Header Ads



கிளிநொச்சியில் இப்படியும் நடைபெற்றது

-Au-

மணப்பெண்ணாக வந்தவரை காதலனுடன் அனுப்பி வைத்துள்ளார் ஒருவர். ஆலயமொன்றில் நடக்கவிருந்த திருமணம் நின்று, மணமகளை அவர் காதலித்த வாலிபனுடன் அனுப்பி வைத்த இந்த சம்பவம் கிளிநொச்சியிப்பகுதியில் சில தினங்களின் முன்னர் நடந்துள்ளது. ஹொலண்டிலிருந்து தமது மகனிற்கு கிளிநொச்சியிலுள்ள பெற்றோர் தீவிரமாக பெண் பார்த்துள்ளனர். அவர்களின் தீவிர தேடுதல் வேட்டையில் கிளிநொச்சிக்குள்ளேயே மணப்பெண் கிடைத்தார். இருவீட்டாரும் கதைத்துப்பேசி திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன.

இந்தப்பெண் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பணியிடத்தில் வாலிபர் ஒருவருடன் காதலில் விழுந்திருந்தார். எனினும் அதனை வீட்டில் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார். திருமணப்பேச்சு தீவிரம் பெற்றதும், திருமணம் வேண்டாம் என வீட்டில் அடம்பிடித்துப் பார்த்தார். எனினும்,அப்பொழுதும் காதல் விவகாரத்தை வீட்டில் சொல்ல அவருக்கு துணிவிருக்கவில்லை. விபரத்தை வீட்டில் சொல்லி, திருமண ஏற்பாட்டை நிறுத்துமாறு காதலன் வற்புறுத்தியிருக்கிறார். அவரிடம் சம்மதித்த யுவதி, வீட்டில் சொல்ல முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்திருக்கிறார்.

இந்த இழுபறியில் திருமண நாளும் வந்துவிட்டது. வீட்டில் விபரத்தை சொல்லி, திருமணத்தை நிறுத்துமாறு காதலன் தொலைபேசியில் வற்புறுத்தி வந்தபோதும், யுவதி செய்வதறியாமல் கடைசிநிமிடம் வரை இழுத்துக் கொண்டு சென்றிருக்கிறார். இதற்குள் மணப்பெண் அலங்காரமெல்லாம் முடிந்துவிட்டது. கிளிநொச்சியின் புறநகரிலுள்ள பிரபலமான சிவன் ஆலயமொன்றில் திருமணமும் நடக்கவிருந்தது.மாப்பிள்ளை தரப்பினர் ஆலயத்திற்கு சென்று சேர்ந்த சமயத்தில், யுவதியின் காதலன் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். தானே களமிறங்கி, சீதையை மீட்பதென அவர் கங்கணம் கட்டிவிட்டார்.

முதலில் மணப்பெண்ணின் தந்தையை தொலைபேசியில் அழைத்து விடயத்தை கூறியிருக்கிறார். யுவதியின் சம்மதமில்லாமல் திருமணம் செய்து வைக்க முயன்றால், அவர் விபரீதமான முடிவை எடுப்பார் என எச்சரித்துவிட்டு தொலைபேசியை துண்டித்து விட்டார்.இந்த தகவலால் வீட்டில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த சமயத்தில் காதலன் நேரடியாக ஆலயத்திற்கே சென்றார். அங்கு வெளிநாட்டு மாப்பிள்ளையை சந்தித்து விடயத்தை புரிய வைத்துள்ளார். சந்தேகமிருந்தால் தனது தொலைபேசியிலேயே யுவதியிடம் பேசிப்பாருங்கள் என, அந்த இடத்திலிருந்தே யுவதிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். யுவதியும் விடயத்தை சொல்லியுள்ளார். இதை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால் இவ்வளவு சிக்கல்களில்லையே என கடிந்த, நம்ம ஹொலண்ட் வாசி, மணக்கோலத்திலேயே காதலனது மோட்டார் சைக்கிளில் ஏறி, மணப்பெண் வீட்டிற்கு சென்றார்.

அங்கு மணப் பெண்ணின் தந்தையுடன் பேசி, யுவதியுடன் தனிமையில் கதைக்க அனுமதி பெற்றார். யுவதியுடன் பேசியபோது, அவர்கள் காதலிற்கு வாழ்த்து தெரிவித்து,இனியும் தாமதிக்காமல் காதலனை திருமணம் செய்து கொள்ள வற்யுறுத்தியுள்ளார். பின்னர் பெண்ணின் பெற்றோருடன் பேசியபோது, சிறிய சச்சரவு தோன்றியுள்ளது. மாப்பிள்ளையின் திட்டமிட்ட நாடகமிது என பெண்ணின் பெற்றோர் சர்ச்சையிலீடுபட்டதால் வீட்டில் குழப்பநிலையேற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் வீட்டிலிருந்து இரகசியமாக வெளியேறிய யுவதி, வெளியில் காத்திருந்த காதலனுடன் ஏறி சென்று விட்டார். தமது மகளை காணவில்லையென பெற்றோர் கிளிநொச்சி காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

1 comment:

Powered by Blogger.