Header Ads



புத்தளம் மக்களுக்கு, றிஷாட் பதியுதீன் விடுக்கும் அன்பான அழைப்பு..!

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெறுவதற்கு மிக அதிக வாய்ப்பு காணப்பட்டது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒற்றுமைப்பட்டு ஆர்வத்துடன் வாக்களித்திருப்பின் மூவரும் வெற்றி பெற்று கடந்த 26 வருடங்களாக எம்.பி ஒருவர் இல்லையே என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்த நிலை மாறி நீங்கள் எல்லோரும் இன்று மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள். எனினும் அல்லாஹ்வின் ஏற்பாட்டை பொருந்திக் கொள்வோம்.

இத்தேர்தலில் நாடு பூராகவும் முஸ்லிம்களும் தமிழர்களும் ஐக்கிய தேசிய கட்சிக்கு அமோகமாக வாக்களிக்க அணி திரண்டிருந்த சூழலை புத்தளம் மாவட்ட மக்களும் சரிவர சாதகமாக பயன்படுத்தி தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கிலேயே நீங்கள் எல்லோரும் பெரிதும் மதிக்கின்ற மூத்த அரசியல்வாதியான அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவியை அணுகி நிலைமைகளை விளக்கி இறைவன் மீது நம்பிக்கை வைத்து போட்டியிடுமாறு அவரது வீடு தேடி சென்று அன்பாக வேண்டிக் கொண்டேன். அதன் மூலம் உங்களது தேவைகளையும், குறைகளையும் நீங்கள் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று நான் மிகவும் ஆசைப்பட்டேன்.

மாறாக நான் யாருக்கும் துரோகம் செய்ய வேண்டும், அநீதி இழைக்க வேண்டும், யாருடைய முயற்சிகளையும் சீர்குழைக்க வேண்டும், யாரையும் பழிதீர்க்க வேண்டும் என்றெல்லாம் ஒரு போதும் நினைக்கவில்லை. இது அல்லாஹ்வின் மீது ஆணையாகும். குறிப்பாக நான் புத்தளத்தை ஆளப் போகின்றேன், எதிர்காலத்தில் தேர்தல் கேட்கப் போகின்றேன், மேலாதிக்கம் செலுத்தப் போகின்றேன் என்றெல்லாம் வேண்டுமென்று எனக்கெதிராக பரப்பப்படும் பொய்யான பிரச்சாரங்களை முற்று முழுதாக நான் மறுக்கிறேன். அப்படியொரு மோசமான எண்ணம் எனது மனதில் துளி அளவும் கிடையாது. அனைத்தையும் அல்லாஹ் அறிவான்.

அல்ஹாஜ் நவவியின் வெற்றி வாய்ப்பு சொற்ப வாக்குகளால் தவறிப் போனது. எனினும் இந்நிலையில் புத்தளம் மாவட்ட மக்களுக்கு நன்றிக் கடனாகவும், அவர்களை கௌரவிக்கும் மூகமாகவும் எமது கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை பெருமனதுடன் மஷூராவின் அடிப்படையில் அல்ஹாஜ் நவவிக்கு வழங்கியுள்ளோம். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

எனவே தற்போது கிடைத்துள்ள இந்த அருமையான வாய்ப்பை நீங்கள் கட்சி, பிரதேச மற்றும் சகல பேதங்களுக்கும் அப்பால் பயன்படுத்தி. மக்களுக்கு கிடைக்கவுள்ள சகல விடயங்களும் உரிய முறையில் வந்து சேர பூரண ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்பாக வேண்டுகிறேன்.

இத்தேர்தலில் போட்டியிட்ட சகோதரர்களான நஸ்மி, பைறூஸ், கமலக் கண்ணன், முஸம்மில், பாயிஸ், ஜிப்ரி தலைமையிலான வேட்பாளர்கள், மேலும் சகோதரர்களான அலிசப்ரி, அலிகான், மொஹிதீன் பிச்சை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் இல்யாஸ், அபூபக்கர், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான நியாஸ், தாஹிர், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான யஹ்யா, ரியாஸ், கமறுதீன் முக்கியஸ்தர்கள், முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள், பிரதித் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட சமூக அக்கறையுயுள்ள சகலரும் புத்தளம் மாவட்ட மக்களின் நலன்களுக்காக பரஸ்பர புரிந்துணர்வுடன் நல்லெண்ணத்துடன் ஒன்றுபட்டு மக்களுக்கு சேவைகளைப் பெற்று கொடுக்கும் சிறந்ததொரு சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் மிகவும் அன்பாக வேண்டுகிறேன்.

இதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்ட கிளை, புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகம் ஏனைய பள்ளிவாசல்களின் நிர்வாகங்கள், இஸ்லாமிய இயக்கங்களின் பிரதிநிதிகள், தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்கள் முக்கியஸ்தர்கள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று தயவாய் வேண்டுகிறேன்.

மேலும் எமது கட்சி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்ததன் மூலம் அவரதும் நமது மக்களினதும் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. அத்துடன் நடந்து முடிந்த தேர்தலில் தேசியப் பட்டியல் உட்பட 5 ஆசனங்களுடன் அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சியாகவும் திகழ்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

எனவே இதனை சிறந்த வாய்ப்பாக கருதி புத்தளம் மாவட்ட மக்களின் அபிலாஷைகள், தேவைகள், சிறந்த திட்டங்கள் என்பவற்றை செயற்படுத்த நாம் உங்களுக்கு பூரணமாக உதவக் காத்திருக்கிறோம் என்ற நற்செய்தியையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த கால கசப்புணர்வுகள், குரோதங்கள் என்பவற்றை மறந்து பெருமனதுடன் மன்னித்து இந்தப் பயணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம். எல்லாம் வல்ல இறைவன் அதற்கு அருள் புரிவானாக.

இத்தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

என்றும் அன்புடன்
அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன்
தலைவர் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

3 comments:

  1. வருகின்ற உள்ளூராட்சி தேர்தலுக்கு தனது வியாபாரத்தை ரிசாத்தவர்கள் நல்லபடியாக தந்திரமாக ஆரம்பித்துள்ளார் இனி ஹகீம் அவர்கள் எப்படி ஆரிபிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்போம்.

    முஸ்லிம்களின் வெற்றி ஒரு கட்சியும் ஒரு தலைமைத்துவமும் தான் இருக்க வேண்டும். அது எது என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். இதற்கு புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும் மக்களுக்கு உதவலாம்.

    ReplyDelete
  2. You are the real pilitician and really we are thanking your kind support and love for puttalam.

    ReplyDelete

Powered by Blogger.