Header Ads



பிறக்குமுன்னே குழப்பம் பண்ணுகின்ற மைத்திரி - ரணில் தேசிய அரசாங்கம்

-நஜீப் பின் கபூர்-

ராஜபக்ஷ என்ற சக்கரவர்த்தியின் பிடியில் நாடு சிக்கி இருந்த நாட்கள் அவை. அவர் காகம் கறுப்பு என்று சொன்னால் அதற்கும் அப்படித்தான் என்றவர்கள். இல்லை அது வெள்ளை என்று சொன்னால் அதற்கும் நமது  மக்கள் பிரதிநிதிகள் ஆமா போட்ட காலம் அது.  எனவேதான் 18க்குக் கை தூக்கிய ஒரு தனித்துவக் கட்சியின் செயலாளர் நாங்கள் எமது உயிர்களுக்கு அஞ்சியே அப்படிச் செய்ய நேர்ந்தது என்று பின்னர் வாக்கு மூலம் கொடுத்ததிலிருந்து இந்த ராஜபக்ஷாக்கள் மக்கள் பிரதிநிதிகளை எப்படியெல்லாம் நடத்தி வந்திருக்கின்றார்கள் என்று புரிந்து கொள்ள முடியும்.

அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட ராஜபக்ஷக்கள் மற்றும் அவர் பிள்ளைகளின் கரங்களினால் பரவலாக கண்ணத்தில் அரை வாங்கி இருக்கின்றார்கள் என்பது பரவலாக நாட்டில் பேசப்படுகின்றது. இப்படி இருந்த அரசியல் பின்னணிதான் கடவுள் சக்தியாலோ அல்லது மனித முயற்சியாலோ ராஜபக்ஷக்களின் அட்டகாசங்களுக்கு ஒரு முடிவு மைத்திரி என்ற பெயரில் வந்து சேர்ந்தது. குடிகளுக்கும், அவர்கள் பிரதிநிதிகளுக்கும் ஒரு அரசியல் விடுதலை கிடைத்தது. 

சட்டத்துறையினரும் காவல் துறையினரும் சர்வாதிகாரியின் பிடியிலிருந்து விடுபட்டனர். ஊடகத்துறையினரும் இலத்திரணியல் செய்தி நிறுவனங்களும் துணிந்து உள்ளதை மக்கள் முன் சொல்ல ஆரம்பித்தனர்.அன்று ஆண்டவனுக்குக் கூட அஞ்சாதவர்கள் அதிகாரத்தில் இருந்த ராஜாக்களுக்கு அஞ்சி குழை நடுங்கிக் கொண்டிருந்தனர். மைத்திரியும் அவர் குழுவும் அன்று உயிரைச் துச்சமாக வைத்து எடுத்த முடிவு நாட்டில் சகவாழ்வு தோன்ற முதலடியை எடுத்துக் கொடுத்தது.  அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தலில் மஹிந்த ஒரு கரணம் தப்பினாலும் அடுத்த கரணத்திலாவது தனது சாகசத்தைக் காட்டலாம் என்று கணக்குப்போட்டு பிரதமர் கனவில் மிதந்தார்.  மெதமூலனையில் நின்று அரசியலைத் துவங்கிய அவர் எதுகல்புறைக்கு (குருனாகல) அடித்தார் அந்தர் பல்டி. அந்த பல்டியில் பின்னணியில் இருந்த சுயநலம் பற்றி நாம் முன்னர் ஒரு முறை சொல்லி இருந்தோம். எனவே அதனை இங்கு மீண்டும் சொல்ல வேண்டியதில்லை.

தேர்தல் நடந்தது. ஜனவாரி 8ல் சிறுபான்மையினரே என்னை மண்கவ்வச் செய்து விட்டார்கள் என்று பெரும்பான்மை மக்களைத் தூண்டி வாக்கு வேட்டையில் குதித்தார் மனிதன். அந்தக் கூப்பாடு  விலைப்படவில்லை. பெரும்பான்மையே ஆகஸ்ட்17ல் அவரை மண்கவ்வச் செய்த போது இந்த முறை இது வரை அது பற்றி அவர் வாய் திறக்க வில்லை. எனவே பெரும்பான்மை சிறுபான்மை என்ற பாகுபாடின்றி எல்லோரும் சேர்ந்து ஆளை இப்போது வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார்கள். ஆனால் ஆளோ விட்டபாடில்லை. மக்கள் அவையில் ஓரமாகக் குந்தி இருக்கின்றேன் என்று இப்போது சொல்லி இருக்கின்றார். ஒரு வேளை சந்தர்ப்பம் வாய்த்தால் மைத்திரியின் கழுத்தைப் பிடிப்பதற்கான தந்திரமாகக் கூட இந்தப் பதுங்கள் இருக்கக் கூடும் என்பது எமது குறிப்பு.

