Header Ads



ஐக்கிய தேசியக் கட்சி செய்த, துரோகத்திற்காக மகிழ்ச்சியடைகிறேன் - ஆசாத் சாலி

-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-

ஐக்கிய தேசியக் கட்சி எனக்கு செய்த துரோகத்தையிட்டு மகிழ்வடைகிறேன் என நுஆ கட்சியின் தலைவர் ஆசாத் சாலி, ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வட்ஸ்அப் மூலம் தெரிவித்தார்.

அவர் இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி தேர்தலில் 99 சதவிதமான முஸ்லிம்கள் மைத்திரிக்கு வாக்களித்தார்கள். மகிந்த தோற்கடிக்கபட்ட வேண்டுமென்பதற்காக மைத்திரிக்கு ஆதரவளித்தார்கள். தனது வெற்றிக்கு முஸ்லிம்களே பிரதான காரணம் என்பதை மைத்திரி இன்றும் ஞாபகத்தில் வைத்துள்ளார். மைத்திரிக்கு இந்த வெற்றி கிடைப்பதற்கு ஆசாத் சாலி செய்த தியாகங்கள் பற்றியும் மைத்திரி நன்கு அறிந்துள்ளார்.

தமிழ் பேசும் சமூகத்தின் பிரதிநிதி என்ற வகையிலும், அவரின் வெற்றிக்கு உயர் பங்களிப்புச் செய்தவன் என்ற வகையிலும் ஜனாதிபதி மைத்திரி தனது வெளிநாட்டு பயணங்களின் போது என்னையும் இணைத்துக்கொண்டார். நமது நாட்டுக்கு வெளிநாட்டு பிரமுகர்கள் வரும்போது என்னையும் அறிமுகப்படுத்தினார். இது ஆசாத் சாலிக்கும், ஒட்டுமொத்த தமிழ் பேசும் சமூகங்களுக்கும் கிடைத்த கௌரவமாகும்.

எனக்கு தேசியப் பட்டியல் தருவதாக கூறிவிட்டு, பின்னர் ஏமாற்றி துரோகம் செய்தமை குறித்து ஜனாதிபதி மைத்திரிக்கு கவலையுண்டு. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமேகேயிடம் ஜனாதிபதி இதனை நேரடியாக தெரிவித்தார். ஆசாத் சாலி பாராளுமன்றத்தில் இருக்கவேண்டியவர் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு 99 சதவீதமான முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை. எனினும் 3 முஸ்லிம்களுக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்ல மைத்திரி அனுமதி வழங்கினார். ஒரு தமிழருக்கும் வாய்ப்புக் கொடுத்தார்.

எனினும் 99 சதவீத வாக்குகளை பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியோ தமது கட்சியைச் சேர்ந்த எவருக்கும் தேசியப் பட்டியல் மூலம் வாய்ப்பு வழங்கவில்லை. எனக்கு துரோகம் செய்தது. இந்தத் துரோகம் குறித்து நான் மகிழ்வடைகிறேன். 

இப்போது எனது பலத்தை என்னால் மதிப்பிட முடிகிறது. தேசிய பட்டியல் கிடைக்காமையால் எனக்கு எந்தக் குறையும் இல்லை. தொடர்ந்து எனது குரல் தமிழ் பேசும் மக்களுக்காக ஒலித்துக்கொண்டேயிருக்கும். அதற்கு இறைவனைத் தவிர வேறு எவரும் முற்றுப்புள்ளி வைக்கமுடியாது.

ஜனாதிபதி மைத்திரியிடம் நான் எந்தப் பதவி கேட்டாலும் வழங்குவார். எனினும் பதவிகளுக்கு பின்னால் செல்லவேண்டிய தேவை எனக்கில்லை. ஒருபோதும் வெளிநாட்டு தூதர் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இலங்கையில் வாழும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பதவிகள் வழங்கபட்டால் அதுகுறித்து பரிசீலிப்பேன்.

எனக்கு பதவிகள் இல்லாவிடத்திலும் நான் வீதியில் இறங்கிச் செல்கையில் ஒரு அமைச்சருக்கு கிடைப்பதிலும் கூடிய செல்வாக்கு கிடைகிறது. இதனை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி. இது கிடைத்தது மக்களுக்காக ஒலித்த எனது நேர்மையான குரல் மூலமே.

ஆசாத் சாலி ஒரு கொள்கைவாதி என்பதை ஜனாதிபதி மைத்திரி நன்கு அறிந்து வைத்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையிலிருந்து அவர் சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு செல்லும்போது என்னையும் அவருடைய காரில் அழைத்துச்செல்வார். நான் சுதந்திர கட்சியின் வாசற்கதவு வந்ததும் இறங்கிவிடுவேன். பின்னர் ஆட்டோ ஒன்று பிடித்து ஜனாதிபதி மாளிகைக்கு சென்று அங்குள்ள எனது வாகனம் மூலம் எனது வீட்டிற்குச் செல்வேன்.

பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் 3 தடவைகள் இது நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றிருந்த நான் மற்றுமொரு கட்சியின் அலுவலகத்திற்குக்கூட செல்லக்கூடாது என்ற கொள்கை பிடிப்புடன் இருந்தேன். எனது கொள்கை பிடிப்புக்குறித்து ஜனாதிபதி மைத்திரி பலதடவைகள் சிலாகித்து பேசியுள்ளார். இப்படிப்பட்ட எனக்குத்தான் இறுதியின் ஐக்கிய தேசியக் கட்சி துரோகம் செய்தது.  இந்த துரோகம் ஆசாத் சாலிக்கு மாத்திரம் உரியதல்ல. சிறுபான்மை சமூகத்தின் குரலாக ஒலித்த ஆசாத் சாலிக்கும், சிறுபான்மை சமூகத்திற்குமான துரோகம் ஆகும்.

இன்னும் சில மாதங்களில்  2 தேர்தல்கள் நடைபெறவுள்ளது. இதில் நுஆ கட்சி தனித்து போட்டியிடும். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் நாடு முழுவதும் உள்ள எனது செல்வாக்கையும், மக்கள் ஆதரவையும் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் எனவும் ஆசாத் சாலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.