Header Ads



சமல் ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க, யோசனை கேட்ட ஜனாதிபதி மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சமல் ராஜபக்ஷவிடம் கருத்து கேட்டுள்ளதாகவும் அதன்போது தான் அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக அவர் அறிவித்துள்ளதாகவும் சரத் அமுனுகம குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டு பிரிவாக உள்ளதால் மத்தியஸ்தம் வகிக்கும் பிரிவால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடனும் உரையாடி இறுதி முடிவு ஒன்று எடுக்கப்படவில்லை என்று சரத் அமுனுகம தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாகப் பிளவுபடவில்லை என்றும் ஆனால் வெவ்வேறு கருத்துக்களை கொண்டவர்கள் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சிறந்த மூத்தவர்கள் இல்லாது போனாலும் சிறந்த இளையவர்கள் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னிலை உறுப்பினர்கள் சிலருக்கு இம்முறை வேட்பு மனு கிடைக்காது என்று அமைச்சர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரும் பிரதமர் வேட்பாளருக்கு யோசனையாக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அது மாற்று சிந்தனையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறவென குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் உறுப்பினர்கள் 18 அம்ச யோசனைகளை ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாகவும் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.