Header Ads



மஹிந்தவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது - 10 ஆவது முறையாக களத்தில் குதிப்பு..?

வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் தயார் என்றும் அதற்காக மக்களின் வரத்தை கேட்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று புதன்கிழமை (01) உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

தங்காலை, மெதமுலனையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் இன்று நடைபெறவுள்ள எசல பௌர்ணமி தின தர்மதேசனைக்கு பின்னர், காலை 10 மணிக்கு இருக்கும் சுபநேரத்தில் அவர் இந்த அறிவிப்பை விடுவார்.

பிரதமர் வேட்பாளராக களமிறங்குவேன் என்ற அறிவிப்பை விடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பதற்காக கொழும்பிலிருந்து தங்காலைக்கு வாகனப்பேரணிகள் செல்லவுள்ளன. இந்த வாகனப்பேரணியை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சிமன்ற  உறுப்பினர்கள் வழிநடத்தவுள்ளனர். அத்துடன், முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பதற்காக 200 தொழிற்சங்கங்கள், மெதமுலனவை நோக்கி இன்று பயணிக்கவுள்ளதாக கூட்டு தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்தார்.

கல்வி, புகையிரதம், இலங்கை போக்குவரத்துச்சபை, துறைமுகம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மேற்படி தொழிற்சங்கங்களே இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளன என்று கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது விஜேநாயக்க மேலும் கூறினார்.

1970ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த தேர்தலில் போட்டியிட்டால் அது அவர், போட்டியிடும் 10ஆவது தேர்தலாகும். போட்டியிட்ட 9 தேர்தல்களில் இரண்டு தேர்தல்களில் அவர் தோல்வியடைந்துள்ளார். 1970ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷ, 1977ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார். பின்னர் 1989, 1990, 2001 மற்;றும் 2004ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியீட்டினார்.

அதன் பின்னர், 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷ, 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றியீட்டினார். இந்நிலையில், ஜனாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் தெரிவு செய்யுமாறு கோரி 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். இவ்வாறான நிலையிலேயே 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான அறிவிப்பை விடுக்கவுள்ளார். அவ்வாறான அறிவிப்பொன்றை மஹிந்த ராஜபக்ஷ விடுவாராயின் மக்களிடம் வரம்கேட்டு அவர் போட்டியிடும் 10ஆவது தேர்தல் இதுவாகும். 

No comments

Powered by Blogger.