Header Ads



காத்தான்குடி நூதனசாலை மூடப்படுகிறது - சிலைகளை அகற்ற ஜம்மியத்துல் உலமா பணிப்பு

இலங்கையில் முதன்முதலாக காத்தான்குடியில் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட பூர்வீக நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக்கொண்டதற்கமைய நாளை முதல் அவைகள் அங்கிருந்து அகற்றப்படவுள்ளன. 

அத்துடன் நாளை முதல் நூதனசாலை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாகவும் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய பூர்வீக நூதனசாலையில் பாராக்கிரமபாகு மன்னரின், உருவம் உட்பட சிலைகள், உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை அகற்றுமாறு பல தரப்பினரும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து குறித்த உருவச்சிலை விவகாரத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வா குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து, கடந்த 18.6.2015 அன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பத்வா குழுவினர் நேரடியாக வந்து பார்வையிட்டதுடன் இது தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்தனர். 

இதற்கமைய ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாகுழு குறித்த சிலைகளை அகற்றுமாறு முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. 

அந்தக் கடிதத்தின் பிரதிகள் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் என்பவற்றிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஹிஸ்புல்லாஹ் ஜம்இய்யதுல் உலமாவின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு குறித்த உருவங்களை நாளை முதல் அகற்றுவதுடன் மறு அறிவித்தல்வரை நுதனசாலையை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஜம்இய்யதுல் உலமாவின் வேண்டுகோளின்படி அவைகளை டிஜிட்டல் வடிவில் வடிவமைக்க காலம் தேவை என்பதால் நூதனசாலை தற்காலிகமாக மூடப்படுகின்றது, எனத் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.