இந்தப் பின்னணியில் தற்போது நாட்டில் என்ன நடக்கின்றது. என்று கேட்டால் ஒரே வார்த்தையில் சுயநலம் என்று பதில் கொடுக்கலாம். பிரதான கட்சிகளிடையேயும்  அந்த உறுப்பினர்களிடையேயும் தேச நலனைவிடவும் சுயநலமே மேலோங்கி இருக்கின்றது என்பது கடந்த சில தினங்களாக நடக்கின்ற சம்பவங்களில் இருந்து தெளிவாக பார்க்க முடிகின்றது. அரசியல்வாதிகள் ரணிலின் படகிலும் இன்னும் சிலர் மைத்திரி படகிலும் இன்னும் சிலர் இந்த இரு அணிகள் ஊடாக மைத்திரி தரப்பில் களத்தில் நின்றார்கள். எப்படியோ இவர்களில் இன்று 225 பேர் பாராளுமன்றத்தில் பல்வேறு தரப்பில் இருந்து ஆசனங்களைப் பிடித்திருக்கின்றார்கள். 

இப்போது அந்தப் பயணியின் நிலையில்; இவர்கள் ஆளும் தரப்பில் தமக்கு வசதியாக வியாபாரம் பண்ண இடம் தேடுகின்றார்கள். அந்த இருக்கை  அமைச்சாக இருக்க வேண்டும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. அதுவும் நல்ல அமைச்சு. என்றும் தமது அணிக்கு எத்தனை அமைச்சு என்றெல்லாம் இன்று அதிகார ஆசையில் நிற்கின்றார்கள். 

இவர்கள் அனைவரும் சொல்வது போல் தேச நலனை இலக்காகக் கொண்டது என்பதனை விட முற்றிலும் அவர்கள் சுய நலத்தை  அடிப்படையாகக் கொண்டே இந்த தேசிய அரசை முன்னெடுத்துச் செல்ல முனைகின்றார்கள். இதனால்தான் இன்று அமைச்சுக்களை தீர்மானித்துக் கொள்வதில் அவர்கள் தமக்குள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது மிகத் தெளிவான விடயம். புதியவர்கள் வந்து சேர்ந்தால் தங்களுக்குள்ள வசதி வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டு விடுமே என்று அஞ்சுகின்றவர்கள் நிறையவே இந்தக் குழுவில் இருக்கின்றார்கள்.

எப்படியோ இவர்கள் இந்த அமைச்சைத் தமக்குள் பகிர்ந்து கொண்டாலும் ஒரு போதும் இதில் திருப்தி கொள்ள மாட்டார்கள் என்பது எமது கருத்து. எனவே இந்த தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியினரும் வீதிச் சண்டைக்காரர்களைப் போன்று தமக்குள் மோதிக் கொள்வார்கள் என்பது உறுதி. ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் தீர்க்கமான கட்டுப்பாடுகளை தமது தரப்பினருக்கு விதிக்காத நிலையில் இந்த தேசிய அரசாங்கம் பிறப்பிலே நோய்வாய்ப்பட அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது. 

அதிகாரப் பகிர்வுக்காக தற்போது ஐ.தே.க - சு.க.வுக்குமிடையே நடந்த குடுமிச் சண்டை பற்றிய தகவல்களைப் இப்போது பார்ப்போம்.ஜனவரி 8ல் மைத்திரி வெற்றி பெற்றதுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியினரும் இணைந்து தேசிய நல்லிணக்க அரசை அமைத்துக் கொண்டார்கள். இது சில நல்ல காரியங்களைப் பண்ணினாலும் இந்த இரு தரப்பினரும் தமக்குள் விசுவாசத்துடனோ அல்லது புரிந்துணர்வுடனே நடந்து கொள்ள வில்லை என்பது அனைவரும் தெரிந்த விடயமே. இப்போதும் மைத்திரியின் தேசிய அரசு பற்றிய எண்ணக்கருவை நடை முறைப் படுத்துவதில் பிறப்பிலே சிக்கல்கள் தோன்றி இருக்கின்றது இதனால்தான் இன்று வரை அவர்கள் தமக்குள் அமைச்சரவையை தீர்மானித்துக் கொள்ள முடியாமல் இருக்கின்றது.

ஒரு கட்டத்தில் 55 - 45 என்ற எண்ணிக்கையில் இந்த அமைச்சுக்களை பகிர்ந்து கொள்ள முடிவுகள் எடுக்கப்பட்டாலும் பின்னர் சுதந்திரக் கட்சியினர் ஆளும் தரப்பிலும் எதிர்த் தரப்பிலும் ஒரு மேடை நாடகம் போல் பாத்திரங்களை ஏற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது அப்படியாக இருந்தால் அந்த விகிதத்திற்கு ஏற்பத்தான் இந்த அமைச்சுக்கள் பகிரப்பட வேண்டும் என்ற வலுவான கோரிக்கை ஐக்கிய தேசியக் கட்சியால் முன்வைக்கப்பட்டபோது 55 க்கு 45 என்ற பகிர்வில் நெருக்கடி வந்தது.

