Header Ads



மைத்திரியை எச்சரித்த ரணில், தனி அரசாங்கத்தை நிறுவ முடியுமெனவும் சவால்...!

-தமிழில் gtn-

ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய பிரமுகர் ஓருவர் தனது ஆதரவாளர்களிற்கு நன்றி தெரிவிப்பதற்காக கொழும்பின் புறநகர் பகுதியொன்றிற்கு  சென்றிருந்தார்.

அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பொறியிலாளரான அவரது ஆதரவாளர் ஓருவர் எழுந்து அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம்- நல்லாட்சியை விட்டுவிடுங்கள் தற்போது நாட்டில் சாதாரண ஆட்சிகூட கிடையாதே என்றார்.

அவரது கருத்து தேர்தல் முடிவடைந்து இரு வாரங்களின் பின்னரும் நாடு எதிர்கொண்டுள்ள நிலையை புலப்படுத்துவதாக அமைந்திருந்தது.

ஐக்கிய தேசிய கட்சி,ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை பதவிக்காக மேற்கொள்ளும் கடும் முயற்சிகள் காரணமாக  தேர்தல்முடிவடைந்து இரு வாரங்;களின் பின்னரும் அமைச்சரவை என்ற ஓன்று இல்லாத நிலை காணப்படுகின்றது.

செப்டம்பர் 2 ம் திகதி அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் அது தற்போது பிற்போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சியின் 64வது வருடாந்த மாநாடு பொலனறுவையில் இடம்பெறுகின்றது, இதனால் அன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகள் ஏதுவும் இடம்பெறாது.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பாராளுமன்றம் சபாநாயகரை தெரிவுசெய்வதற்காக செப்டம்பர் முதலாம் திகதி கூடும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கரு ஜெயசூர்யவின் பெயரை முன்மொழிவார், இரு தரப்பும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன.அதன் பின்னர் சபாநாயகர் எதிர்கட்சி தலைவரின் பெயரை அறிவிப்பார்,எதிர்கட்சி தலைவர் மற்றும் பிரதிசபாநாயகர் ஆகியோர் குறித்த தெரிவை சிறிசேனவே மேற்கொள்ள உள்ளார். 

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுகூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.சுதந்திரக்கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பௌசியே பிரதிசபாநாயகராக அறிவிக்கப்படுவார் என தெரியவருகின்றது.

செவ்வாய்கிழமை ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்திற்கு உரையாற்றவுள்ளார், அவ்  உரையை நாடாளாவிய ரீதியில் ஓளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அந்த உரையின் போது சிறிசேன தேசிய அரசாங்கத்தின் நோக்கங்கள் குறித்து தெரிவிப்பார்.

அதன் பின்னர் வியாழக்கிழமை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை முன்மொழிவார்,30 ற்கு மேற்பட்ட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களை நியமிப்பதாக இருந்தால் அதனை பாராளுமன்றம் அங்கீகரிக்கவேண்டும் என 19 வது திருத்தம் தெரிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது, அதற்கு ஏற்பவே பிரதமர் தேசிய அரசாங்கம் குறித்த பிரேரணையை முன்மொழிவார்.

குறிப்பிட்ட பிரேரணையை நிறைவேற்றுவதற்கு முன்னர் விவாதம் நடைபெறவேண்டும் என ஜே.வி.பி வேண்டுகோள் விடுத்துள்ளது.19 வது திருத்தம் அமைச்சர்கள் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையை வரையறுத்துள்ள நிலையில்,மக்களின் வரிப்பணத்தை செலவுசெய்து பாரிய அமைச்சரவையை அமைக்கவேண்டிய தேவையுள்ளதாக நான் கருதவில்லை என ஜே.வி.பி தலைவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கான இந்த நடவடிக்கை, நாட்டிற்கு உகந்ததல்ல,30 அல்லது 40 பேர் போதும், ஏன் இதனை அதிகரிக்கவேண்டும்,என அவர் கேள்வி எழுப்பினார்.

தேர்தலிற்கு பின்னர் மக்களிற்கு தேசிய அரசாங்கத்தின் பெருமையை எடுத்துக்கூறும் முயற்சிகள் இடம்பெற்றாலும், திரைமறைவில் நடைபெறும் முயற்சிகள் மிகவும் கடினமானவையாகவே காணப்படுகின்றன.

ஜனாதிபதி சிறிசேன தலைமையில் பல கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன, அந்த கூட்டங்களில் ஐக்கிய தேசிய  கட்சிக்கு உரிய பங்கை வழங்கவேண்டும் என்பதில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க உறுதியாக இருந்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கரிசனைகளை செவிமடுக்கா விட்டால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஓரு கூட்டத்தில் அவர் கடும் எச்சரிக்கையை விடுத்தார். ஐக்கிய தேசிய கட்சியால் தனது சொந்த அரசாங்கத்தை அமைக்க முடியும் என அவர் ஓருதடவை எச்சரிக்கையும் விடுத்தார்.

ரணில் விக்கிரமசிங்க தனது ஏமாற்றத்தை மறைக்கவில்லை, ஆனால் அதனை மிகவும் பணிவான  முறையில் முன்வைத்தார் என அரசியல்வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை சிறிசேனவின் வேண்டுகோளை ஏற்று தேசிய அரசாங்கத்தில் இடம்பிடித்தால் தங்களிற்கு மிச்சம் மீதியே கிடைக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர்கள் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

தாங்களும் ஓரு வலுவான சக்தி, தங்களையும் சமமாக நடத்தவேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் முன்னாள் ஜனாதிபதி  சந்திரிகா குமாரதுங்  இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்பை வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிக ஆசனங்கள் உள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். திரைமறைவில் நடைபெறும் இந்த விடயங்கள் குறித்து நாட்டுமக்கள் பெருமளவிற்கு அறிந்திருக்கவில்லை.

No comments

Powered by Blogger.