Header Ads



ரோகிங்கிய மக்களின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக, லண்டனில் மக்கள் பேரணி (படங்கள்)

நீண்டகாலமாக  கொடூர பர்மிய ஆட்சியாளர்களால் தொடர்ந்தும் அடக்கப்பட்டும், இனப்படுகொலைக்கும் உள்ளாகி வரும் ரோகிங்க மக்களின் மீதான அனைத்துவகை ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பினையும் கண்டனத்தினையும் தெரிவித்தும் அம்மக்களுக்கான ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் தெரிவிக்கும் முகமாக சனிக்கிழமை  பிரித்தானிய பிரதம மந்திரியின் வாசஸ்தலத்திற்கு முன்னால் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கூடி கோசங்களை எழுப்பியதுடன், சர்வதேச சமூகத்தின் கவனத்தினை  ஈர்க்கும் வகையில் அடையாளப் போராட்டத்தினையும் நடாத்தினர்.

இந்த நிகழ்வில் லண்டனில் இயங்கும் ரோகிங்காவைச் சேர்ந்த அமைப்புகளும் ரோகிங்க மக்களும் கலந்து கொண்டதுடன் , அவ்வமைப்பின் பிரதிநிதிகள்  அம்மக்கள்  தற்போது எதிர் கொள்ளும் அவலங்களை இந்த நிகழ்வில் பங்கு கொண்ட மக்கள் முன் எடுத்துரைத்தனர். ஐக்கிய இராச்சியத்தில் பல்வேறு பிரதேசங்களில் வாழும் மக்களும்  பல்வேறு அமைப்புகளும் இந்த நிகழ்வுக்கு ஆதரவு அளித்ததுடன் இந்த நிகழ்வு நடைபெற உதவி புரிந்ததாக இந்த கண்டன அடையாள எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்த Overseas Srilankan muslim organisation அமைப்பினர் தெரிவித்தனர் .

ஐக்கிய நாடுகள்  சபையே உனது மௌனத்தினைக் கைவிட்டு ரோகிங்க மக்களின் உயிர் பாதுகாப்பையும் குடியியல் உரிமையையும் உறுதிப்படுத்து, பிரித்தானிய அரசே உனது காலனித்துவ கொள்கையினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உனது பதில்தான் என்ன? அரபு, ஆசிய நாடுகளே அம்மக்களின் பாதுகாப்புக்கு கைகொடு, சர்வதேச ஊடகங்களே ரோகிங்க மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை உலகுக்கு முன் கொண்டு வா, ரோகிங்க மக்களின் சுதந்திர இருப்புக்கு மனித உரிமை அமைப்புகளே தொடர்ந்து குரல் கொடு என்பன போன்ற  பல்வேறு கோசங்கள் இந்த நிகழ்வில் எழுப்பப்பட்டது.

ஐக்கிய நாடுகள்  சபை, பிரித்தானிய பிரதம மந்திரி , மற்றும் மனித உரிமை அமைக்களுக்கு பங்கு கொண்ட மக்களின் சார்பில் கையளிக்கப்படவுள்ள மகஜரும் வாசித்தளிக்கப்பட்டது. ஜனநாயக அமைப்புகளும் , மனித உரிமைவாதிகளும்  ஒடுக்கப்படுகின்ற மக்களுக்காக குரல் எழுப்புகின்ற அமைப்பின் பிரதிநிதிகளும்  முடிவில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றினர். 




2 comments:

  1. இவர்களின் இஸ்லாமிய உணர்வையும் சகோதரத்துவ உணர்வையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்த்திகொல்வானாக, ஏற்றுகொல்வானாக.. ஆமின்

    ReplyDelete
  2. இவர்களின் இஸ்லாமிய உணர்வையும் சகோதரத்துவ உணர்வையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்த்திகொல்வானாக, ஏற்றுகொல்வானாக.. ஆமின்

    ReplyDelete

Powered by Blogger.