Header Ads



இன்று மஹிந்தவை சந்தித்த நிமல் - மைத்திரியின் நிலைப்பாட்டை விளக்கினார்

எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். 

இன்று முற்பகல் கண்டியில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபாலடி சில்வா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்ஷன யாப்பா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோருக்கிடையில் நேற்று மாலை விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

இதன்போது எட்டப்பட்ட தீர்மானங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதிக்கு நிமல் சிறிபாலடி சில்வா தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. 

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட வேட்புமனுவை கையளிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக, நிமல் சிறிபாலடி சில்வா குறித்த சந்திப்பில் மஹிந்தவிடம் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதேவேளை, எதிர்கட்சித் தலைவரால் தெரியப்படுத்தப்பட்ட தகவல்கள், முன்னாள் ஜனாதிபதியால் இன்று மாலை இடம்பெறவுள்ள, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் முன்வைத்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது எட்டப்படும் தீர்மானங்கள் குறித்து மஹிந்த ராஜபக்ஷ நாளை ஆற்றவுள்ள உரையில் அறிவிப்பார் என கூறப்படுகின்றது. 

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பில் நியமிக்கப்பட்ட அறுவர் அடங்கிய குழு, இன்று ஜனாதியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 

மேலும் சிறுகட்சித் தலைவர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.