Header Ads



''மைத்திரியின் கூட்டத்தில் துப்பாக்கிதாரி'' நாமல் தெரிவித்த கருத்து போலியானது, பல்வேறு கோணங்களில் விசாரணை ஆரம்பம்

-எம்.ஐ. நிஷாம்தீன்-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்தில் துப்பாக்கியுடன் நடமாடிய இராணுவ கோப்ரல் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதுடன் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அங்குனுகொலபெலஸ்ஸ நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 25ஆம் திகதி சுதந்திரக்கட்சியின் மாநாடு அங்குனுகொலபெலஸ்ஸ நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தனிப்பட்ட பாதுகாப்பாளர் என்று கூறிக்கொண்டு இராணுவ கோப்ரல் ஒருவர் இந்நிகழ்வில் மண்டபத்தின் உள்ளே நுழைந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் இராணுவ கோப்ரலை பரிசோதனை செய்தனர். இதன்போது அவர் துப்பாக்கியுடன் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பேரில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.

இதனடிப்படையில், இராணுவ கமாண்டோ படையணியைச் சேர்ந்த சேனக்க குமார என்ற இராணுவ கோப்ரல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சேனக்க குமார அன்று இரவு அங்குனுகொலபெலஸ்ஸ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து நீதவானின் உத்தரவுக்கு அமைய எதிர்வரும் 12ஆம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு பணிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மெய்பாதுகாவலராக இராணுவ கோப்ரல் எவ்விதம் பணியாற்ற முடியும் என்பது தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினருக்கு இதில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இவர் தனது தனிப்பட்ட பாதுகாவலர் என்றும் அவரிடம் தண்ணீர் போத்தலே இருந்தது என்றும் அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து போலியானது என்பது தொடர்பிலும் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, அங்குகொலபெலஸ்ஸ கூட்டத்தில் சட்டவிரோதமாக நுழைந்தது மாத்திரமின்றி துப்பாக்கியை கையில் வைத்திருந்த போதும் அவரை கைது செய்யாமலும், விசாரணை நடத்தாமலும் அனுப்பியமைக்கு நாமல் எம்பியின் அழுத்தம் இருந்ததா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. நாமலையும் Nசுர்த்தே விளக்க மறியலில் போட்டிருக்க வேண்டாமா!
    அப்படியென்றால், தண்ணீருக்குள்ளால் நெருப்பைக் கொண்டு போவோரும் உள்ளனர். நெருப்பையே தண்ணிராக்கிக் கொண்டு போகிறவர் தான் இந்த நாமல். நாறுகிறது இந்தக் குடும்பத்தின் அத்துமீறல்கள். வாப்பா ஒரு கள்ளன், பெரியப்பா இன்னொரு கள்ளன், சாச்சா சிறைச்சாலையில் கம்பி எண்ணுகிறார். உம்மா விசாரனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளார், மீதி நானும் தம்பியுமா என்று எண்ணிக் கொண்டிருக்கும் நாமல்.
    மக்களின் பணத்தை அநியாயமாகச் சூறையாடி எதைச் சந்தித்தார்கள். இருந்த கௌரவத்தையும், மானம் மரியாதையையும் இழந்து விசாரணைகளும், தண்டனைகளும் தான் எஞ்சிய நிலை. பரிதாபம், பரிதாபம். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

    ReplyDelete

Powered by Blogger.