Header Ads



கனவிலும் நினைக்காத அளவிற்கு நான் ஜனாதிபதி பீடமேறினேன் - மைத்திரி

இலங்கையில் பொதுமக்களின் நிதியையும் பொதுச் சொத்துக்களையும் மோசடி செய்யாது ஆட்சி நடத்தியவர் என்ற பெருமைக்குரியவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உள்ளிட்ட பண்டாரநாயக்க குடும்பத்தினரெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்காவின் தலைமைத்துவத்தினால் சுதந்திரக் கட்சியினதும் ஜனநாயகம் பேணப்பட்டதெனவும் குறிப்பிட்டார்.  

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.  இராஜதந்திரிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சர்கள் ,எம்.பி.க்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து  உரையாற்றுகையில்;  

ஜனாதிபதி வரையிலான பல்வேறு பதவிநிலைகளை வகித்த சந்திரிகா, தாய்நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய தலைவர் தனது ஆட்சிக்காலத்தில் அவர் பல்வேறு மாற்றங்களைச் செய்தார். அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாற்றங்கள் காணப்பட்டன. சர்வதேச ரீதியில் பண்டாரநாயக்க குடும்பத்தினர் புகழ்பெற்றிருந்தனர். இவர்களால் எமது நாட்டுக்குப் பெருமை ஏற்பட்டது. இந்தியாவின் காந்தி குடும்பத்தினருடன் இவர்கள் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தனர். சுதந்திரத்துக்காக தமிழ், சிங்களத் தலைவர்கள் ஒன்றிணைந்து போராடினர். 

இதன் பின்னர் டி.எஸ்.சேனாநாயக்கா ஆட்சிக் காலத்தில் விவசாயக்  கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டன.  அதன் பின்னரான ஆட்சிக் காலத்தில் பண்டாரநாயக்க குடும்பத்தினரின் ஆட்சிக்காலங்களில் நாட்டின் அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தியிருந்தனர்.  கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. எமது கலாசாரத்தின் பெறுமானங்கள் அதிகரித்தன. அக்காலப்பகுதியில் சர்வதேசம் பிளவுபட்டிருந்தும், இலங்கை இரு தரப்பினருக்கும் நடுநிலையாகச் செயற்பட்டது. இச்சமநிலை  பேணி சர்வதேச உறவினை வலுப்படுத்திய பெருமை பண்டாரநாயக்க குடும்பத்தினரையே சாரும். 

இவர்களின் ஆட்சிக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட வெளிநாட்டுக் கொள்கைகள் மிகவும் வலுவானவை. கொள்கை வகுப்பாளர்கள் சரியான முறையில் தீர்மானங்களை எடுக்கவேண்டும். முடிவுகள் எடுக்கும்போது பல சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலை உருவாகும். அந்த ரீதியில் இவர்களும் தமது ஆட்சிக் காலத்தில் பல சவால்களை எதிர் கொண்டாலும் பல நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்பட்டன.  

அந்த வகையில் சந்திரிகா ஆட்சிக்காலத்தில் என்ன நடந்தது என பலர் கேட்கின்றனர். பொதுமக்கள்  சொத்துக்கள், பொதுநிதிகள் மோசடி செய்யப்படவில்லை என்பதுதான் விடை.  அத்துடன் போரினை சமாதான பேச்சுகள் மூலம் முடிவுக்கு கொண்டுவந்து நல்லிணக்கத்தினை ஏற்படுத்த அவர் பாரிய முயற்சிகளை எடுத்திருந்தார். அத்துடன் சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் அவரிடத்தில் காணப்பட்ட நிலையில் கட்சிக்குள்ளும் ஜனநாயகம் காணப்பட்டது. கட்சியின் உயர்மட்ட முடிவுகள் ஆலோசனைகளின் பின்னரே எடுக்கப்பட்டன. பிறரது கருத்துகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவர் போன்ற தலைவர்களை இன்று காணமுடியாது. 

சில சந்தர்ப்பங்களில் தவறுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவரிடத்தில் காணப்பட்டது. இவ்வாறான குணாதிசயங்களுடைய ஒரு தலைவரை வேறு தலைவர்களுடன் ஒப்பிடமுடியாது.  என்னைப் பொது வேட்பாளாராக முதலில் முன்மொழிந்தவர் சந்திரிகா குமாரதுங்க. பல மாதங்களாக பொதுவேட்பாளரை நியமிப்பது தொடர்பான பிரச்சினைக்கு அவரே தீர்வை முன்வைத்திருந்தார். ஆனால்  இந்த முடிவு சாத்தியமானதாகும் என நாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.  

ஏனைய தமிழ், சிங்களக் கட்சிகள் இதனை ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் காணப்பட்டது. இந்த அடிப்படையில் இன்று நான் ஜனாதிபதியானதற்கு அவரும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளார். இந்த பொதுவேட்பாளர் நியமனத்தில் மூளையாகச் செயற்பட்டவர் அவர். இன்று அவர் இந்த வயதிலும் உத்வேகம் குறையாத தலைவராகக் காணப்படுகின்றார்.  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனைவரும் அவரது பணியை மெச்சுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்நிலையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிரணியின் பொது வேட்பாளராக நான் களமிறங்குவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. எனினும் சந்திரிக்கா அம்மையார் எனக்கு தொலைப்பேசியில் அழைப்பு விடுத்தபோது நான் வேட்பாளராக போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது மக்கள் விடுதலை முன்னணியோ ஆதரவு நல்கும் என்று கூட நான் நினைக்கவில்லை.

எனினும் நான் கனவிலும் நினைக்காத அளவிற்கு நான் ஜனாதிபதி பீடமேறினேன். பொதுவேட்பாளராக நான் களமிறங்குவதற்கு பிரதான விதை விதைத்தவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவாகும் என்றார்.

1 comment:

  1. ஒரு பேரினவாத துவேச அரக்கர்களிடமிருந்து, ஊழல், கோமிஸ் பேர்வழிகளிடம் இருந்து ( ராஜபக்ச அன் கோ) இந்த நாட்டையும் சிறுபான்மை இன மக்களையும் முக்கியமாக முஸ்லிம் சமூகத்தையும் மீட்டெடுத்த ( இறைவனுக்கு அடுத்ததாக ) பெருமை சந்திரிக்கா அம்மையாரையே சாரும். We, wish you happy birthday madam.

    ReplyDelete

Powered by Blogger.