப்பிடப்படாத நபர்களைக் கொண்ட ஊர்களுக்கு சுழற்சி முறையான ஒரு எம்.பி. கிடைப்பதே சாத்தியமாகும். 

சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்கு பொரித்த கோழிக் கால்கள் பற்றி ஆசையூட்டி வளர்த்த பெற்றோரினால், தமது எல்லாப் பிள்ளைகளையும் எல்லா சாப்பாட்டு வேளைகளிலும் திருப்திபடுத்த முடிவதில்லை !

No comments

Powered by Blogger.