மேலும் மைத்திரி அணி சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு யார் தரப்பில் அமைச்சுக் கொடுப்பது என்ற இழுபறி நிலையும் தோன்றியது. நமக்குக் கிடைக்கின்ற பிந்திய தகவல் படி இந்த அணிக்கு ஐ.தே.க. பட்;டியலில் அமைச்சு என்று முடிவாகி இருக்கின்றது என்று எமக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றது.  அடுத்து ஆளும் தரப்பில் வந்து அமர்கின்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கு 15 அசை;சுக்கள் என்று முடிவாக்கி இருக்கின்றது. எனவே ஐ.தே.கவில்-30 சுதந்திரக் கட்சியில் 15 என்று அமைச்சர்களின் எண்ணிக்கை முடிவாகி இருக்கின்றது. அடுத்த பிரச்சினை கனதியான அசைச்சுக்களை தமக்குள் எப்படிப் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற விடயத்திலும் இவர்களுக்கிடையில் குடுமிச் சண்டை நிறையவே நடந்திருக்கின்றது. எப்படியே ஓரளவுக்கு பிரச்சினை அறைகுறையாக தீர்க்கப்பட்டிருக்கின்றது. இதில் பிரதமர் ரணிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் கடுமையாக உழைத்திருக்கின்றார்கள் இன்னும் சில விடயங்கள் ஜனாதிபதியும் பிரதமரும் பேசித் தீர்க்க வேண்டி இருக்கின்றது.  

அவர்கள் ஒருவாராகத் தமக்குள் முடிவுகளை எட்டி இருந்தாலும். அதற்கு சட்டம் குறுக்கே நிற்கின்றது.  சட்டப்படி பாராளுமன்றம் நாளை முதலாம் திகதி கூட வேண்டி இருக்கின்றது. ஆனால் அமைச்சர்கள் இன்னும் நியமிக்கப்பட வில்லை. முதலில் 30 பேரை நியமித்து பின்னர் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்று ஏனைய 15 பேரை பின்னர் நியமிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டாலும் அது நெருக்கடிகளைக் கொண்டு வந்து வீண் பிரச்சினைகளைக் கொடுக்கும் என்று  எதிர்பார்க்கப்படுவதால் அமைச்சர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சத்தியப் பிரமாணம் செய்வது என்று தற்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே அமைச்சர்கள் எண்ணிக்கை 45 என்று அதிகரிக்கின்றது. 

19 வது திருத்தத்தில் சொல்லப்பட்ட படி 30 க்குள் அதனை மட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் போனதிலிருந்து இங்கு தேசிய நலனை விட சுயநயம் பதவிமோகம் மேலோங்கி இருக்கின்றது என்பது உறுதியாகின்றது. என்றாலும் தேசிய அரசாங்கம் அமைக்கின்ற போது அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகாரித்துக் கொள்ள முடியும் என்று விதி 19ல் இருக்கின்றது.  பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றபோது ஜேவிபி அதனைக் கடுமையாக விமர்சிக்க இருக்கின்றது என்று தெரிகின்றது. 

அதே போன்று சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் முன்னர் இரு தரப்பினருக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட தேசிய அரசு பற்றி உடன்பாட்டில் நிறையவே குறைபாடுகள் இருக்கின்றது என்பது அவர்கள் குற்றச்சாட்டு.

சுதந்திரக் கட்சியின் 64 தேசிய மா நாடு பொலன்னறுவைமைத்திரியின் மண்ணில் 2ம் திகதி நடக்க இருப்பதால் அதற்கான காரியங்களை மைத்திரி பார்க்க வேண்டி இருக்கின்றது. எனவே முதலாம் திகதி கூடுகின்ற பாராளுமன்றத்தில் சபாநாயகர் பிரதி சபநாயகர் குழுக்களின் தலைவர் போன்ற பதவிகளுக்கு ஆட்களை நியமித்துக் கொள்கின்ற பணிகளில் மட்டுமே தனது கவனத்தை செலுத்த முடியும். அதற்கு மேலதிகமாக ஜனாதிபதி மைத்திரி கண்டிப்பும் கட்டுப்பாடுமுடைய மக்கள் நலனுக்கான பாராளுமன்றமாக இது அமைய வேண்டும் என்ற கருப்பொருளை முன்வைத்து நல்லதொரு உரையை அன்று பாராளுமன்றத்தில் நிகழ்த்துவதற்கு தயாராக இருக்கின்றார் என்பது மட்டும் இப்போது உறுதியாகத் தெரிகின்றது.

2 comments:

  1. இந்த அரசாங்கம் இரண்டு வருடம் ஓடினாலே பெரிய அதிசயம் .

    ReplyDelete
  2. ஐயா "கௌரவ ரனில்" அவா்களே! ஐ.ம.சு.மு - ஒரு வாக்கேனும் அதிகம் பெட்டிருந்தால்...! உங்கள் தேசிய அரசு என்ன தேசமே அவா்களின் கைக்குள்ளும், ஐ.தே.க.- தேங்காய் உடைக்கும் அதிகாரம் கூட இல்லாமல் இருந்திருக்கும். ஐ.தே.க- யை வெல்ல வைப்பதற்காக சாதாரன கட்சி தொண்டா்கள் செய்த தியாகம், கஷ்டம் எல்லாம் வெண்டாலும் தோற்றாலும் எப்போதும் சொகுசு பதவி வகிக்கும் உங்களுக்கு எங்கே புரியப் போகுது!

    ReplyDelete

Powered by Blogger.