Header Ads



யார் பிரதமராக வந்தாலும் ஜனாதிபதி மைத்திரி, நிலைத்திருக்க வேண்டும் - அத்துரலிய ரத்ன தேரர்


-நுஷ்கா நபீல்-

பொதுத் தேர்தலில் யார் பிரதமராக வந்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி எதுவித மாற்றமுமின்றி நிலைத்திருக்க வேண்டும் என அத்துரலிய ரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்தை வலியுறுத்தினார். ஜனாதிபதியின் பதவி நிலைத்திருப்பதை உறுதிசெய்வ தானது அதிகாரத்தை உறுதிப்படுத்து வதற்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

19ஆவது திருத்தச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டாலும் தகவல் அறியும் சட்டம் மற்றும் 20ஆவது அரசியலமைப்பு போன்ற மக்களால் எதிர் பார்க்கப்பட்டவை நிறைவேற்றப்படவில்லை. நாட்டில் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கம் வெற்றிகாணவில்லை. 100 நாள் வேலைத்திட்டம் 200 நாளாக நீடித்தது. பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் உடனடியாகப் பாராளுமன்றத்தைக் கலைக்கவேண்டிய நிலைக்கு ஜனாதிபதியை இட்டுச்சென்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தைகளால் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட பிரேரணைகளை நிறைவேற்ற முடியாது போனது. எனவே முன்மொழியப்பட்ட யோசனைகள் அடுத்த பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அத்துரலிய ரத்ன தேரர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் மற்றும் அரசியல் வாதிகள் மாறினாலும் நாட்டின் கொள்கை மாறாதவாறு தேசிய திட்டமிடல் ஆணைக்குழு நியமிக்கப்படவேண்டும். நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடவிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமது யோசனைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கவிருப் பதாகவும் கூறினார்.

தேர்தலில் போட்டியிட பொருத்தமானவர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும். நாட்டின் முன்னேற்றம் மற்றும் நாட்டு மக்களின் நலனுக்கு ஏற்ற வகையில் கொள்கைத் திட்டங்கள் தயாரிக்கப்படுவது அவசியமானது என்றார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதிவழங்குவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

நாட்டில் அதிகரித்திருந்த ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவதே மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரவு அளிக்க முக்கிய காரணமானது. இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் வேட்பாளர் பதவி வழங்குவது அல்ல முக்கியமானது. சட்டத்தை மீறிய குழுவுடன் மீண்டும் மைத்திரிபால சிறிசேன இணையப்போகிறாரா என்பதே இங்கு முக்கியமானது என்றார்.

ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றபோதும் இது இன்னமும் உறுதிப்படுத்தப்பட வில்லையென்றும், தமது கொள்கைகளுக்கு கொடுக்கப்படும் மரியாதை மற்றும் அவர்களின் நடத்தையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அத்துரலிய ரத்ன தேரர் கூறினார்.

No comments

Powered by Blogger.