Header Ads



அரசியல் கட்சியொன்றின் மீது ஒருவருக்குள்ள பரம்பரை சார்ப்புத் தன்மை, வாக்களிப்பதற்கான ஒரேயொரு தகுதியாக அமைந்துவிடக் கூடாது

பொதுத் தேர்தலின்மூலம் தகுதியுடைய வேட்பாளர்களை மாத்திரம் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுப்பதற்காக அதிகபட்ச பங்களிப்பை நல்குமாறு அனைத்து பிரஜைகளிடமும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை கத்தோலிக்க பேராயர் சம்மேளனத்தின் தலைவர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பக்கச்சார்பின்றி வாக்களிப்பதை உறுதிசெய்தலின் பொருட்டு, அனுபவமிக்க மற்றும் விழிப்புடன் கூடிய சமூகத்தின் பங்களிப்பு இன்றியமையாதது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்கட்சிகள் வெவ்வேறு வடிவங்களில் கூட்டணி அமைத்து அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்வைத்துள்ளதாகவும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நிறைவேற்றப்பட்டுள்ள 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்பவற்றினூடாக தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் காரணமாக சுதந்திரமானதும், நீதியுமான தேர்தலை நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறந்த கல்வித் தகைமை, சட்டத்திற்கு மதிப்பளித்தல், நேர்மை மற்றும் ஒழுக்கத்துடன் கூடிய அரசியல் தலைமைத்துவம் என்பன வேட்பாளர்களின் குணவியல்புகளாக இருத்தல் அவசியம் எனவும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியல் கட்சியொன்றின் மீது ஒருவருக்குள்ள பரம்பரை சார்ப்புத் தன்மை, வாக்களிப்பதற்கான ஒரேயொரு தகுதியாக அமைந்துவிடக் கூடாது என்றும் பேரவையின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.